பத்திரிகைப் பணி என்பது எனது ஆன்மா!

கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன். தொடக்கக் காலங்களில் சிறுகதைகள் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமாகி பிறகு குமுதம், இந்து தமிழ் திசை உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்தியாளராகப் பணியாற்றியவர்.

பத்திரிகைப் பணி பற்றி அவர் முகநூல் பக்கத்தில் மனந்திறந்து எழுதியிருக்கிறார். அதில் பத்திரிகைப் பணி என்பது வருமானத்திற்கான பணியல்ல, ஆன்மாவிற்கானது என்று எழுதியிருக்கிறார். மேலும், ஊடக உலகின் கால மாற்றத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

தாய் வாசகர்களுக்காக இதோ அந்த பதிவு:

சம்பளம் என்கிற விஷயத்திற்காக பத்திரிகைப் பணியை ஒரு தொழிலாக கருதவில்லை என நானிட்ட ஒரு வரி பதிவிற்கு நட்புகள் நானே எதிர்பாராத வண்ணம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

ஒரு சிலரோ அதன் ஆழ் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் பதிவிடுகிறார்கள்.
எந்த ஒரு பதிவையும் அனுபவத்தில் உணராமல் – வெறுமனே புத்தகம் படித்த அறிவை மட்டும் வைத்து நான் பதிவுகள் போடுவதில்லை என்பது என்னை தொடர்ந்து வாசிக்கும் நட்புகள் அறிவார்கள்.

அப்படி அல்லாதவர்களிடமிருந்துதான் இப்படியான புரிதலற்ற பதிவுகள் புறப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை 1981 – முதல் 1997 – வரை பட்டறை தினக் கூலியாக 17 ஆண்டுகள் பணி புரிந்தவன். எட்டு மணி நேர வேலைக்கு ரூ 4 /-ல் ஆரம்பித்து ரூ 75/- வரை பெற்றிருக்கிறேன்.

எட்டு மணி நேர வேலைக்கு மேல் பணி செய்தால் அதை OT என்போம். அதற்கு ஒரு நாள் கூலி தவிர டிபன் காசு தனியாகத் தருவார்கள்.

இந்த வேலையில் ஒரு ஷிப்ட்டுக்கு இத்தனை பீஸ் உற்பத்தி என்ற கணக்கு Job Card உண்டு. 8 மணிநேரம் முடிந்தால் கை கழுவி விட்டு பறந்து விடலாம். அந்த நேரம் எப்போ ஆகும் என பார்த்துக் கொண்டிருப்பது எங்களைப் போன்ற கூலிகளின் வழக்கம்.

இதே பணியை Contract – பீஸ் ரேட் அடிப்படையிலும் பார்த்துள்ளேன். முதல்நாள் 8 மணிக்கு வேலைக்கு சென்றால் அடுத்த நாள் காலை 8 மணி வரை 24 மணிநேரமும் (சாப்பாட்டு நேரம் மட்டும் இடைவெளி) அயராது பாடுபட்டு விட்டு, சைக்கிளில் 5 கிமீ வந்து குளித்து விட்டு, திரும்ப பணிக்குப் போய் இரவு 8 மணி வரை வேலை செய்துவிட்டு 9 மணிக்கு கண்ணயர்ந்த அனுபவம் உண்டு.

அதாவது 48 மணி நேரத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே தூக்கம். இப்படி எல்லாம் பாடுபட்டதை என்னால் வேலை – பிழைப்பு – ஊதியத்திற்காக என்றுதான் சொல்ல முடியும்.

ஆனால் எழுத்துப் பணி அப்படியல்ல. ஒரு நாள் வேலையை விட்டு வீட்டுக்கு வந்து அமர்ந்தால் மாலையில் ஒரு வரக்காப்பி குடிச்சுட்டு, pad, paper எடுத்து வைத்து எழுதுவேன் பாருங்க. எழுதிகிட்டே இருப்பேன்.

அதில் எத்தனை அடித்தல். எத்தனை கிழித்தல். ஒரு கதை எழுத எத்தனை நாள். அக்கதை எத்தனை பத்திரிகைகளுக்கு போகும். எத்தனை பத்திரிகைகள் திருப்பி அனுப்பும். எத்தனை ரூபா கவர் செலவு. பேப்பர் செலவு. பேனா பென்சில் செலவு. உடல் உழைப்பு செலவு தெரியாது.

அப்படி சென்ற கதை அச்சில் வந்தால் கல்கி ரூ.75/- காசோலை அனுப்பும். விகடன் ரூ150/- மணியார்டர் அனுப்பும். தாய் இதழிலிருந்து ரூ50/- செக் வரும்.

இந்த காசோலை வங்கியில் செலுத்தினால் ஒரு வாரம், 15 நாள் ஆகும் கலெக்ஷன் ஆக. அதிலும் ரூ 10 கமிஷன் போய்விடும். செக் ரிட்டர்ன் ஆனால் நம்ம A/C -ல் ரூ.10 – ரூ.20/- பறி போய் விடும்.

விகடனில் ஒரு கதை தேர்வு பெற ஒரு வருடம் கூட ஆகும். தேர்வு பெற்ற கடிதம் வந்த பிறகு பிரசுரிக்க சில சமயம் மாதக் கணக்கில் எடுத்துக் கொள்வர். கல்கி 15 – 20 நாளில் பிரசுரித்து விடும். அல்லது திருப்பி அனுப்பி விடும்.

இந்த மாதம் பிரசுரமானால் அடுத்த மாதம் காசோலை வரும். இது தான் அன்று தமிழ் பத்திரிகைகள் அனைத்திலும் இருந்த நியதி.

அப்படியானால் இந்த பத்திரிகைக்கு கதை எழுதுவதை ஊதியத்திற்காக பணிபுரியும் வேலையாகக் கருத முடியுமா? கருதினால் என்ன ஆகும்?

அன்றைக்கு குமுதம், விகடன், கல்கி இன்ன பிற பத்திரிகைகள் Branded Label தாங்கி பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றதென்றால் – இன்றைக்கும் நிற்கிறதென்றால் இப்படியான அந்தக் கால எழுத்தாளர்களின் – வாசகர்களின் நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், மஜ்ஜை, நாளம் எல்லாம் அடங்கியிருப்பதும் முக்கிய காரணம்.

அப்படியான பத்திரிகையிலேயே ஒரு எழுத்தாளனாகப்பட்ட கூலிக்காரனுக்கு பணி வாய்ப்பு கிடைக்கிறதென்றால் அதை ஒரு கூலித் தொழிலாக, ஊதியம் பெறும் தொழிலாக மட்டும் பார்ப்பானா? பார்க்க முடியுமா? சம்பளம் ஓர் அங்கம். அவ்வளவே.

அதையும் தாண்டி ஏதோ ஒரு ரசவாதம் அங்கே ஒளிந்து கிடக்கிறது. கல்கி ரூ 500/- மாதாந்திர சன்மானம் கொடுத்த போதும் இரவு பகல் பாராமல் செய்தி எடுக்க ஓடினேன். எழுதிக் கொண்டே இருந்தேன்.

குமுதத்தில் ரூ 5000/- மாதச்சம்பளம் அளித்த போதும் ஓட்டமாய் ஓடினேன். இரவு பகல் தெரியாது. இரவு 12.00 மணிக்கு சேலம் பஸ் ஏறுவேன். 4 மணிக்கு சேலத்திலிருந்து தர்மபுரி பேருந்தில் பயணிப்பேன். இரவு 12 மணிக்கு வீடு திரும்புவேன்.

கைகளில் 3 செய்திக் கட்டுரைகளுக்கான புகைப்படங்கள், தகவல், பேட்டிகள் நிறைந்து கிடக்கும். அதை அடுத்த நாள் எழுதி, புகைப்படங்கள் பிரிண்ட் போட்டு கூரியர் செய்வேன்.

இதற்கெல்லாம் OT-யும் கிடையாது. டிபன் காசும் கிடையாது. வெளியூர் சென்றால் பஸ் டிக்கெட், உணவுக்கான பில் செலவு தருவார்கள். பிறகு எதற்கு அந்த ஓட்டம். வேலையை தக்க வைத்துக் கொள்ளவா? அது ஒரு பங்குதான்.

அதையும் தாண்டி உள்ளூர கனன்று கிடக்கும் எழுத்து ஆர்வம். நம் எழுத்தின் மூலம் சில ஏழை எளியவரின் வாழ்வுக்கு ஒளி கிடைக்கிறதே என்ற உத்வேகம். எல்லாவற்றையும் விட நம் எழுத்தை இத்தனை லட்சம் பேர் வாசிக்கிறார்களே என்ற பேரானந்தம்.

இந்த இடத்தில் இதை ஒரு சம்பளம் வாங்கும் தொழில் என்று கருதியிருந்தேன் என்றால் (நான் ரூ 5000/- சம்பளம் வாங்கும்போது என்னை விட வயதில் அனுபவத்தில் குறைந்தவர்கள் ரூ.40,000/- ரூ.60,000 வாங்கியதை கண்டுள்ளேன்.

நான் மாதம் ரூ.40,000/-வாங்கும் போது பலர் ரூ1 லட்சம் முதல் ரூ 5 இலட்சம் வாங்குவதையும் பார்த்துள்ளேன்.

அதற்காக பொறாமைப்பட்டது கிடையாது. ஆனால் சுயமரியாதைக்கு இழுக்கு என்றால் முதலாளியானாலும், ஆசிரியரேயானாலும் என் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தி உள்ளேன்.

அதற்காகவே ஒற்றை வரியில் ராஜினாமா கடிதம் எழுதித் தந்த அனுபவங்களை விரித்தால் இரண்டு நாவல்களே ஆகும். (அதை அது சம்பந்தப்பட்டவர்கள் நன்கு அறிவர்) ஒரு பக்கம் கூட எழுதியிருக்க முடியாது. இந்த ஓட்டம் ஓடியிருக்கவும் முடியாது.

நண்பர்களே…

இன்றைக்கு, 8 வருடங்கள் முன்பு நான் பணிபுரிந்த பத்திரிகைகள் ஒன்றரை இலட்சம் முதல் 6 இலட்சம் வரை print order பார்த்துள்ளேன். ஒரு பத்திரிகைக்கு 6 இலட்சம் முதல் 60 இலட்சம் வரை வாசகர்கள் குவிந்திருந்தார்கள்.

நான் எழுதிய செய்தியை நான் அச்சில் பார்க்கும் முன்பே 10-20 பேர் போன் செய்து விடுவார்கள். அமைச்சர்கள் முதல் சாமான்யர்கள் வரை ஷொட்டோ, கொட்டோ கிடைத்துக் கொண்டே இருக்கும்.

ஆனால் கடந்த ஆறேழு ஆண்டுகளாகப் பார்க்கிறேன். நான் எழுதிய செய்தியை அச்சில் நானே பார்த்து சம்பந்தப்பட்ட செய்தியின் பேட்டியாளருக்கு சொன்னால்தான் அவரே, ‘ வாங்கிப் பார்க்கிறேன் சார்’ என்கிறார்.

இந்த நிலையில் எழுத்தின் ஓட்டம் எங்கிருந்து வரும். அதை விட கொடுமை அச்சில் வராத – பணம் செலுத்தி உள் நுழையும் டிஜிட்டல் பத்திரிகைகளின் நிலமை.

ஒரு தமிழ் திரைப்படத்தில் விவேக் வரும் காட்சியில் ஆட்களே வராத ஒரு கடையில் ஒருவன் டீ ஆற்றிக்கொண்டேயிருப்பான். அப்படி யாருமே இல்லாத கடையில் எத்தனை காலம் தான் டீ ஆற்ற முடியும்?

திருமண வைபவங்கள், இதர நிகழ்ச்சிகளில் காணும் நண்பர்கள் ‘உங்களை – உங்கள் எழுத்தை முகநூலில் பார்த்தேன். படித்தேன். அதை நல்லா எழுதியிருந்தீங்க. நான் வாட்ஸ் அப் ஷேர் செய்தேன்’ என்கிறார்கள். இதை என்ன என்பது?

You tube ஆனாலும், நான் எழுதிய பத்திரிகை செய்தி, கதை ஆனாலும் முகநூல், வாட்ஸ் அப்பில் பகிர்ந்தால்தான் சில பேராவது பார்க்கிறார்கள் என்றால் இதை என்னதான் செய்வது?

ஆகவேதான் நான் பத்திரிகை பணியை தொழிலாகப் பார்க்கவில்லை என்று எழுதினேன்.

எப்போது அது ஓர் அறப்பணி / ஆன்மப்பணி என்பதை விடுத்து தொழிலாகப் பார்க்க ஆரம்பித்தோமோ, அதன் விளைவுதான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு தொழிலை இன்னொரு தொழில் அமுக்கி வெளித்தோன்றும். தர்ம, ஆன்ம, உள்ள சுத்தியான பணி அப்படியல்ல. எப்போதும் சுடர் ஆடாமல் ஒளி பாய்ச்சி நிற்கும்.

இனியாவது என் பதிவை புரிந்தும் – புரியாத நண்பர்கள் என் கருத்துக்களை ஆன்ம சுத்தியோடு புரிந்து கொண்டு கருத்திடுவார்கள் என நம்புகிறேன்.

இவ்வளவு விளக்கமாக எழுதியும் புரியாது பதிவிடுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. தூங்குகிற மாதிரி நடிக்கிறவர்களை நம்மால் எழுப்ப முடியாதுதானே?

தொகுப்பு – பா.மகிழ்மதி

You might also like