பூமியை தாயாக மதிக்கிறோமா?!

ஏப்ரல் 22 – உலக புவி தினம்

இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு.

அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம். இப்படிப்பட்டவர்களால் தான் இந்த பூமி சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது.

இதனைத தத்துவார்த்தமாகச் சொல்லவில்லை. உண்மையிலேயே, பூமி நலிவுற இது போன்ற மனிதர்களே காரணம். இவர்கள் உலகம் முழுக்கப் பரவியிருக்கின்றனர் என்பதற்கான சான்று, தொடர்ச்சியாகச் சிதையும் புவியின் சுற்றுச்சூழல்.

கனவும் நனவும்..!

நிலாவுக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ அல்லது விண்வெளிக்கோ சென்று குடியேற வேண்டுமென்று ஆசைப்படுவது தவறல்ல. எந்த கனவுமே ஒருநாள் நனவாகும் என்பதுதான் யதார்த்தம்.

அதற்காக, பூமியை வாழத் தகுதியற்ற இடமாக்கிவிடக் கூடாது. ஆனால், கடந்த நூறாண்டுகளாகத் தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நிலத்தையும் நீர்நிலைகளையும் வான்வெளியையும் பாழ்படுத்தியிருக்கிறோம்.

பூமியின் மேற்பகுதியில் இருந்தும் அடியாழத்தில் இருந்தும் எவ்வளவுக்கு வளங்களை உறிஞ்ச முடியுமோ, அவ்வளவோ சுரண்டு வருகிறோம். பிளாஸ்டிக் என்ற ஒற்றைக் கண்டுபிடிப்பின் மூலம் பூமியின் இயல்பையே சீர்குலைத்திருக்கிறோம்.

காடுகரையெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பாலீத்தின் பைகள் மட்டுமல்லாமல் வானிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தடம் புரள வைத்திருக்கிறோம்.

சில நாடுகளில் கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் தொகையும் பெருத்துள்ளது.

இவை எல்லாமே 50, 100 ஆண்டுகளுக்கு முந்திய நிலையுடன் ஒப்பிடும்போது, பல்லாயிரம் ஆண்டுகளாக காத்துவந்த வரைமுறைகளை மிகச்சில ஆண்டுகளில் சுக்கல் சுக்கலாக்கியது தெரியவரும்.

பால்வெளிப்பாதையில் வீடு அமைக்கும் கனவில், இன்று நம்மைத் தாங்கும் பூமியை குப்பைக்கிடங்காக மாற்றிவிடக்கூடாது.

ஒட்டுமொத்த சீரழிவுக்கு சில நபர்களோ, நிறுவனங்களோ, நாடுகளோ மட்டுமே காரணமாக இருந்தாலும், உலக மக்கள் அனைவருமே அதற்குப் பொறுப்பெடுக்கத்தான் வேண்டும்.

தரை நழுவினால்..!

காலுக்கு கீழ் உள்ள நிலம் நழுவிச் செல்லாது என்பதே பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. அதனாலேயே, மண் சார்ந்தும் அதற்கெதிராகவும் எவ்வளவு செயல்பட முடியுமோ அவ்வாறிருப்பார்கள்.

பூமியின் மேற்பரப்பில் நாம் மேற்கொள்ளும் சுற்றுச்சூழல் விரோத நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக பல லட்சக்கணக்கான ஆண்டுகளில் பூமியில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் இதன் சிதைவு எப்போதுவரும் என்ற கேள்வியையே எழுப்புகின்றன.

அது அண்மையில் இல்லை என்ற தைரியமே, நம்மை பல கீழ்த்தரமான செய்கைகளில் இறங்க வைக்கிறது.

கோள உருண்டையை இரண்டாக பிளந்துவிடுவதைப் போல பூமி துண்டாகும் என்றோ, அழுத்தம் தாங்காமல் மையத்தில் இருந்து பீறிடும் பல கீறல்கள் முனைக்கு நகர்ந்து பல்வேறு துகள்களாக்கும் என்றோ அல்லது இன்னபிற நிகழ்வுகள் பூமியில் இருந்து உடனடி எதிர்வினைகளாக கிடைக்குமென்று தெரிந்தால் அப்படியிறங்க மனம் வராது.

ஆனாலும், சில இயற்கைச் சீற்றங்கள் மிக அரிதாக ஏற்பட்டு அப்படியொரு எண்ணத்தை நம்மிடம் விதைத்து விடுகின்றன.

அப்போது நம்மில் ஏற்படும் மனமாற்றம் பிரசவ கால மற்றும் மயானத்து வைராக்கியமாகவே இருக்கின்றன.

பூமியை பாழ்படுத்த இன்றிறங்கினால், நாளை அது இரங்காமல் தரையின் இறுக்கத்தை தளர்த்திக் கொள்ளும் என்றால் எவருக்கும் அதற்கான தைரியம் இருக்காது.

இயன்றதைச் செய்வோம்!

சுமார் 200 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகளால் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உடனடியாக சரிப்படுத்த எவராலும் முடியாது.

ஆனாலும், அந்த நிலை அடுத்த கட்டத்தை எட்டிவிடாமல் பார்த்துக்கொள்ள முடியும். தொழில் துறை மட்டுமல்லாமல் இயல்பு வாழ்வில் நமது செயல்பாடுகளால் பூமியில் குறைகள் ஒட்டிக்கொள்ளும் என்றால் அவற்றைத் தவிர்க்கலாம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களையும் ஆன்மிகத்தோடு இணைத்துள்ள அத்தனை மதங்களும் பூமியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்றே சொல்கின்றன.

மனதை நல்வழிப்படுத்த உடலைச் செப்பனிட்டு செம்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது போல, புவியெங்கும் நல்லுணர்வு பெருகிச் செழிக்கவும் அதன் ஆன்மாவில் செந்தீ பற்றாமல் இருக்கவும் அதனைச் சரியான முறைகளில் பராமரிக்க வேண்டும்.

தாயோடும் கற்போடும் எதையும் தொடர்புபடுத்தி புனிதப்படுத்துவதும், மாறாக கீழ்மைப்படுத்த நினைக்கின்றவற்றை அதற்கு எதிர்த்திசையிலும் நோக்குவது நம்மோடு கலந்துள்ளது.

மனிதரால் கைக்கொள்ள முடியாத எந்தவொரு ஆற்றலுமே கடவுள்தன்மை கொண்டதுதான். அந்த நம்பிக்கையை இழக்கத் தொடங்கிய நாட்களில் அவ்வாற்றல்களின் மதிப்பும் குறைந்துவிட்டதாக கருதுகிறேன்.

அப்படியொரு தினத்தில்தான் பூமியைச் சிதைக்கும் எண்ணம் வலுப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு தாய்க்கு குழந்தைகளின் அசட்டுத்தனங்களும் அலட்சியப்படுத்தல்களும் பொருட்டல்ல; அதேநேரத்தில், இதர குழந்தைகளின் நலனுக்கு விரோதமாக அது இருக்குமானால் தாயின் பார்வையில் ரவுத்திரம் பரவும்.

பூமியும் அதற்கு விதிவிலக்கல்ல. அதிலிருந்து தப்பிக்க வெறுமனே பூமியைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை விட, ஆக வேண்டியதைச் சரியாகச் செய்தாலே போதுமானதாக இருக்கும்.

  • உதய் பாடகலிங்கம்
You might also like