பிட்காயின் மோசடிக் கும்பலிடம் ஏமாற வேண்டாம்!

– டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னையில் பணிபுரியும் காவல்துறையினர் டிஜிட்டல் முறையிலான கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் திட்டத்தில் முதலீடு செய்து, 1.20 கோடி ரூபாயை இழந்தனர்.

இதனால், கடன் தொல்லை அதிகரித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல, காவல் துறையில் பணிபுரியும் ஏராளமான காவல்துறையினர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த மோசடி கும்பல் குறித்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள ‘வீடியோ’ பதிவில்,

“மர்ம நபர்கள், சமூகவலைதளத்தில் ‘டிஜிட்டல்’ முறையில் மேற்கொள்ளப்படும் பணமில்லா பணம் பரிவர்த்தனை என்ற அடிப்படையில் கிரிட்டோ கரன்சி, பிட்காயின் என்ற திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

இதில், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதை உண்மை என்று நம்பி முதலீடு செய்பவர்களுக்கு, முதல் மூன்று மாதங்களுக்கு அதிகமாக வட்டித் தொகை தருவதுபோல நடித்து, பின் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி விடுகின்றனர்.

இந்த பணம் அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறது. அதன்பின், பணத்தை மீட்பது பெரும் கஷ்டம், சர்வதேச காவல்துறையினரின் உதவியை நாட வேண்டி உள்ளது.

அவர்களாலும், மோசடி கும்பலை பிடிக்க முடியாத நிலை உள்ளது. பேராசை காரணமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவல் துறையினரே, மோசடி நபர்களின் மாயவலையில் சிக்கி கோடிகளை இழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

வங்கிகளை விடவும் பாதுகாப்பானது வேறு ஒன்றும் இல்லை. முதலீடுக்கு அதிக வட்டி தருவதாக கூறிய எந்த நிறுவனமும் சரியாக செயல்பட்டது இல்லை.

இதனால், கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மோசடி கும்பலிடம் சிக்கி, பணத்தை பறிகொடுத்துவிட வேண்டாம். பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

You might also like