எல்லா நேரமும் யாரோவாக இருக்க இயலாது!

நான் அப்பாவாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் மகனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் கணவனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் அண்ணனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் நண்பனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
மாமாவாக
மருமகனாக
குருவாக
சீடனாக
கவிஞனாக
எழுத்தாளனாக
அறிவாளியாக
இயக்குநராக
இடையறாது
நடித்துக் கொண்டேயிருக்கிறேன்.

இப்போதெலாம் நடிப்பு பெரும்சோர்வைத் தருகிறது
மெல்ல என் ஒப்பனைகள் கலைகின்றன
கிரீடங்கள் கழண்டு விழுகின்றன
ஆயுதங்கள் முறிந்து போகின்றன
எழுத்தாணிகள் தற்கொலை செய்து கொள்கின்றன
கற்றதெல்லாம் மறந்து போகின்றன
வேப்பமரம் பூத்து நிற்கிறது
வேப்பம்பூக்கள் உதிர்ந்து என் மீது விழுகின்றன.

ஏதோ நிறைவாக உணர்கிறேன்
எல்லா நேரமும் யாரோவாக இருக்க இயலாது
நான் நானாக இருக்க விரும்புகிறேன்
நான் என்பது ஒன்றுமேயில்லை
இதை தெரிந்து கொள்ள
எத்தனை பெரிய பயணம்
வேப்பம்பூவை வாயில் போட்டு மெல்லுகிறேன்
உடலெங்கும் தித்திப்பூ பூக்கிறது.

– வசந்த பாலன்

நன்றி: இயக்குநர் வசந்த பாலன் முகநூல் பதிவு

You might also like