பேச்சுச் சுதந்திரம் அனைவருக்கும் தான் இருக்கிறது. ஆனால் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை அவதூறு செய்கிற உரிமை யாருக்கு இருக்கிறது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுகிறவர்களுக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா?
அண்மையில் தொலைக்காட்சி நேரலை நிகழ்வில் பேசியவர் பா.ஜ.க.வின் தேசியச் செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் முகமது நபியைப் பற்றி அவதூறாகப் பேசியதும் சர்ச்சையானது.
அதைக் கண்டித்து உத்திரப் பிரதேசம் கான்பூரில் இஸ்லாமியர்கள் கடை அடைப்பு நடத்தித் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதையொட்டி அங்கு கலவரமும் நடந்து, பலர் படுகாயம் அடையும் அளவுக்குப் போனது.
அதன் பிறகே பா.ஜ.க.வில் உள்ள மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழு நூபுர் சர்மா மீது நடவடிக்கை எடுத்து அவரைத் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது.
இதே பிரச்சினை தொடர்பாக பா.ஜ.க. வின் டெல்லி ஊடகப் பிரிவுச் செயலாளரான நவீன் ஜிண்டால் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
”அனைத்து மதங்களையும் பா.ஜ.க மதிக்கிறது. எந்தவொரு மதத் தலைவரும் அவமதிக்கப்படுவதை பா.ஜ.க கடுமையாகக் கண்டிக்கிறது” என்றிருக்கிறார் பா.ஜ.க.வின் தேசியப் பொதுச் செயல்லாளரான அருண்சிங்.
இந்தியாவில் சிறுபான்மை மதத்தினருக்குப் பாதுகாப்பற்ற உணர்வு இருப்பதாகச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் பா.ஜ.க.வின் தகவல் தொடர்பு சார்ந்த முக்கியமானவர்களே மாற்று மதத் தலைவரைப் பற்றிய அவதூறைப் பொது வெளியில் பரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்த விதத்தில் பா.ஜ.க எடுத்திருக்கிற நடவடிக்கை இது மாதிரியான அவதூறை எழுப்ப முயல்கிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும்.
யாராக இருந்தாலும், நா காக்க நல்ல தொடக்கமாகவும் இருக்கும்.
– அகில் அரவிந்தன்