ஊரை விட்டு ஒதுங்கியிருந்த அந்த களத்துமேட்டில் அமாவாசை இருட்டில் அரிகன் விளக்கு அல்லது லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் ஓரத்தில் கட்டிலில் கருப்பு ஜமுக்காளத்தை போர்த்திக்கிட்டு படுத்திருந்தபோது வயது பத்து.
அப்ப இந்த சிகப்புக்கோடு போட்ட கருப்பு ஜமுக்காளம் வீட்டுக்கு வீடு இருக்கும்.
இப்ப அதெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல. அப்படி ஒரு ஜமுக்காளம் இருந்த மாதிரியே தெரியல.
அறுபது வரகு மூட்டைக்கு மேல் களத்தில் கிடக்க இராப்பொழுது களத்துல கெடந்து நாளைக்கு அள்ளுனா அதுவாட்டுக்க கெடக்கும்னு ஒரு தாத்தா சொல்லிட்டு போக.
அந்த இருட்டில் களத்தில் காவல் இருக்கும் பொழுது என்னை ஆள் மாற்றிவிட சங்கரன் வந்து விடுவான் என்று சொல்லிவிட்டு சாய்ந்தரம் சீல்த்தூர் போன அப்பாவையும் காணோம். சங்கரனையும் காணோம்.
மணி இரவு பத்து. வெகு தூரத்தில் ஒரு தெரு விளக்கு கம்பத்தில் குண்டு பல்பு தூங்கி வழிந்து கொண்டிருந்தது. இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரே அமைதியாகிவிடும்.
அடுத்து நாய்களின் குரைப்புச் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் அதிகாலை வரை. டி.வி இல்லாத காலம். ரேடியோவே அதிசயம் எனும் காலமது.
வண்டுகளின் ரீங்காரச் சத்தம், எங்கோ தொலைவில் குரைத்தும் ஊளையிட்டும் நாய்கள். தூரத்து கூடார மரத்திலிருந்து ஆந்தையின்அலறல்.
சரி, இருட்டில் இவையெல்லாம் என்னை தன்னைப்போல பாட வைத்தது. மனதுக்கு தைரிய மூட்டிக்கொள்ள பயத்தை மறைத்துக் கொள்ள ஒரு சிறு முயற்சி அந்தப்பாட்டு.
பாட்டு பலமா இருக்கே மாப்பிள்ளைன்னு அந்த வழியில் தற்செயலாய் வந்த வீருசாமி மாமா வந்து கட்டிலில் உக்கார்ந்தார். மூக்குப் பொடியை ஒரு இழுவை இழுத்து விட்டு அப்பா இன்னும் வரலையான்னு கேட்க.
அதைத் தொடர்ந்து சங்கரன் வரலையாடா தம்பின்னு அப்பாவின் குரல் கேட்ட மாத்திரத்தில் கொஞ்சம் பயத்துல இருந்து விடுதலை. எங்க போய் தொலைஞ்சான் அவன். சரி நான் வீட்டு வரைக்கும் போய்ட்டு ஓடி வந்துடுறேன் என்று சொன்ன அப்பா.
கெளம்புன அப்பாவோடவே கெளம்பி போன வீருசாமி மாமா. மீண்டும் தொத்திக் கொண்ட இருட்டு பயம்.
மீண்டும் பாட வைத்தது. கொஞ்சம் நேரம் கழித்து வந்த அப்பா சங்கரன் மாமியா இறந்து போச்சுன்னு ஊருக்கு போய்ட்டானாம். அதான் வரலை.
அப்பா சொன்னது கூட காதில் வந்து சேராமல் அப்பாவோட கட்டிலிலியே அயர்ந்து தூங்கிவிட்டேன்.
இதுவே ஒரு சாதனையாய் மறுநாள் பசங்களோடு பகிர்ந்து கொள்ளும் போது ஒரு சந்தோஷம். சக பசங்களுக்கும் அந்த செயல் அளித்த இனம்புரியா சந்தோஷம்.
இதெல்லாம் சம்சாரி வீட்டு பிள்ளைகளுக்கு சாதரணமப்பா.
ஒவ்வொன்னையும் எதிர்கொண்டு எதிர்கொண்டு அனுபவிச்சோம்.
நன்றி: நாச்சியார்பட்டி எஸ்.தனசேகரன்.