புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை!

தமிழ் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தனின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் 24) ஒரு பதிவு.

****

“நான் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை. நான் ஒரு வாசகன் அல்ல. எவ்வளவு நல்ல புத்தகமானாலும் என்னால் முழுக்கப் படிக்க முடியாது – அது நான் எழுதிய புத்தகமாய் இருந்தால் தவிர.

எந்தப் புத்தகத்தையும் என் சிந்தையைக் கவர்ந்து விடுவதற்கு நான் அனுமதிப்பதில்லை. அது நான் எழுதிய புத்தகமாக இருந்தாலும்கூட. அதாவது இந்தச் சிந்தை ‘கவர்ந்த’ என்ற வார்த்தை ‘influence’ என்ற ஆங்கில வார்த்தையின் மொழிபெயர்ப்பு என்று எனக்கு அறிவிக்கப்பட்டதை வைத்துக்கொண்டு சொல்லுகிறேன்.

“I have never allowed any book to influence me and I will never…”
நானும் எழுதுகிறவன் என்பதால் எனக்கு மட்டுமே நான் வகுத்துக் கொண்ட ஒரு நெறி இது.

என்னிடம் நூல் நிலையம் கிடையாது. நான் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதுமில்லை; இரவல் வாங்கிப் படிப்பதும் இல்லை. இவ்வளவையும் மீறிப் புத்தகங்கள் என்ன வந்து சந்திக்கின்றன. அவற்றை நான் படிக்கிறேன். சிலவற்றை முக்கால்வாசிகூடப் படிப்பேன்.

சில புத்தகங்களை முன்னால் பத்துப் பக்கம் நடுவில் பத்துப் பக்கம் கடைசியில் பத்துப் பக்கம் படிப்பேன். சில புத்தகங்களை எங்கேயாவது புரட்டி ஏதாவது ஒரு வரியைப் படித்து மகிழ்வேன். இவ்வளவுதான் புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு.”

“Books appeal to the mind which is already influenced by Life” – வாழ்க்கையினால் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மனங்களைப் புத்தகங்கள் கவர்கின்றன.

அதனால்தான் நான் புத்தகங்களைவிட மனிதர்களையும் வாழ்க்கையையும் படிக்கிறேன்.

இது முடியாதவர்களுக்கும் இதை விரும்பாதவர்களுக்கும் புத்தகங்களைவிட நல்ல துணை கிடையாது.”

ஜெயகாந்தனின் ‘சிந்தையில் ஆயிரம்’ கட்டுரைத் தொகுப்பில் (செண்பகா பதிப்பகம்) இடம்பெற்றுள்ள – ‘என் சிந்தையைக் கவர்ந்த நூல்கள்’ என்ற கட்டுரையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பகுதி.

நன்றி: இளையபெருமாள் சுகதேவ் முகநூல் பதிவு

You might also like