சிந்து சமவெளியை மறக்கச் செய்கிறதா அக்கா குருவி?

லக சினிமா என்றால் வாழ்வின் துயரங்களையும் அபத்தங்களையும் காட்சிப்படுத்துவதுதானே என்று நிந்திக்க நினைப்பவர்களையும் விவரிக்க இயலா கவிதைத் தனத்தால் ஈர்க்கும் சில ‘பீல்குட்’ திரைப்படங்கள் உண்டு.

அந்த வரிசையில் மிக முக்கியமானது ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் இயக்கிய ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’.

அந்த திரைப்படத்தை தமிழ் மண்ணுக்கேற்ப தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சாமி. அவரது நல்லெண்ணம் ஈடேறியதா, ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ தந்த அதே உணர்வை இப்படமும் ஏற்படுத்தியதா?

இக்கேள்விகளுக்குப் பதிலாக, கண்டிப்பாக அதைவிட பன்மடங்கு அதிகமான தரம் இதில் காணக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாவதே ‘அக்காகுருவி’யின் பலம். அதற்குக் காரணம் இசைஞானி இளையராஜாவின் இசை.

அந்த நம்பிக்கை படம் பார்த்து முடிந்தபின் என்னவாகிறது என்பதே இங்கு விமர்சனமாக மலர்ந்திருக்கிறது.

காணாமல் போன காலணிகள்!

பூம்பாறை எனும் மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குடும்பம். நோயில் விழுந்த தாய், உழைத்துக் களைத்த தந்தை, இவர்களது கஷ்டங்களைப் புரிந்துகொண்ட மகன் தேவ முருகன், மகள் சாரதா.

ஒருநாள் பள்ளி விட்டுத் திரும்பும் சாரதாவின் ஷு பிய்ந்துவிட, அதைத் தைத்து எடுத்துவரும் வழியில் தவறவிடுகிறார் தேவா.

அதைத் தந்தையிடம் சொல்லாமல் மறைக்கும் இருவரும், ஷு இல்லாமல் பள்ளிக்கு எப்படிச் செல்கின்றனர், அந்த பிரச்சனைக்கு எப்படித் தீர்வு காண்கின்றனர் என்பதே படத்தின் கதை.

காணாமல் போன காலணிகளை ஈடு செய்ய ஒரு சிறுவனின் மனது என்னவெல்லாம் யோசிக்கும் என்பதே கதையின் மையம்.

’சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தில் இருக்கும் பல காட்சிகள் அப்படியே இருந்தாலும், ’அக்காகுருவி’யில் அதனைச் சுற்றியே இதர பாத்திரங்களும் கதைப்போக்கும் சுற்றிச் சுழலவில்லை.

இதுவே இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணியிருக்கிறது.

விழலுக்கு இறைத்த நீர்!

முதன்மை பாத்திரங்களில் நடித்த சிறுவன் மஹீன், சிறுமி தாவியா இருவருமே காட்சிகளின் தன்மையைச் சிதைக்காமல் வந்து போயிருக்கின்றனர். முக்கியமாக, குளோசப் காட்சிகளில் இருவரது முகத்திலும் செயற்கைத்தனம் எட்டிப் பார்க்கவில்லை.

இவர்களது பெற்றோராக நடித்த வி.எஸ்.குமார் மற்றும் தாரா ஜகதாம்பி இருவரும் இயல்பாகத் தோன்றி அக்கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கின்றனர்.

இதர பாத்திரங்களில் நடித்த பலர் புதுமுகங்கள் என்பதை திரையில் பார்த்தவுடன் தெரிந்துகொள்ள முடிகிறது. புதுமுகங்கள் ஹரீஷ்-மீனாட்சியின் காதல் கதையும் கூட ரசிக்கத்தக்க வகையில் காட்சியாக்கப்பட்டிருக்கிறது.

1997இல் நடப்பதாக கூறப்படும் கதையை இன்றைய சூழலுடன் பொருத்தும் வகையில் கதிர், வர்ஷா பொல்லம்மா கவுரவ தோற்றத்தில் வந்து போயிருப்பது அருமை. அவர்களது குரல்கள் ஆங்காங்கே திரைக்கதையைத் தொடர்புபடுத்தும் கண்ணியாக ஒலிக்கின்றன.

உத்பல் நாயனாரின் ஒளிப்பதிவு மலைப்பிரதேச அழகை குளுமையுடன் காட்டுகிறது. அதேநேரத்தில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கதையில் கதாபாத்திரங்களின் குளோசப்கள் அதிகம் காட்டப்படாமல் தவிர்த்திருப்பது கண்டிப்பாக ஒரு குறைதான்.

திரைக்கதையின் தொடக்கத்தில் மவுனத்திற்கு இடம் தராமல் வெகு நெருக்கமாக காட்சிகளை அடுக்கியிருக்கிறது மணிகண்டன் சிவகுமாரின் படத்தொகுப்பு.

வழக்கமாக, காட்சிகளில் நிறைந்திருக்கும் கவிதைத் தனத்தை பார்வையாளர்கள் உணர இது போன்ற மவுனமான காட்சித்துண்டுகள் வகை செய்யும் என்பதை மறக்கக்கூடாது.

சிறுவர் சிறுமியரின் பெற்றோர்க்கு இடையிலான காதலும் கூட லேசாகச் சொல்லப்பட்டு, அதன்பிறகு திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனைத் திட்டமிட்டவர்கள் தனியாக ஒரு இளம் ஜோடியின் காதல் விளையாட்டுக்கு இடம் தந்திருப்பது ஏனோ?

படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி, களத்தை இயல்புள்ளதாகத் திரையில் காட்டியிருக்கிறது வீரசமரின் படத்தொகுப்பு.

அத்தனையும் தாண்டி இளையராஜாவின் பாடல் வரிகளும் இசையும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால், அப்படியொரு கலைஞரை இடம்பெறச் செய்ததற்கு இப்படைப்பு நியாயம் சேர்த்திருக்கிறதா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ ‘அக்காகுருவி’ இடையிலான வித்தியாசம் இதனை விழலுக்கு இறைத்த நீராக உணர வைக்கிறது.

காணாமல் போனவை!

மூலப்படத்தின் ஈரானிய கலாசாரத்தில் இருந்து வேறுபடுத்த ’அக்காகுருவி’யில் கொடைக்கானல் பகுதியிலிருக்கும் குழந்தை வேலப்பன் கோயிலையும் அவ்வட்டார வாழ்க்கையையும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் சாமி.

செருப்பு அணிவதை வழக்கமாகவும் ஷு அணிவதை ஆடம்பரமாகவும் நினைக்கும் சமூகத்தில், அது குறித்தான கேள்வி எழாத வண்ணம் ஒரு மலைப்பிரதேசத்தைக் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

கூடவே, முதன்மை கதாபாத்திரங்களுக்கு நெருக்கமான ஒரு பதின்பருவத்துப் பெண்ணையும் அவரை வீழ்த்த நினைக்கும் ஒரு காமுகனையும் திரையில் உலா விட்டிருக்கிறார்.

இப்பகுதி விலாவாரியாக இடம்பெற்றிருப்பதுதான் ‘அக்காகுருவி’யின் ஜீவனையே சிதைத்திருக்கிறது.

இளையராஜாவின் பல திரைப்படங்களில் இருந்து சில பாடல்களை தேர்வு செய்து, இந்த ஜோடி தோன்றும் காட்சிகளில் ஒலிக்க விட்டிருக்கிறார் இயக்குனர்.

அதனைக் காட்சிப்படுத்திய விதமும் குறைவில்லாத ஒன்று.

ஆனால், மையக்கதைக்கும் அதற்குமான தொடர்பு இழை மிகப்பலவீனமாக இருப்பதும் குழந்தைமையை வெளிப்படுத்தும் கதையில் இப்பகுதி ஆறாவது விரலாக இருப்பதும் ஒரிஜினலை விட்டு பல மைல் தூரம் விலகி நிற்கிறது.

மிக முக்கியமாக, ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் ஆகப்பெரிய பலமே அதன் எளிமைதான். அதுவும் இதில் காணாமல் போயிருக்கிறது.

1997இல் நடப்பதாக காட்டப்படும் கதையில் கருப்புநிற பாலீத்தின் பை இடம்பெறுவதும், அதன் தொடர்ச்சியாக காட்டப்படும் குப்பைமேடு முழுக்க பாலீத்தீன் பைகள் நிரம்பியிருப்பதும் காலகட்டம் குறித்த குழப்பத்தை அதிகப்படுத்துகிறது.

சில நேரங்களில் பொருளாதாரம் சார்ந்த சமரசங்கள் இது போன்ற தவறுகளின் பின்னிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு நல்ல படைப்பை பிரதியெடுக்கும் இயக்குனர் சாமியின் நோக்கம் பலவிதங்களில் நலிவடைந்திருப்பதை மறுக்க முடியாது.

இன்னொரு ‘சிந்து சமவெளி’ தவறல்ல!

’மிருகம்’, ‘சிந்து சமவெளி’ தந்தவர் இயக்குனர் சாமி. அவரது முதல் படமான ‘சாமி’யும் கூட சர்ச்சைக்குரிய கதைதான். அதற்காக, அவரை மோசமான இயக்குனர் என்று முத்திரை குத்திவிட முடியாது.

எண்பதுகளில் மலையாளத்தில் காமம் மற்றும் முறை தவறிய காதல் சார்ந்த எத்தனையோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பல இன்றும் காவியங்களாக கொண்டாடப்படுகின்றன.

தமிழிலும் கூட பாலச்சந்தர் போன்ற இயக்குனர்கள் இப்படி கத்தி மீது நடக்கும் கதைக்களங்களைக் கையாண்டிருக்கின்றனர்.

‘அக்காகுருவி’யில் கிளைக்கதையாக வரும் காதல் பகுதிதான் இயக்குனர் சாமியின் பலம். அது போலவே, மிக நேர்த்தியாக இலக்கியத்தரமாக காம உணர்வை வெளிப்படுத்தும் பல்வேறு கதைகளை அவரால் தர முடியும்.

அது மட்டுமல்ல, ‘சரித்திரம்’ போன்ற வேறுபட்ட பல படைப்புகளும் அவரிடம் இருந்து முற்றுப்பெறாமல் நின்று போயிருக்கின்றன.

அதனால் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை தமிழுக்கு பெயர்த்துதான் அவர் தன்னை நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை.

’சிந்து சமவெளி’ ஏற்படுத்திய கறையைப் போக்க, அதனை மறக்கடிக்க ‘அக்காகுருவி’யைத் தந்தாக வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை.

‘அக்காகுருவி’ என்ற டைட்டில் உட்பட மொத்த படமும் மனதில் ஒட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், இடைவேளைக்கு முன்னதாக வரும் காட்சியும் அதற்கு இளையராஜா இசையமைத்திருக்கும் விதமும் ‘அபாரம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்காதது.

அந்த இடம்தான் இயக்குனர் சாமி யார் என்பதையும் இளையராஜாவின் மினிமலிச இசையையும் நமக்குப் புரிய வைக்கிறது.

அந்த ஒரு காரணமே, ‘அக்காகுருவி’யைக் கடந்து சென்று வேறொரு படைப்பை உருவாக்க வேண்டுமென்று இயக்குனர் சாமியிடம் கேட்கத் தூண்டுகிறது!

-உதய் பாடகலிங்கம்

You might also like