இன்றைக்கு ராஜபக்சே மற்றும் அவர்கள் சகோதரகள் வீடுகள் தீக்கிரையாகும்போது அருமை சகோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வல்வெட்டித்துறை வீடு நினைவுக்கு வருகிறது.
இந்த வீட்டை முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பிறகு இரண்டு முறை பார்வையிட்டேன். அன்றைக்கு வெளிப்பட்ட வேதனை இன்றைக்கு அதனுடைய தன்வினை தன்னைச் சுடுகிறது என்ற செய்தி மெய்யாகிறது.
போர் முடிவுக்கு வந்தபோது வல்வெட்டித்துறை வீடு உடைக்கப்பட்டதாகவும், பின் சிங்கள மக்கள் உட்பட நிறையப் பேர், நம் நாட்டில் வாழ்ந்த தன்னிகரற்ற ஒரு வீரன் வாழ்ந்த வீடு என அந்த வீட்டின் மண்ணை எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர் என்றும் சொல்லப்பட்டது.
இதை அனுமானித்த இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் எனப் பயந்து தலைவரின் வீட்டையே இல்லாமல் செய்து விட்டதாகச் சொன்னார்கள்.
வரலாறு, திருப்பி அடிக்கும். பிறகு மொத்தமாய் அழிக்கும்.
ராஜபக்சேவின் பூர்வீக வீடு 120 ஆண்டுகள் பழையதாம். பிறந்தது, வளர்ந்தது, அரசியலுக்கு வந்தது, பிரதமரானது, அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தது, போர் முடிவுகளை தீர்மானித்தது எல்லாம் இங்குதானாம்.
நேற்று மக்கள் எடுத்த தீர்மானத்தில் தீயில் அழிந்தது.
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும்…!
நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்குதோ…..
பிரபாகரன் வீடு வல்வெட்டித்துறையில் தரைமட்டமான அவர் பிறந்த இல்லம், அவர் சிறுபிராயம் மற்றும் இளமைக்காலத்தில் உட்கார்ந்து பேசிய மரத்தடியில் எடுத்த புகைப்படங்கள்.
இந்த இடத்திற்கு பல வரலாறுகள் உண்டு. இம்மரத்திற்கு கீழிருந்து பிரபாகரன் பலரிடம் பேசி, போராளிகளாக மாற்றிய வீரவரலாறு உண்டு. இங்கே இன்றைக்கு சிறு வட்ட வடிவ மேடை அமைத்துள்ளார்கள்.
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே!
பட்டினத்தார் வரிக்கு இப்பதான் சரியான காட்சி அமைந்திருக்கு..
புரட்சி தோற்றுப்போகலாம், வீழ்ந்து போகாது.
சர்வாதிகாரிகள் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.!
அது முசோலினியோ, ஹிட்லரோ, ராஜபக்சேவோ.!
மக்களிடம் அறியாமை இருக்கும் வரையில் அல்லது வாழ்வாதாரம் பாதிக்காத வரையில் பிரச்சினை இல்லை.!
‘சிங்களர்களே, உங்களுக்காக தமிழர்களைக் கொன்றேன் என்றான்’ – மகிழ்ந்தார்கள்.!
‘சிங்களர்களே, உங்களுக்காக இசுலாமியர்களைக் கொன்றேன் என்றான்’ – மகிழ்ந்தார்கள்.!
கடைசியில் சிங்களர்களையே பட்டினியால் கொல்லும்போதுதான், அய்யோ ராஜபக்சே ஒட்டுமொத்த இலங்கையையும் அழிக்கப் போகிறான் என்பது அவர்களுக்கு புரிந்தது.!
நன்றி: வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன்