திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இரண்டாவது ஆண்டில் தி.மு.க. ஆட்சி அடியெடுத்து வைப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார்.

அதன் பிறகு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை வீட்டு வாசலில் மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின் சென்றிருந்தார். வீட்டுக்குள் சென்றதும் அங்கும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். அப்போது குடும்ப உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதியின் நினைவிடத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாடலில் பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

இன்று ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவு செய்வதையொட்டி சட்டசபை வடிவத்தில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

முதல்வராய் ஓராண்டு, முதன்மையாய் நூறாண்டு காப்போம் என்ற வாசகமும் அலங்காரத்தில் இடம் பெற்றிருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய போது டி.ஆர்.பாலு எம்.பி., துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.

You might also like