புரட்சிக் குரலை எழுப்பிய புத்தர்!

இந்திய வரலாற்றில் தனிப்பட்ட ஆளுமையாக முதன்முதலில் வெளிப்படுபவர் புத்தர்.
புத்தரின் காலம் எது என்பதில் முரண்பாடுகள் இருந்தாலும் புத்தர் என்கிற சீர்திருத்தவாதி பூமியில் நடமாடி பிராமணியத்தின் மீதான தாக்குதலை முன்னெடுத்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அவர் எழுந்த காலம் உலகம் முழுக்கப் புதுச் சிந்தனைகள் பிராவகம் எடுத்த காலம்.
சாக்ரடீஸ் தன்னுடைய உரையாடல்களைக் கிரேக்கத்திலும், கன்பூசியஸ் சீனத்தில் தன்னுடைய சமூக் தத்துவங்களாலும், பாலஸ்தீனத்தில் பழைய ஏற்பாடு எழுத்து வடிவம் பெறுவதும் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் பிராமணியத்தைப் புத்தர் எதிர்கொண்டார்.

ஆரியர்கள் எனப்படும் சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பிந்தைய கால மொழிக் குடும்பத்தில் சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர் புத்தர்.

புத்தர் பல்வேறு சடங்குகள், பலி கொடுத்தல்கள் ஆகியவற்றின் மூலம் வைதீக மதத்தைப் பிராமணர்கள் கட்டுப்படுத்துவதைப் பார்த்தார்.

அதற்கு எதிரான புரட்சிக் குரலை எழுப்பினார். பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டை அவர் நிராகரித்தார். அற ரீதியான சமத்துவத்தை முன்னிறுத்திய அவர் ஓரளவுக்குச் சமூக ரீதியான சமத்துவத்தையும் முன்மொழிந்தார்.

தன்னுடைய சங்கத்தில் எல்லாச் சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதித்தார். ஆணாதிக்கப் போக்கு ஓரளவுக்குப் புத்தரிடமும் பெண்களை முதலில் சங்கத்தில் அனுமதிக்க மறுத்ததில் தெரிகிறது.

சமத்துவத்தையும், எல்லா மனிதர்களும் வேறுபாடுகள் அற்று மற்றவர்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெறும் வாய்ச்சொல்லாக நில்லாமல், அதுவரை மேல்தட்டு மக்களின் மொழியான வடமொழியில் வழங்கப்பட்டு வந்த மதக் கருத்துக்களில் இருந்து மாறுபட்டு தன்னுடைய கருத்துக்களை மக்களின் மொழியில் வழங்கி மொழிச் சமத்துவத்தைச் சாதித்துக் காட்டினார்.

மகாபாரதம், ராமாயணம், மனுஸ்ம்ருதி ஆகியவை புத்தரின் கருத்துக்களை, அவற்றுக்கு மறுப்புகளை உள்ளடக்கி புத்த மதத்தை எதிர்கொள்ள முயன்றன என்கிறார்கள் அறிஞர்கள்.

இந்தியா முழுக்கக் கிடைக்கும் கல்வெட்டுகள், செப்பேடுகள் அசோகரின் காலத்தில் இருந்து ஆயிரம் வருடகாலம் புத்த மதம் இந்து மதத்துக்கு இணையான செல்வாக்கோடு இருந்ததைப் புலப்படுத்துகிறது.

புத்த மதம் ஏன் இந்தியாவில் இருந்து அழிந்தது என்பது முழுக்க விடுவிக்கப்படாத புதிராகவே இருக்கிறது.

பல நூறு வருடங்கள் கழித்து அம்பேத்கரால் புத்த மதம் மீண்டும் மறு உயிர்ப்புப் பெற்றது.

கடுமையான சமத்துவமின்மை, அடக்குமுறை ஆகியவற்றைக் கொண்ட ஜாதிய இந்து மதத்தை அம்பேத்கர் நிராகரித்துப் பல லட்சம் மக்களோடு புத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்.

புத்தருக்கு ஒரு நவீன முகத்தை அண்ணல் அம்பேத்கர் தந்தார். தான் ஏன் புத்த மதத்தில் சேர்கிறேன் என்று அவர் காரணம் சொன்னார்:

“என்னுடைய மனிதநேயத்தின் வளர்சிக்குத் தடையாக இருக்கும் இந்து மதத்தை நான் துறக்கிறேன். மனிதர்களைக் கேவலமானவர்களாக, இழிவானவர்களாகக் கருதும் அம்மதத்தை விட்டு நீங்குகிறேன்…

நான் எல்லா மனிதர்களையும் சமமானவர்களாகக் கருதுகிறேன். இந்த கணம் முதல் நான் புத்தரின் போதனைகளின் அடிப்படையில் நடப்பேன் என்று உறுதி ஏற்கிறேன்.”

கனகனஹள்ளி என்கிற கர்நாடகத்தில் உள்ள ஊரில் அசோகரின் புத்த மதக் கருத்துக்களைச் சொல்லும் கல்வெட்டுக் காணப்படுகிறது.

அதனை உடைப்பது இப்பொழுதும் நிகழ்கிறது. அதன் பகுதிகள் உடைக்கப்பட்டு இந்து கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தர் பிராமணியத்துக்கு இன்னமும் உறுத்தலாக உள்ளார் என்பதனை அது நினைவுபடுத்துகிறது.

புத்தர் என்றால் விழித்தெழச் செய்பவர் என்று பொருள். ‘நான் ஜாதியற்றவன், நான் சமமானவன்’ எனக் கருதும் பல லட்சம் ஒடுக்கப்பட்ட மக்களினை விழித்தெழச் செய்யும் நவீன முகமாகப் புத்தர் இருந்தார். இருப்பார்!

(கண்களை மூடி தவக்கோலம் பூண்டவராகவே புத்தர் பல்வேறு ஓவியங்களில் காணப்படுவார். அண்ணல் அம்பேத்கர் தீட்டிய ஓவியத்தில் புத்தர் விழிகள் திறந்து விழிப்புணர்வு நாட அழைக்கிறார்)

மூலம்: சுனில் கில்னானி
நன்றி : தமிழில் பூ.கொ.சரவணன்

You might also like