இயக்குநர் மகேந்திரனின் காதல் நினைவுகள்!

முகநூல் பக்கத்தில் பத்திரிகையாளர் ரா. கண்ணன், ‘உதிரிப் பூக்கள்’ தந்த இயக்குநர் மகேந்திரனின் ‘உதிராத பூக்கள்’ என்ற தலைப்பில் எழுதிய சுவாரசியமான கட்டுரை தாய் இணைதள வாசகர்களுக்காக…

***

தோள் தொட்டு நலம் விசாரிக்கிறது குளிர்காற்று. ஜன்னல் கம்பி தட்டி வணக்கம் சொல்கிறது மழைச்சாரல். கண்ணில் படுகிற தூரத்தில் சிரிக்கிறது சின்னப் பூ! இன்றும் புதிதாகப் பிறந்தேன். இந்த உலகம் இன்னும் புதுசாகவே இருக்கிறது. எதிர்ப்படுகிற ஒவ்வொரு முகமும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

பேப்பர் வீசிச் செல்கிற பையன், காபி தருகிற மனைவி, நாயுடன் நடக்கிற மனிதர், டி.வியுடன் போராடிக் கொண்டிருக்கிற என் பிள்ளைகள், தொலைபேசியின் ஒவ்வோர் அழைப்பும் என்னை அன்பால் வதைக்கின்றன!

நான் வணங்குகிற என் ஆதர்ஷ மனிதனுக்கு ஒரு செம்பருத்திப் பூ பறித்து வைத்துவிட்டு மௌனமாக நிற்கிறேன். சத்யஜித்ரே… ஒரு சத்தியம்!

என் அலுவலக மேஜையில் நான் மட்டும் தனியே அமர்கிறேன். கலைந்து கிடக்கிற சதுரங்கப் பலகை மாதிரி சிதறிக்கிடக்கிற நினைவுகளைச் சேர்க்கிறேன். கபடி கிரவுண்டில் தொலைந்துபோன நாலணா மறுபடியும் கண்ணுக்குச் சிக்கியது மாதிரி,  ஒவ்வொன்றாக ஊர்வலம் வருகின்றன.

எனக்கு ஏழு பெயர்கள் உண்டு தெரியுமா? அலெக்ஸாண்டர்தான் பொதுப்பெயர்.

நான் ஏழு மாதத்தில் பிறந்த குறைப்பிரசவக் குழந்தையாம், நான் பிழைத்திருப்பேனா என்பதே பெரிய சந்தேகமாம். குறைமாதத்தில் பிறந்த குழந்தையெல்லாம் ஏதோ இருக்கும்; மற்றபடி விசேஷமாக இருக்கமாட்டார்கள் என்று நம்பிக்கையாம்.

ஒரு மரப்பாச்சி பொம்மை மாதிரி கிடந்த என்னை ஒரு டாக்டர் எடுத்து, பஞ்சுக்குள் சுற்றித் தன் வயிற்றுக்குள் வைத்து அழுத்திக்கொள்வாளாம். ஏழு மாதங்கள் என்னை வயிற்றில் சுமந்தவள் என் தாய். அதற்கடுத்துச் சில மாதங்கள் என்னைத் தன் வயிற்றோடு வைத்துக் கிடந்தவள் அந்த டாக்டர் சாராம்மா.

இப்போது எங்கே என் தாய் சாராம்மா… என் காதலுக்குரிய அந்த சாராம்மா எங்கேனும் முதுமையோடு போராடி மூச்சுவிட்டுக்கொண்டிருக்க மாட்டாளா… அவளை இத்தனை காலத்துக்குப் பிறகு காணும் வாய்ப்பு வராதா?

இளையான்குடியில் இருக்கும்போது வயசுக்குப் புரிகிற விஷயங்களில் மனசு ஈடுபடாத காலம். ‘இந்த வீட்டுப் பொண்ணுக்கும் அந்தத் தெருப் பையனுக்கும்’என்று வம்பு பேசுவதெல்லாம் எனக்கு வந்து சேர்ந்தபோது, அது அருவருப்பாகத்தானே பட்டது.

வீட்டுக்கு வீடு இந்தக் கதைதானா? ஏதோ சாக்கடைக்குப் பக்கத்தில் சாப்பிடுவது மாதிரி அந்தக் கொச்சைத்தனமான பேச்சுகள் என்னைச் சங்கடப்படுத்தின.

மூன்றாம் நான்காம் மனிதர்களின் அந்தரங்கங்களை அலசிக்கொண்டிருப்பதில் அக்கறை காட்டிய மனிதர்களை, அப்போதும் நான் வெறுத்தேனே.

அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். அந்த மதிய உணவு இடைவேளைகள் இன்னும் நினைவில் நிற்கின்றன.

என்னோடு படித்த நண்பர் ஜெயராஜோடு (ஓவியர் ஜெ..) வாஷ்பன் இல்லத்துக்கு வரும்போது நாலைந்து நபர்களாவது ஜெ-க்காக நிற்பார்கள்.

கல்லூரியில் பவானி என்றொரு பெண் படித்துக்கொண்டிருந்தார். கல்லூரியின் வனதேவதை அவர். பவானியை படமாக வரைந்து தரக் கேட்டு வந்து நிற்பார்கள். கேட்டவர்களுக்கெல்லாம் பென்சில் ஸ்கெட்ச்களில் விறுவிறுவென பவானிகளை வரைவார் ஜெயராஜ்.

புல்வெளியில் நடக்கிற பவானி, புத்தகங்களோடு சிரிக்கிற பவானி, மணிக்கூண்டருகே நிற்கிற பவானி, கலைந்த கூந்தல் காற்றில் அலைபாய்கிற பவானி, என்று வரைந்து தரக் கேட்ட ஒவ்வோர் இளைஞனையும் வசீகரித்த பவானி. கேட்டவர்களுக்கெல்லாம் வரைந்து தந்த ஜெயராஜுக்கும் அவரைப் பிடித்திருக்குமோ?

பவானி இப்போது எங்கே? பவானியை பென்சில் தீற்றல்களில் பாடப்புத்தகங்களுக்குள் பதுக்கி வைத்த அந்த நண்பர்களெல்லாம் எங்கே? எங்கே?

காரைக்குடியிலும் ஒரு கனாக்காலம். அது மட்டும் நீண்ட நெடியதொரு அழகிய கனவு. எத்தனை சிறுகதைகள், திரைப்படங்கள் என்று நினைவுகளைப் பதித்த பின்னரும் நான் இதுவரை கலைக்காததொரு கனவு.

பார்த்தேன். வைத்த விழி வாங்காமல் பார்த்தேன். நான் பார்ப்பதை அவரும் பார்த்தார். பார்வை… பார்வையிலேயே காலம் கழிந்துவிடுமோ என்றுதான் கடிதம் எழுதினேன்.

‘நீங்கள் என்னை விரும்புவது உண்மையாக இருந்தால், இந்தக் கடிதத்துக்குப் பதில் எழுதுங்கள்’ என்று. கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் பய வேகத்தில் காய்ச்சலோடு நான் கிடக்க, பதில் வந்தது… ‘என் அன்புள்ள உங்களுக்கு’ என்று.

இப்படித்தான் ஆரம்பித்தது நண்பரே… ஒரு கடிதத்துக்கு இப்படி ஒரு சக்தி உண்டா என்ன? திடுமென எல்லாக் கதவுகளும் திறந்துகொண்ட மாதிரி. எனக்குள்ளே ஒவ்வொரு ரத்தத் துளியிலும் சர்க்கரை தடவிய மாதிரி. பளிச்சென்று ஊரே அலம்பிவிட்ட மாதிரி.

எல்லாச் செடிகளுமே பூப்பூத்த மாதிரி. அந்தக் கடிதத்தை என் நெஞ்சோடு அணைத்துக்கிடந்த சந்தோஷத்தை மொத்தமாகச் சொல்ல மொழியில்லையே!

ஒரு மரம்… அது புங்க மரமோ வேறென்ன மரமோ… நினைவில்லை. அது ஒரு மரம். அந்த மரநிழலில் அந்தப் பெண் காத்திருக்க, சைக்கிளில் விரைவேன். பேசுகிற சில நிமிடங்களில் என்ன பேசிக்கொள்வோம்? நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

‘இந்தப் பாடம் படிச்சுட்டீங்களா… அந்த நோட்ஸ் வெச்சிருக்கீங்களா..?’ என்று யாரும் யாரிடமும் பேசுகிற பொதுவான பேச்சுகள். பேச விரும்பியதைப் பேசியதேயில்லை. பேச வேண்டியதைப் பேசவே நேர்ந்ததில்லை. பரஸ்பரம் மொழி புரியும்போது பேசவே வேண்டியதில்லை.

அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீரனில்லை. என் சகோதரர் ஒருவர் அழகான தோற்றம் கொண்டவர். அட்டகாசமான விளையாட்டு வீரர். அவரை நினைத்து உறங்காமல்கிடந்த பெண்களுண்டு. விதி வலியது.

அவர் விரும்பிய பெண்ணோ, அவரைத் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. எனது அந்த சகோதரரின் திறமையை ஒப்பிட்டு நான் விமர்சனம் செய்யப்படும்போதெல்லாம் அவரை வெற்றிகொள்ள வேண்டுமென்கிற நினைப்பு மட்டும் பதிந்துவிட்டது.

இரவு நேரங்களில் இலக்கேயில்லாமல் ஓடித் திரிந்தேன். அந்தப் பயிற்சி, விளையாட்டுப் போட்டிகளில் எனக்குப் பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது. சகோதரர் காதல் தோல்வியால் வாடிக்கிடந்த நேரத்தில், நான் காதல்வயப்பட்டிருந்தேன். இனம் புரியாத சந்தோஷங்கள்.

ஒரு விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அவர் முன்னே மேடையில் மூன்றரை நிமிடங்கள் பேச எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர். இருக்கும்போது வேறு எவரும் நிற்க, நின்று பேச முடியாத சூழலில், ஏற்கெனவே இரண்டு பேர் விலகிச் சென்றுவிட்ட பிறகு, மூன்றாவதாக நான்.

அப்போது ஒரு காதல் ஜோடியின் விவகாரங்கள் அங்கே பரபரப்பாகியிருந்த நேரம்.

‘ஏங்க… இங்கே காதலிக்கிறதுன்னா அது எவ்வளவு பெரிய பிரச்னையாக்கிடக்கு. இவர் என்னன்னா சினிமாவுல எவ்வளவு ஈஸியாக் காதலிக்கிறாரு. கடற்கரையில, பார்ட்டியில, ரோட்ல, வீட்ல… கனவுலன்னு இவர் பண்ற காதலுக்கெல்லாம் தடையே கிடையாது பாருங்க…’ என்று நான் எடுத்த எடுப்பிலேயே பலத்த கைதட்டல்கள் கிளம்ப, எம்.ஜி.ஆர். என்னைத் திரும்பிப் பார்த்தார்.

மூன்றரை நிமிடங்களுக்குத் திட்டமிட்ட ஒரு பேச்சு, நாற்பத்தைந்து நிமிடங்கள் நீடித்தது. காரணம், எம்.ஜி.ஆர். என் பேச்சு பிடித்துப்போய் தொடர்ந்து பேச என்னை அனுமதித்துவிட்டு, கைதட்டி ரசித்து மகிழ்ந்தார். களேபரத்துக்கிடையில் என்னைப் பாராட்டித் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதித் தந்துவிட்டுப் போனார்.

அந்தக் கடிதம் என்னிடம் இன்னும் இருக்கிறது. நான் இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நான் ஒரு நட்சத்திரமாக ஆசீர்வதிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில், கூடியிருந்த கூட்டத்துக்கு நடுவே நான் நேசித்த… என்னை நேசித்த அந்தப் பெண்ணும் வந்திருந்தார். இப்படி நினைவுகொள்ள எத்தனையெத்தனை பொழுதுகள்.

கடைசி நாட்களில் ‘ஆட்டோகிராப்’ அமர்க்களங்களுக்கிடையே நடந்ததொரு சந்திப்பு. என்ன எழுதினோம்… என்ன எழுதப் பெற்றோம் என்பதைவிட என்ன பேசிக்கொண்டோம். நினைத்துப் பார்த்தால் அப்போதும் சம்பிரதாயங்களே.

காலம் ஒரு கோடு கிழித்துப் பார்த்தது. அந்தப் பெண் எங்கேயிருக்கிறார் என்று தெரியும். மிகச் சரியான முகவரி தெரியாது. ஒவ்வொரு தெருவாக நான் தேடியலைந்ததும் என் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறாமல் நான் சென்னைக்குக் கிளம்ப நேர்ந்ததும் நடந்தது.

சட்டக் கல்லூரிக்கு வந்தேன். சில காலம் படித்தேன். பிறகு நாடகங்கள், பத்திரிகைப் பணிகள், திரைப்பட வாய்ப்புகள் என்று மின்னல்களில் காலம் கோக்கப்பட… பிறகு எனக்குத் திருமணமாகி, என் பயணமே மாறிப் போனது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு… இப்போது நினைக்கிறேன். ஏன் அந்தப் பெண்ணை நான் தவறவிட்டேன்? சில முயற்சிகள் எடுத்திருந்தால், ஒருவேளை திருமணம் நடந்திருக்குமோ? நடந்திருந்தால், அந்த வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்? ஏன் அந்த உறவு இழைகள் நெய்யப்படாமலே நின்றுபோயின?

கேள்விகள்… கேள்விகள்… கேள்விகள். ஆனால், அதுதான் வாழ்க்கை, என்னுள் அந்த நினைவுகள் இருக்கின்றன. இப்போதும்கூட நினைத்துப் பார்க்கச் சின்னச்சின்னத் திட்டுகளாக, தீவுகளாக உறைந்திருக்கின்றன.

அந்தப் பெண் இப்போது எங்கேயிருப்பார்? இன்னொருவருக்கு மனைவியாக… ஓர்வஅன்பான அம்மாவாக… நல்ல மாமியாராக… சுவாரஸ்யமான பாட்டியாக..?

‘மோகமுள்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் நானும் இருந்தேன். சில வருடங்கள் அதுபற்றிய நினைவாகவே… அதற்குத் ‘திரைக்கதை’ அமைக்கிற வேலைகூட நடந்தது. ஒளிப்பதிவுக்கு நண்பர் பி.சி.ஸ்ரீராம் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடமும் பேசியிருந்தேன். இடையில் அது வேறொருவரால் படமாக்கப்பட்டு வெளிவந்திருந்தது.

நானும் பி.சி.யும் சந்தித்தோம்.

“சார்… நீங்க ‘மோகமுள்’ பார்த்தீங்களா?” என்றார் பி.சி.

“இல்லை… பார்க்கலை… பார்க்க விரும்பலை பி.சி.” என்றேன் நான்.

“ஏன் சார்…?”

“இல்லே… நான் ஒரு பெண்ணைக் காதலிச்சேன். அவளோட என்னை வெச்சு மனசளவில என்னென்னவோ வளர்த்து வெச்சிருந்தேன். திடீர்னு அவளுக்கு இன்னொருத்தரோட கல்யாணம் நடந்திருச்சு.

அதுக்கப்புறம் அந்தப் பெண்ணைப் பார்க்கறது எவ்வளவு சங்கடமான விஷயம். அந்த ஆளு அந்தப் பெண்ணை நல்லபடியா வெச்சிருக்காரா… சந்தோஷமா இருப்பாங்களா… அவர் சரியானவர்தானான்னு என்னென்னவோ தோணும்தானே. அதுமாதிரி தோணுச்சு.

ஒருவேளை, அந்தப் படம் பார்க்கப் போய் நான் அதிர்ச்சியடைய நேர்ந்ததுன்னா, அதைத் தாங்க முடியாது பி.சி. அதான் போகலை” என்றேன்.

என்னை நிமிர்ந்து பார்த்த பி.சி. “நானும் பார்க்கலை” என்றார்.

ஒரு சிறுகதை இப்படி ஆரம்பிக்கும்… Life is like a billiards game. you hit one ball, it hits another. That hits another and that hits another. Ultimately some other ball gets into the pocket. வாழ்க்கை ஒரு விளையாட்டல்ல. ஆனால், ஒரு விளையாட்டு மூலம் வாழ்க்கையை இவ்வளவு அழகாய்ச் சொல்லிவிட முடிகிறது பாருங்களேன்!

‘உதிரிப் பூக்கள்’ மாதிரி இன்னொரு படம் பண்ண முடியுமா…? எவ்வளவோ முயன்றும் அது மாதிரி ஒன்று மறுபடியும் முடியாது என்று தீர்மானித்துவிட்டேன். எவ்வளவோ நினைவுகள்…

புதுசான பூக்களாக மலர்ந்து, மலர்ந்த வேகத்திலேயே மணம் வீசி உதிர்ந்து கருகி சருகாகிப் போனதுண்டு. இது மட்டிலும் வேறு. இவை என் மன வெளியில் உதிராத பூக்கள். அந்தப் பூக்கள் செடிகளிலேயே இருக்கட்டும்!

  • நன்றி: ரா. கண்ணன்
You might also like