அமெரிக்காவில் தமிழ் விக்கி தொடக்கம்!

தமிழில் புதிய இணைய கலைக்களஞ்சியம்:

மே 7 ஆம் தேதியன்று காலையில் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக் களஞ்சியத்தின் தொடக்கவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகன் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், தமிழ் இணையவெளியில் தமிழ் விக்கி என்ற தகவல் தொழில்நுட்ப குழந்தை பிறந்துவிட்டது.

அனைத்து தகவல்களையும் தொகுத்து ஒரே இடத்தில் வழங்கும் முயற்சி உலகம் முழுவதும் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் நடந்துகொண்டே இருக்கின்றன.

பெரும் அக்கறையும், தேவையும் நிலவும் தமிழ்ச் சூழலில் இதுபோன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியன. ஏற்கெனவே தமிழர்களிடம் பயன்பாட்டில் உள்ள ‘தமிழ் விக்கிப்பீடியா’வுக்கு மாற்றான களஞ்சியமாக ‘தமிழ் விக்கி’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

கெளதம சித்தார்த்தன்

இதுதொடர்பாக அருஞ்சொல் இணைய இதழுக்குப் பத்திரிகையாளர் சமஸுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘தமிழ் விக்கி’ பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் அளித்துள்ளார்.

“தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை அவர்கள் வெவ்வேறு பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளிலிருந்தே அவர்களுடைய கட்டுரைகளை எழுதிப் பிரசுரிக்கிறார்கள்.

நாங்கள் எங்களுடைய கலைக்களஞ்சியத்தில் கூடுமானவரை மூலநூல்களிலிருந்து தகவல்களை எடுக்கிறோம். உரிய உசாத்துணைகளுடன் அதைக் கொடுக்கிறோம். நேரடிக் கட்டுரைகளுக்கும் கூடுதல் கவனம் கொடுக்கிறோம்” என்கிறார் ஜெயமோகன்.

எதிர் விமர்சனங்கள் பற்றிப் பேசியுள்ள அவர், “இன்றைக்குக் கூச்சலிடுபவர்கள் இன்னும் ஓராண்டில் எங்களுடைய இணையக் கலைக்களஞ்சியத்தின் செய்திகளையே விக்கிப்பீடியாவில் எடுத்துப் போட்டுக்கொள்பவர்களாக இருப்பார்கள் அல்லது அவற்றைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்” என்று கணிக்கிறார்.

தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்து ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில் எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன்,

“2000 ஆண்டு தமிழ் மொழி மரபின் நீட்சியில் மாபெரும் மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கிறீர்கள்.

அரசு, பெரும் நிறுவனங்கள், தமிழைச் சொல்லி வாழ்ந்துகொண்டிருக்கும் அமைப்புகள் என எவரொருவரும் செய்யாத பிரம்மாண்டமான செயல்பாட்டைச் செய்திருக்கிறீர்கள்.

தமிழ் மொழியின் மகுடத்தில் ஒரு மாணிக்கக் கல்லைச் சூட்டியிருக்கிறீர்கள்.

நவீன டிஜிட்டல் உலகின் அடுத்த பரிமாணம் இணையம் சார்ந்த செயல்பாடுகள்தான் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு, எல்லையற்ற கலை உணர்வுகள் கொண்ட நவீன கலைஞனாக உணர்த்தியிருக்கிறீர்கள்.

தமிழ் மொழி உள்ள வரைக்கும் இந்த “தமிழ் விக்கி” யும் உங்கள் பெயரும் அழியாது. அழிக்கமுடியாது” என்று நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

எழுத்தாளர் சரவணன் சந்திரன், பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள குறிப்பில், ” தமிழின் மிக முக்கியமான ஆவண முயற்சி இது. நம்மைப் பற்றியும் நான்கு வரிகள் அங்கே இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தராதா?

உயரிய நோக்கம் ஒன்றிற்காக எண்ணற்ற இளைஞர்கள் இக்கலைக் களஞ்சியத்திற்காக உழைத்திருக்கிறார்கள். அந்த இளைஞர் கூட்டம் எல்லோரையும் உற்றுக் கவனித்தபடிதான் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

சரவணன் சந்திரன்

அந்த இளைஞர்கள் கூட்டமாய் ஒன்றிணைந்து ஒரு மிகப் பெரிய கல்யாணத்தைத் தடபுடலாக நடத்துகின்றனர்.

மொய் வைக்கத் தேவையில்லை. ஒரு எட்டுப் போய் பூ தூவி விட்டு வரலாம். ஒருவகையில் அது, தமிழின் முக்கியமான பாய்ச்சல் ஒன்றிற்குப் பூ தூவுவதைப் போலத்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இணையக் கலைக்களஞ்சியங்கள் புதிது புதிதாக உருவாவது தமிழ் மற்றும் தமிழர்களை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும்.

பா. மகிழ்மதி

You might also like