எது எனக்கான திரைக்கதை? – பாரதிராஜா விளக்கம்!

கேள்வி: நீங்கள் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் பெரும்பாலான திரைக்கதைகள் வசனங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற நிலையில் இருந்தன.

நீங்கள் காட்சிபூர்வமான வடிவத்திற்கும், நகர்விற்கும் முக்கியத்துவம் கொடுத்து – இடைப்பட்ட மௌனத்திற்கும் மதிப்புக் கொடுத்த திரைக்கதையை முதல் படத்திலேயே அமைத்திருந்தீர்கள்.

அந்த விதமான திரைக்கதையை உருவாக்குவதற்கான அடிப்படை எங்கிருந்து உருவானது?

இயக்குநர் பாரதிராஜா: நான் எந்த இலக்கணத்தையும் படிக்கவில்லை. ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கும்போது, அது ஒரு புதிய வடிவத்தைப் பெறுகிறது.

ஓவியனுக்கு அது வெளிப்படும் விதம் வேறு. பாடகனின் வடிவம் வேறு. உள்ளே போன விஷயம் புதுப்புது பரிமாணத்தில் வெளியே வரலாம்.

ஒரு சின்ன நாக்கசைவு, உதட்டசைவில் எவ்வளவு அர்த்தங்களை உருவாக்க முடிகிறது?
அது மாதிரி பாரதிராஜா திரைக்கதை பற்றிப் படித்தவன் அல்ல. ஆனால் ஒரு விஷயத்தைக் காட்சிபூர்வமாக எப்படிச் சொல்வது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

எனக்குள் தோன்றுகிற கற்பனைக்கு வடிவம் கொடுக்கிறபோது, அது வித்தியாசமான திரைக்கதை ஆகிறது. நாடகத்தனமாக இல்லாமல், நான் அமைதியாக உணர்ந்ததைச் சத்தமில்லாமல் வெளியே சொல்கிறேன்.

அது தான் திரைக்கதை.
‘பதினாறு வயதினிலே’ படத்தில் ஒரு காட்சி.
மயிலு சப்பாணியிடம் கேட்பாள்.
“எப்படி அறைஞ்சே?”
“சப்புன்னு அறைஞ்சிட்டேன்”
“எப்படி அறைஞ்சே ?” – மறுபடியும் கேட்பாள்.
“பளார்ன்னு அறைஞ்சிட்டேன் “

திரும்பவும் “எப்படி அறைஞ்சே?” என்று அழுத்தமாகக் கேட்கும் போது, அவள் கன்னத்தில் வேகமாக அறைந்துவிட்டுப் பதற்றப்பட ஆரம்பித்துவிடுவான் சப்பாணி.

அவளுடைய கண்ணில் ‘நீ அற்புதமானவன்’ என்கிற மாதிரியான பார்வை. அந்தப் பார்வையைக் கவனித்ததும் இவனிடம் வெட்கம் கலந்த சிரிப்பு.

இருவரது முகங்களின் மாற்றத்தை மாறி மாறிக் காட்சியாகக் காட்டியிருப்பேன்.
இதையே வேறு மாதிரி மயில் பாத்திரத்தை வசனம் பேச விட்டருக்கலாம். நான் அப்படி விடவில்லை. அந்தப் பார்வையின் மௌனமும், சிரிப்பும் தான் அந்தக் காட்சிக்குப் பலம்.

‘முதல் மரியாதை’ படத்தில் மணல் வெளியில் காதலியைத் தேடி வருகிறான் இளம் காதலன். அவளுடைய பெருவிரல் துண்டிக்கப்பட்டு அந்த உடல் கிடக்கிறது. பார்த்த அதிர்ச்சியில் ‘செவிலீ…’ என்று குரல் கொடுப்பான். கையிலிருந்த புல்லாங்குழலைத் தூக்கி எறிவான்.

அந்தப் புல்லாங்குழல் கீழறங்குகிற காட்சி. பின்னால் இளையராஜாவின் அருமையான இசை.

ஜனங்கள் ஓடி வருகிறார்கள். ஓடி வரும் கால்கள். பறந்து கீழிறங்கும் புல்லாங்குழல். அந்தக் காட்சியை நிரப்பும் இசை என்று அடுத்தடுத்த ‘ஷாட்’ களில் முழு அழுத்தமும் கிடைத்துவிடுகிறது.

பல காட்சிகளைத் தையல் போட்டு இணைத்த மாதிரி இருக்கும் இதைத் தான் நான் திரைக்கதை என்று சொல்வேன்.”

– மணாவின் ‘ஆளுமைகள், சந்திப்புகள், உரையாடல்கள், நேர்காணல்கள்’ தொகுப்பிலிருந்து ஒரு பகுதி.

You might also like