தையல் தொழிலில் தெரிந்து கொள்ள வேண்டியவை!

1] இந்த தொழிலில் முக்கியமானது குறித்த நேரத்தில் ஆடைகளை டெலிவரி செய்வது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினால் உங்களிடம் போதுமான ஆட்கள் இருக்க வேண்டும்.

அப்போது தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் ஆடைகளை வடிவமைத்து கொடுக்க முடியும்.

2] தையல் தொழில் தெரிந்தவர்களை உங்கள் நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் ஆடர்கள் அதிகம் வரும்போது உதவியாகவும் குறித்த நேரத்திற்கு கொடுக்க முடியும்.

3] தையலுக்கு தேவையான துணி வகைகள், நூல்வகைகள் மெஷினுக்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் கடைகள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

4]தற்காலத்திற்கேற்ப மாறிவரும் ஆடை வடிவமைப்புகள் தெரிந்துகொள்வது அவசியமாகும். அப்போது தான் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

வேற என்ன செய்யலாம்?

மாஸ்க்

இந்த கொரோனா காலத்தில் இதன் தேவை அதிகரித்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் நம் வாழ்வில் முகக் கவசம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

வீட்டில் இருந்து கொண்டு நேரம் கிடைக்கும் போது தைக்கலாம். அதை தயாரிப்பது மிகவும் சுலபம் அருகில் இருக்கும் கடைகளுக்கு, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அவர்களின் ஆடையின் கலருக்கு முகக்கவசம் தயார் செய்து கொடுத்து வருமானம் பெற முடியும்.

ஆடை சீரமைப்பு [ஆல்ட்ரேஷன்]

ரெடிமேட் ஆடைகள் வாங்குவோர் பலருக்கு சட்டை, பேண்ட் சுடிதார், பிளவுஸ் போன்ற ஆடைகள் சரியான அளவு பொருந்துவதாக இல்லை. பல தையல் கடைகளில் புதிதாக தைத்துக் கொடுப்பார்கள். ஆனால், ஆல்ட்ரேஷன் செய்து கொடுப்பது இல்லை.

அப்படி இருக்கும் போது அவர்களுக்கு ஏற்றது போல் வாங்கிய ரெடிமேட் ஆடைகள் ஆல்டரேசன் செய்து அவர்களது உடல் அளவுகளுக்கு கேற்ப துணியை மாற்றம் செய்து கொடுத்தும் வருமானம் பெற முடியும்.

எம்பிராய்டரி

பெண்களின் ஆடைகளில் இதற்கென்று தனி இடம் உண்டு. சாதாரண பிளவுஸ் கூட எம்பிராய்டரி போட்டால் அதிக லுக்காவும், பார்க்க அழகாகவும் தெரியும். தைத்த பிளவுஸ் சுடிதாரிலும் சின்னச் சின்ன ஒர்க் போட்டுக் கொடுத்து வருமானம் பெற முடியும்.

அதற்கு முறையாக எம்பிராய்டரி பயிற்சி கற்றுக் கொண்டு துணிகளுக்கு போட்டுக் கொடுத்தாலும் வருமானம் கிடைக்கும்.

உங்களுக்கு தையல் அடிப்படை தான் தெரியும் என்றால், அருகில் இருக்கும் டெய்லரிங் கடைக்குச் சென்று பிளவுஸ் எம்மிங், ஹூக்கு கட்டுதல், பட்டன் வைத்தல் போன்ற வேலைகளை வாங்கிச் செய்யலாம். இதனாலும் வருமானம் கிடைக்கும்.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.. என்றார் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை.

அது இந்தத் தொழிலுக்கு 100% வீதம் ஒத்துப்போகும்.

ஆம், ’இப்போதும், எப்போதும் அழியாது தொழில் என்றால் இந்த தையல் தொழிலைக் கூறலாம்.

இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. வருமானமும் அதிகம் கிடைப்பதால் பல இல்லதரசிகளின் தேர்வாகவும் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது தையல் கலை. இந்த தொழிலுக்கு பெரிதாக படிக்கவேண்டும் என்று இல்லை.

கற்பனைத் திறன், சாதிக்கத் துடிக்கும் எண்ணம் மட்டும் போதும் நீங்களும் சாதித்துக் காட்டலாம்.

-யாழினி சோமு

You might also like