மீண்டும் ஊரடங்கு அறிவிப்பா?

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

இந்தியாவில் கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2 நாட்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் வருவாய்த்துறை உள்பட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயம் ஆக்குவது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்தும், தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார். இதனால் தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் வரலாம் எனத் தெரிகிறது.

You might also like