– உச்சநீதிமன்றம் கவலை
அண்மையில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடந்த மாநாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சு இடம்பெற்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதில், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், இமாச்சலப்பிரதேச விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் ஒன்றுமே செய்யவில்லை என வாதிட்டார்.
இமாச்சலப்பிரதேச அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெறுப்பூட்டும் பேச்சு தொடர்பாக இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “வெறுப்பூட்டும் பேச்சுக்களை தடுக்க உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியும், நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சு சம்பவங்கள் அதிகரித்து இருப்பது கவலை அளிக்கிறது” எனத் தெரிவித்தனர்.
அதோடு, இந்த வாரத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை மே 9-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.