ஒரு காலத்தில் அரசால் தீவிரமாகத் தேடப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வந்தவர் புலவர் கலியபெருமாள். தமிழகத்தைச் சேர்ந்த நக்ஸலைட் தலைவர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் ஒரு காய்கறிக்கடை ஒன்றின் முகப்பில் வயது முதிர்ந்த நிலையில் அவரைச் சந்தித்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது.
“ஆந்திராவில் நக்ஸல்பாரிப் போராட்டம் ஆரம்பிச்ச நேரம். அதில் எனக்கு ஆர்வம் வந்தது. நிலச்சுவான்தார்களுக்கு எதிரான போராட்டத்தில் இறங்க முடிவுசெய்தோம்.
அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தோம்.
ஆந்திராவில் சில கொடுமையான நிலச்சுவான்தார்களை அழித்தொழிக்கிற போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.
நாங்கள் தமிழகத்திலும் கொரில்லாக் குழுக்களை உருவாக்கி எதிரிகளை அழித்தொழிக்க முடிவு செய்தோம். அப்படிச் செயல்பட்டு இந்தியாவில் 1977-க்குள் இந்தியாவுக்கு முழு விடுதலை கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.
அது சரியான திட்டமல்ல என்பதைப் பல ஆண்டுகள் கழித்துத் தான் உணர்ந்தோம்.
அப்போது தான் தமிழரசனை எனக்கு அறிமுகப்படுத்தினார் அப்பு. செயல்பாட்டில் மிகவும் தீவிரமாக இருந்தவர் அவர். உடுமலைப் பேட்டையில் முதல்பலி ஆரம்பமானது.
நிலச்சுவான்தார்கள், கந்து வட்டிக்காரர்கள், போலீசுக்குக் காட்டிக் கொடுக்கிறவர்கள் என்று பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
1970 பிப்ரவரியில் அழித்தொழிப்பில் தீவிரத்துடன் ஒரு அறுவடை இயக்கத்தை நடத்தத் திட்டமிட்டோம். ஆந்திராவிலிருந்து ‘சர்ச்சில்’ என்பவர் வெடிமருந்தைக் கொண்டு வந்திருந்தார்.
பெண்ணாடத்தில் – இதே கிராமத்தில் எங்கள் தோப்பில் உட்கார்ந்து வெடிமருந்தைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நான் இருந்தேன். வெடிமருந்துக் கலவையில் ஏதோ ஒன்றைச் சேர்த்ததும் புகைந்து வெடித்துவிட்டது. அதே இடத்தில் இரண்டு பேர் இறந்து போய்விட்டார்கள்.
சர்ச்சிலுக்கு முகம் சிதைந்து கொஞ்சம் உயிர் இருந்தது.
“நாம அவசரப் பட்டுட்டோம்” என்று சிரமத்துடன் சொன்னார்.
“மாவோ வாழ்க!” – சொன்னபடியே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.
அந்தத் தோழர்களின் சிதைந்த சடலங்களை அந்தத் தோப்பிலேயே புதைத்தோம்.
போலீஸூக்குத் தகவல் தெரிந்து என் மனைவி உட்பட ஆறு பேரைக் கைது செய்து விட்டார்கள்.
போலீசுக்குத் துப்புச் சொன்ன ‘ஆள்காட்டி’ ஒருத்தரை வெட்டிக் கொன்றார் தமிழரசன்.
போலீஸ் கெடுபிடி அதிகமானதும் நான் போலீசில் சிக்கிக் கொண்டேன்.
எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு என் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினார்கள்.
பனிரெண்டு வருஷங்கள் சிறையில் இருந்து 83-ல் வெளியே வந்தேன். 87ல் தமிழரசன் மக்களாலேயே தாக்கப்பட்டு இறந்த சம்பவம் என்னைப் பாதித்தது. இதுவரை எவ்வளவோ நெருக்கடிகள், சங்கடங்களை அனுபவித்தாகிவிட்டது. இருந்தாலும் இன்னும் நம்பிக்கை தளர்ந்து போகலை.
போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு நடைமுறை யதார்த்தம் தெரியவேண்டும். பொருளாதார அடித்தளம் இருக்க வேண்டும்.
முக்கியமாக ஜனங்களோட ஒத்துழைப்பு இருக்க வேண்டும். அவர்களோட ஒத்துழைப்பு இல்லாமல் எந்தப் போராட்டமும் வெற்றிபெற முடியாது.
இத்தனை வருஷ அனுபவத்தில் நான் தெரிஞ்சுக்கிட்டது இதைத் தான்..”-
அப்போது தான் ஆபரேஷன் ஆகியிருந்த கண்கள் குறுகுறுக்க இதைச் சொன்னார் கலியபெருமாள்.
–மணாவின் ‘கனவின் பாதை’ புத்தகத்திலிருந்து…