கி.ராவைக் கொந்தளிக்க வைத்த பள்ளி அனுபவம்!

– மணா

“என்னப்பா இது? படிக்கிற பள்ளிக்கூடத்திலே கண்ணுக்கு முன்னாடி நடத்தப்பட்ட கொலையைப் பத்தி எழுதியிருக்கே.. படிச்சதும் சும்மா இருக்க முடியலை..

உங்களுக்கு ஒரு கார்டு எழுதியிருக்கேன்.. நாளைக்கு வரும் பாருங்க.. ஆசிரியரா இருக்கிறவங்க இப்படியும் நடந்துப்பாங்களா? அந்த மாதிரி மனுஷனை எல்லாம் சும்மா விட்டு வைக்கலாமா? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை.. கேஸைப் போட்டு அவனை உள்ளே தள்ளுங்கப்பா”

– இப்படிப் போனில் அழைத்து என்னிடம் கொந்தளித்தவர் கரிசல் படைப்பாளி கி.ராஜநாராயணன் தான்.

நான் இணை ஆசிரியராகப் பணியாற்றிய ‘புதிய பார்வை’ இதழில் ‘பள்ளிப்பிராயம்’ என்ற தொடரை வெளியிட்டு வந்தோம்.

பல்வேறு எழுத்தாளர்கள் தங்களுடைய பள்ளி அனுபவங்களை அதில் எழுதியிருந்தார்கள். அந்தத் தொடரில் நானும் எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையில் பள்ளியில் எங்களுடைய கண்ணுக்கு முன்னால் ஒரு மாணவன் ஆசிரியர் ஒருவரிடம் அடி வாங்கி உயிரிழந்ததைப் பற்றி எழுதியிருந்தேன்.

ஆசிரியர்கள் சிலரின் வக்கிரம் வெளிப்பட்ட சில சம்பவங்களையும் எழுதியிருந்தேன்.
அதைப் படித்துவிட்டுத் தான் குமுறி போனில் பேசி, கடிதமும் எழுதியிருந்தார் கி.ரா.

பள்ளியில் மாணவ, மாணவிகள் அனுபவிக்கும் நெருக்கடிகளைப் பற்றிய சர்ச்சை அடிபட்டுக் கொண்டிருக்கும் போது, ‘புதிய பார்வை’ இதழில் நான் எழுதிய, கி.ரா.வைக் கொந்தளிக்க வைத்த அந்தக் கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு:
****

கொஞ்சம் பயம், மிரட்சி, அழுகைக்கான விளிம்பில் நிற்கிற முகத்தோடுதான் பலருக்குப் பள்ளிக்கூட நுழைவு சாத்திய பட்டிருக்கலாம்.
பள்ளிக்கூட நுழைவே இவ்வளவு தூரம் வித்தியாசமானதாக அமைந்தது ஏன் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

ஏழு குழந்தைகள் அடுத்தடுத்துக் கலகலத்த வீட்டிலிருந்து ஒரு வயதுக் குழந்தையாக, மதுரையிலிருந்த என்னை எடுத்துக் கொண்டுபோய் தேவதானப்பட்டியிலும், மட்டப்பாறை கிராமத்திலும் என்னை வளர்த்தார்கள் குழந்தை இல்லாத அத்தையும், போலீஸ் ஏட்டான மாமாவும்.

சோழவந்தானில் இருந்து 18 மைல் தூரத்தில் அந்தக் கிராமம். பிரம்மாண்டமான பாறை, அதைச் சுற்றிலும் சில நூற்றுக்கணக்கான வீடுகள். நாவல் மரங்களுக்கிடையில் ஓடும் ஆறு. பச்சை விரித்த வயல்கள்.

இதற்கிடையில் அத்தை காட்டிய அன்பைத் தாங்க முடியவில்லை. அணைப்புகளாலும், முகம் முழுக்கப் பரவும் முத்தங்களாலும் மனதில் நிரம்பி இருந்தார் அத்தை.
அவருக்கே உரித்தான பிரத்யேகமாக கர்ப்பப்பையின் கதகதப்புக்குள் என்னை அடைகாத்த மாதிரி அப்படி ஒரு கெட்டியான அன்பு.

சின்ன பிரிவுக்குக் கூட இளஞ்சூடாய் அத்தையின் கண்கள் நிறைந்து விடும். பள்ளியில் சேர்க்க ஊருக்கு வரச் சொல்லி அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தபோது, முகம் கசங்கிப் போனார் அத்தை.

பிடிவாதமாகப் போக மறுத்து அழுத என்னைப் பலவந்தப்படுத்த முடியவில்லை ரிட்டையர்டான ஏட்டு மாமாவால்.

அப்பாவின் சொல்லையும் மீற முடியாது. ஒரு காரியம் செய்தார்… அடம்பிடித்ததால் – தூங்குகிற நேரத்திலேயே அப்படியே நலுங்காமல் ஒரு கட்டிலில் தூக்கிப்போட்டு, மூன்று மைல் தொலைவில் இருக்கிற வாடிப்பட்டிக்குத் தூக்கிப்போய் அங்கிருந்து விடிகாலை ரயிலில் ஊருக்குப் போகத் தயார் பண்ணிவிட்டார்.

கருவேலம் செடிகள் நிறைந்த குறுக்குப் பாதையில் ஒரு கயிற்றுக் கட்டிலில் என்னை ஊரில் இருந்த பொன்ராசும், இன்னொருவரும் தூக்கிக்கொண்டு வர, மாமா முன்னால் நடந்திருக்கிறார் வாடிப்பட்டி வரை. அப்புறம் இறங்கினால் மதுரை. அடுத்த நாள் அங்குள்ள பள்ளியில் சேர்த்தாயிற்று.

தோராயமாகத் தைக்கப்பட்ட காக்கி, வெள்ளை நிறச்சீருடையுடன் நுழைந்த என்னைப் போன்றவர்களிடமிருந்த கலங்கலான மனநிலை உடனடியாகத் தெளியாமல் பார்த்துக் கொண்டார்கள் ஆசிரியர்கள்.

வீட்டிலும் ஆசிரியருக்கு இன்னொரு அதிகார நகலாய்த் தெரிந்தார் அப்பா. அத்தையிடம் இருந்து தனித்துக் கிடைத்த அன்புக்கு நேர் எதிர் வீட்டில்.

அம்மாவுக்கு அன்பு இருந்தும் – அது கூறு வைக்கப்பட்ட அன்பாய் இருந்தது. கிராமத்திலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு வந்த நான், வீட்டிலும், பள்ளியிலும் ஒட்டவே சிறிது காலமானது.

இடையில் பெரிய சட்டியில் விரால் மீன் குழம்பை வைத்து ஊரிலிருந்து எடுத்துவந்து – தன் கைப்படப் பரிமாறி, அதை நான் சாப்பிடுகிற வேளையில் அத்தை முகத்தில் பரவுகிற பரவசம் தனி.

சாக்பீஸ் எழுத்துகள் எனக்குள் பரவ ஆரம்பித்திருந்தன. ஆசிரியைகளின் குரல்கள் தனி அடையாளங்களுடன் பதிவாகியிருந்தன.

கையில் கருவாட்டுக் குழம்பு வாசனையுடன் அடிக்கடி வரும் நன்னப்பா முகம்மது நண்பனாக இருந்தான். நகரத்தில் நட்ட நாற்றாக இருந்தாலும், முளைக்க ஆரம்பித்திருந்தேன்.

அதற்குள் தூரத்தில் வீடுமாறி இருந்தோம். செருப்பில்லாத கால்களோடு, மதியவெயில் பொசுங்க, நானும், நண்பன் கணேஷ்வேலும் பரபரத்து வீட்டுக்கு ஓடி வந்து சாப்பிட்டு விட்டுப் போவோம்.

அப்போது பள்ளியின் வெள்ளி விழா. அதற்கென்று கலைநிகழ்ச்சி. என்னையும் சேர்த்திருந்தார்கள். ரிகர்சலின் போது வகுப்பில் இறுக்கம் காட்டிய ஆசிரியை, அப்போது பிரபலமான நடிகையைப் போல இடுப்பை நெளித்து ஆடியதை மாறுதலாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

கூடப் படித்த ஜமீலா தான் கலைநிகழ்ச்சியில் இந்தியத் தாய். கையில் தேசியக் கொடியுடன் ரொம்பவும் ஒடிசலாக இருந்த இந்தியத் தாய் “குழந்தைகளே வாருங்கள்” என்று ஒப்பிக்கும் குரலில் அழைத்ததும், சுற்றி நிற்கும் நாங்கள் போய், இந்தியத் தாயின் கரங்களில் இருக்கும் பூந்தியை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு நகர்ந்துவிட வேண்டும். இவ்வளவுதான் காட்சி.

ரிகர்சலின் போது பூந்தியுடன் இருந்த இந்தியத் தாய் நிகழ்ச்சி மேடையில் நடந்த போது – பற்றாக் குறையாகி கையில் மிளகாய்த் தூள் அப்பிய மாங்காய்த் துண்டுகளுடன் நின்றிருந்தார்.

ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக் சிவப்புடன் ஓடிவந்த நாங்கள் சற்று ஏமாற்றத்துடன் இந்தியத் தாய் கையில் இருந்த மாங்காய்த் துண்டுகளைத் தின்ன வேண்டியதாயிற்று.
நிகழ்ச்சி முடிந்ததும் வினோதமானபடி ரோஸ் பவுடருடன் இருந்த என்னை சைக்கிள் ரிக்சாவில் அழைத்துப் போனார் அப்பா.

பள்ளிகளில் வெளியூருக்கு அழைத்துப் போவது தனி அனுபவம். நான்காவது வகுப்பு படிக்கும்போது ராமேஸ்வரத்திற்கு அழைத்துப் போய் இருந்தார்கள்.
கடலை பல மாணவர்கள் அப்போதுதான் முதலில் பார்த்தோம். கடலோரத்தில் ஒரு சத்திரம். அங்குதான் மதியச் சாப்பாடு.

எதிரே அப்போது தான் வாங்கி வந்த மீனை நறுக்கி, ஒரு சட்டியில் பொறித்துக் கொண்டிருந்தார்கள். கடல் அலையை மீறிப் பரவி மூக்கில் நுழைந்துப் பலருடைய நாக்குகளைப் பரபரக்க வைத்துக் கொண்டிருந்தது பொறித்த மீனின் வாசனை.

“திடீரென்று 50 காசு கொடுக்கிறவர்களுக்கு மட்டும் இரண்டு மீன் துண்டுகள்” என்று டிராயிங் மாஸ்டர் அறிவிக்க, காசு கொடுத்த மாணவர்கள் ஒரு பந்தியில் .
காசு கொடுக்க வழியில்லாத நாங்கள் எதிர் பந்தியில்.

காசு கொடுத்த மாணவர்கள் மரக்கலரில் மொறுமொறுவென்று வெந்திருந்த மீனைப் பிய்த்துச் சாப்பிட்ட போது – அதன் மசாலா நெடியை, கட்டாயமாக்கப்பட்ட சைவத்தை ஏக்கத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தோம்.

மணலில் அடுத்து உட்கார்ந்திருந்த முத்துப்பாண்டிக்கு எச்சில் ஊறி விட்டது.
என் காலைச் சுரண்டி வெதும்பிச் சொன்னான். “பார்றா அம்பது காசு கொடுக்க முடியலை. போயும் போயும் இந்த மாதிரி வீட்டிலே வந்து பிறந்ததற்குப் பதில் வேற பணக்கார வீட்டில் பிறந்திருக்கலாம்டா…”

ஏழாவது வகுப்புப் படிக்கிறபோது, எப்போதும் பளிச்சென்று வேட்டியுடன் வந்து, குமரி மாவட்டத் தமிழைப் பேசும் ஆசிரியர் சண்முகப் பாண்டியன், கிராஃப்ட் வகுப்பில் யாராவது கிசுகிசுத்தாலும் அருகில் சத்தம் போட்டபடி வந்து, நீளமான கை நகத்தின் அரைவட்டத்தைக் காதில் ரத்தம் கசியப் பதித்துவிட்டுப் போய்விடுகிற ஆசிரியரான ஹென்றி என்று சில ஆசிரியர்கள் பழக்கமான நேரத்தில் தான் – அந்த முரட்டு அறிமுகம்.

எட்டாவது வகுப்பில் – பள்ளி துவங்கியதும் ஒரு வாரத்திற்குப் பிறகு வந்தார் வரலாற்று விஞ்ஞான ஆசிரியரான பாலு சார்.

மீசை இல்லாத முகத்தில் தென்படும் மென்மைக்கு எதிரான கடுமையும், கடுகடுப்பு அவருடைய முகத்தில் தெரியும். வகுப்புக்கு வந்த இரண்டாவது நாளே வகுப்பில் இருந்த பலருக்கும் அவரைப் பிடிக்காமல் போயிற்று.

சாதாரணமாக நடந்து கொண்டிருந்த வகுப்பை அதிர வைத்தார் பாலு சார்.
டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றிய பாடம்.

அப்போதுதான் பாடம் நடத்தத் துவங்கியவர், குரங்கிலிருந்து மனிதன் பிறந்ததைச் சொல்லிக் கொண்டு வந்தவர், அப்படியே பாடத்தை நிறுத்திவிட்டு, மௌனமாக வகுப்பறையில் முன்னும் பின்னுமாக நடந்து – மாணவர்களின் முகங்களைப் பார்த்தபடியே போனார்.

அவரது மேலேறிய மூக்கையும், காதில் வளர்ந்திருந்த அடர்ந்த முடிகளையும் கவனித்தபடி இருந்தபோது தான், அந்தக் கேள்வியைக் கேட்டார்.

“ஒரு நாளைக்கு எத்தனை முறை உங்க முகத்தைக் கண்ணாடியிலே பார்ப்பீங்க?”
ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொன்னார்கள். கும்பலான பதிலால் எரிச்சலடைந்த அவருடைய முகம் மாறியது. கட்டம் போட்ட அவருடைய சட்டையின் கீழ் நுனியைப் பிடித்தபடி கேட்டார்.

“தினமும் ரெண்டு தடவையாவது பார்ப்பீங்கள்ளே…”
பொதுவாக எல்லோரும் தலையாட்டினோம்.

“சொல்லுங்க… மறைக்காம நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லணும். உங்களில் யாரு கண்ணாடியைப் பார்க்கிறப்போ – ஒரு குரங்கு முகத்தைப் போல நம்மோடு முகம் இருக்குங்கிறதை உணர்ந்திருக்கீங்க. உங்களில் யார் முகம் குரங்கு முகத்தோட சாயலில் இருக்கு..?.”

– பேச்சில் தொனித்த வேகம் வகுப்பறையைச் சப்தங்கள் இல்லாமல் ஆக்கியிருந்தது.
அந்த நிமிடங்கள் சித்திரவதைக்குரியாதாக இருந்தன.

“நான் கவனமாப் பார்த்துட்டேன் சிலரோட முகத்தை. அவங்களாகவே எந்திரிச்சு நின்னா நல்லது.”

வகுப்பில் கனமான மௌனம்.

“எந்திரிக்கலைன்னா விடமாட்டேன். தானா எந்திரிச்சிடுங்க…”
ஆட்டு மந்தைகள் மாதிரிப் பரஸ்பரம் முகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான், மூன்றாவது வரிசையில் ஓரத்தில் உட்கார்ந்திருந்த கங்காதரன் கூச்சத்துடன் எழுந்து நின்றான். வகுப்பே அவனை உற்றுப் பார்த்த நிலையில் முகம் கசங்கிய நிலையில் அழுதான்.

மெல்லிசாகக் கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது அவனுடைய முகத்தில்.
“ஒருத்தன் தானா..?.”

கேட்டுக்கொண்டிருந்த பாலு சாரை அனைவரும் வெறுப்புடனும், பயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மாணவர்கள் பலரும் பார்க்க – வாய் சற்றுக் கோணியபடி – கங்காதரனின் அழுகை கூடி, தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எல்லோரும் அவன் முகத்தைப் பாருங்க… இப்படித்தான் சில மூஞ்சிங்க குரங்குக்கு ரொம்ப நெருக்கமாக இருக்கும். அதிலே இருந்து தான் மனுஷ இனம் உருவாயிருக்கு.. நீ உட்காரு…”

டெஸ்கில் குனிந்தபடி கங்காதரன் தலைசாய்த்து மூக்குறிஞ்சும் சத்தம் கேட்டபோது, பள்ளி மணி அடித்தது. பலரும் போய் கங்காதரனைத் தேற்றினோம்.
பாலு சார் அன்றைக்கு வகுப்பறையை விட்டு வெளியேறிய போது பலரும் பெருமூச்சுவிட்டோம். அப்போதிருந்து நாங்கள் அவருக்கு வைத்த பட்டப் பெயர் ‘டார்வின்’.

வகுப்பில் மாணவர்கள் அடிவாங்குவது ஒன்றும் புதிது கிடையாது. ஒருமுறை டிராயிங் வகுப்பு. படம் வரைந்து கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மாதவனின் டிராயிங் நோட்டிலிருந்த வினோதமான கோடுகள் எழுப்பியிருந்த தோற்றத்தைப் பார்த்து நான் சிரித்ததும், மஞ்சள் ஸ்கேலால் அவர் விரலில் அடித்த அடியால் சற்று நேரத்தில் கை வீங்கிய அனுபவமும் எனக்குக் வாய்த்திருக்கிறது.

எவ்வளவோ இதமாகப் பேசும் சண்முகப் பாண்டியனைப் போன்ற ஆசிரியர்களின் வகுப்பை எல்லாம் நாங்கள் விரும்பிய மாதிரி, ஏன் டார்வின் சாரின் வகுப்பு அமையவில்லை?

வரவர இறுக்கமான உணர்வை கூட்டிக் கொண்டிருந்தன அவருடைய வகுப்புகள். அவர் நுழைந்ததுமே சில மாணவர்களுக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது.

உலகம் உருவான விதம் பற்றிய வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, அப்போது நகரில் ஓடிக்கொண்டிருந்த ‘ஏ’ சர்டிபிகேட் படத்தைக் குறிப்பிட்டு “அதைப் பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டார்.

பதில் இல்லை.

“சரி, எவனாவது அந்த மாதிரிப் போஸ்டரில் சாணி அடிச்சிருக்கீங்களா?”
மறுபடியும் உறுத்துகிற மௌனம்.

“எவனாவது எரிஞ்சிருப்பீங்க. சாணியை எடுத்து போஸ்டரில் எரியறப்போ… அது போஸ்டரில் எப்படி விழுது? வட்டமாக விழுது இல்லையா? அது மாதிரி தான் உலகம் உருண்டையான விதமும்”

– பாலு சார் சொல்லிக் கொண்டிருந்தபோது, மெதுவான சிரிப்புச் சத்தம் கேட்டது.
நான்காவது பென்சில் இருந்த சண்முகராஜனின் குரல்தான் அது. அதற்குள் மோப்பம் பிடித்து விட்டார் டார்வின்.

“எவன்டா அது?”

கடுமையாக இருந்தது அவருடைய குரல்.

ஒல்லியான உடம்புடன் இருக்கும் சண்முகராஜன் தயங்கி எழுந்ததும், முன்னால் வரச்சொன்னார்.

“என்னடா… சிரிப்பு வேண்டியிருக்கு?”

அவனுடைய கையை நீட்டச் சொன்னார். பயத்துடன் கைகளை நீட்டினான். அவர் வைத்திருந்த பிரம்பிலிருந்து அடிகள் சுள்ளென்று விழுந்தன.

“வேணாம் சார்… விட்டுருங்க சார்… மன்னிச்சுக்குங்க சார்…”
அவன் கதறக் கதற அடிகள் கனமாக விழுந்தன.

ஒருகட்டத்தில் அவன் தடுத்தபோது- அவனுடைய கை பிரம்பின் மீது பட்டதும், டார்வினுக்குக் கோபம் கூடி முகமே மாறி விட்டது.

“இங்கே வாடா”

தலைமுடியெல்லாம் குலைந்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்தான் சண்முகராஜன்.
தளர்ந்திருந்த காக்கி கால் டிரவுசரை மேல் இழுத்து விட்டான். மூக்கை உறிஞ்சிக் கொண்டான். லேசான நடுக்கம் அவனுடைய உடலில்.

“டேய்… உக்கி போடுடா… நான் சொல்ற வரைக்கும், ‘இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்’ சொல்லிக்கொண்டே உக்கி போடணும்.”

“சார்… எனக்கு ஏற்கனவே ஹார்ட்லே பிராப்ளம் இருக்கு சார்…” கெஞ்சியபடி சொன்ன போதும், டார்வினின் குரலில் மாற்றமில்லை.

“இதெல்லாம் சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்… உம்.. போடு. போட ஆரம்பி…”

கை விரல் நுனியால் குறுக்கே காதுகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போட ஆரம்பித்த சண்முகராஜனின் முகமே அழுத மாதிரி இருந்தது

“இனிமே செய்ய மாட்டேன்.”

“இனி மாட்டேன்…”

“மாட்டேன்…”

சொன்னபடி, உக்கி போடப்போட அவனுடைய கைகளில் கூடுதலான நடுக்கம் கூடியிருந்தது.

வகுப்பில் இருந்த மாணவர்களின் முகங்களில் கலவரம் அதிகரித்திருந்தது. பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.

“சார்… வேணாம்… என்னவோ செய்யுது. முடியலை சார்…” சொல்லும்போது அவனுடைய குரலில் இருந்த நெகிழ்வு எங்களில் சிலரைக் கண்ணில் நீர் திரையிட வைத்துவிட்டது.

“நிறுத்தாதேடா… நான் சொல்ற வரைக்கும் போடு… கெஞ்சி நாடகம் காட்டாதே…”
– மேஜையின் மீது கையை ஊன்றி இருந்தார் டார்வின்.

“ம்மா…” என்று முனகியபடியே தோப்புக் காரணங்கள் தொடர்ந்தன. ஓரிரு முறை பல்லைக் கடித்தான்.

முகம் இறுகியது. காதைப் பிடித்துக் கொண்டிருந்த விரலை எடுத்துவிட்டு முனகியபடி சட்டென்று கீழே விழுந்தான்.

எங்களுக்கு பயம் கூடிவிட்டது.

கீழே விழுந்து கிடந்தவனைப் பார்க்க பின்வரிசையில் இருந்த நாங்கள் எழுந்தபோது கை அமர்த்தினார் டார்வின்.

“நெஞ்சு வலிக்குது… தாங்க முடியலை…”
– அழுத சண்முகராஜனைப் பார்த்து மாணவர்கள் சிலரும் அழுதார்கள். டார்வினுக்கு எதிராகச் சத்தம் போட்டார்கள்.

தலைமை ஆசிரியர் அறைக்கு ஓடினோம்.

அவர் வந்து பார்த்த பிறகு மருத்துவமனைக்கு அவனை எடுத்துச் சென்றார்கள். தலைமை ஆசிரியரின் அறையில் பதுங்கி விட்டார் டார்வின்.

பள்ளிக்கு அதோடு விடுமுறை விடப்பட்டது.

வகுப்பில் இருந்த மாணவர்கள் பலரும் அந்தத் தனியார் மருத்துவமனைக்குப் பதற்றம் மேலிடக் கூட்டமாக ஓடினோம்.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சில நிமிடங்களில் சண்முகராஜனின் உயிர் பிரிந்துவிட்டது.

முன்னிரண்டு பற்கள் வெளியே தெரிந்த நிலையில் வாய் லேசாய்த் திறந்தபடி, அப்போதுதான் உயிர் நீங்கி இருந்த யூனிபார்ம் அணிந்த அவனுடைய உடலைத் தொட்டுக் கதறினார்கள் மாணவர்கள்.

பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு போகப்பட்டது அவனுடைய உடல்.
அதற்குள் மாலைச் செய்தித்தாள்களில் சண்முகராஜனின் மரணச் செய்தி வெளியாகியிருந்தது.

டார்வின் கைதாகி இருந்தார்.

மறுநாள் காலை அவனுடைய உடல் அடக்கத்திற்கு கருப்புக்கொடி அணிந்து ஏராளமான மாணவர்கள் போயிருந்தோம்.

சண்முகராஜனின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டபோது தலையில் அடித்துக் கொண்டு அழுதான் என்னுடன் படித்த கமலநாதன். பள்ளிக்கு எதிராக கோஷம் போட்டார்கள் சில மாணவர்கள்.

கண்ணுக்கு முன்னால் நடந்த மரணம், பலருடைய சுபாவங்களின் சமச்சீர்வை ஊதிக் கலைத்திருந்தது.

வழக்கமாக வகுப்பறையில் உரத்த குரலில் பேசும் தியோப்லஸ் அன்றைக்கு சத்தமில்லாமல் நடந்து வந்தான். அதுவரை அதிர்ந்து பேசாத சிலரின் குரலோ, வழக்கத்தை மீறி அன்றைக்கு உயர்ந்திருந்தது.

அதற்குள் டார்வின் நடத்தி வந்த ரேடியோ மெக்கானிக் கடையைப் பற்றிய தகவல் வர, மாணவர்கள் திரண்டு அங்கு போனோம்.

குறுகிய சந்தில் இருந்தது அவருடைய கடை. கதவு அடைக்கப்பட்டிருந்தது. கைகளால் கதவைப் பலமாகத் தட்டினார்கள் மாணவர்கள்.

டார்வினுக்கு எதிராகக் கத்தினார்கள். கடையில் இருந்த போர்டு உடைக்கப்பட்டது.
கடையின் முன்னால் இருந்த கூரையில் மெலிந்த சாக்பீஸ் மாதிரியான டியூப்லைட். மாணவர்கள் பக்கத்தில் இருந்த கற்களை எடுத்துச் சரமாரியாக கடையை நோக்கி வீசிக் கொண்டிருந்த போது, அந்த டியூப்லைட்டை நோக்கி நானும் கல்லை வீசி எறிந்தேன்.

ட்யூப் லைட்டின் நடுவே பட்டு லேசான சத்தத்துடன் உடைந்து சிதறிய போது மாணவர்களின் ஆரவாரம் கூடியது.

லைட் துகளாகி உடைந்த அந்தக் கணத்தில் டார்வின் மீது அடர்ந்திருந்த ஏதோ ஒரு உணர்வு, குமிழியிட்டுச் சற்று அடங்கியது போலிருந்தது.

மரணத்தின் நெடியடிக்கும் அந்த நாள் மட்டும், பள்ளிப் பிராயத்தில் இருந்து தன்னைத் துண்டித்த நிலையில் உயிர் நசுங்கும் வலியோடு படபடக்கிறது இன்னும்.

You might also like