எது நல்ல பேச்சுத் தமிழ்?

“மிக நீண்ட இலக்கிய மரபு உள்ள கிரேக்கம், அரபி மொழிகளைப் போலவே தமிழிலும் எழுத்துத் தமிழ், வானொலி மற்றும் தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பு, அரசியல் மற்றும் இலக்கிய மேடைகள் போன்ற சூழல்களில் பயன்படுத்தப்படும் தமிழுக்கும் ஒரு குறிப்பிட்ட வட்டார, சமூக அல்லது தொழில் சார்ந்த மொழிக்கூறுகள் இல்லாத பொதுப் பேச்சுத் தமிழுக்கும் இடையில் பயன்பாட்டு அடிப்படையிலான வேறுபாடு உண்டு.

இது இரட்டை வழக்கு என அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு வழக்குகளுக்கு இடையிலான இடைவெளி அண்மைக் காலமாகக் குறைந்து வருவதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இப்போது தொலைக்காட்சி விவாதங்கள், தொலைக்காட்சி நேர்முகங்கள், ஆசிரியர் மாணவர் உரையாடல் அனைத்தும் பெரும்பாலும் பொதுப் பேச்சு வழக்குக்கு மாறிவிட்டதைக் காண முடிகிறது.

அரசியல் மேடைகளிலும் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட மேடைத் தமிழ்நடை இப்போது மாறி, பொதுப் பேச்சுத் தமிழ்ப் பயன்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது. தனித்தமிழ் இயக்கம் எழுத்து மொழிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இயல்பான பொதுப் பேச்சுத் தமிழுக்குக் கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இன்றைக்கும் தனித்தமிழ் அல்லது தூய தமிழில் மிகுந்த பற்றுள்ளோர் பேசும்போது இலக்கிய நடையில் பழந்தமிழ் சொற்களையும் சேர்த்துப் பேசுவதைப் பார்க்க முடியும்.

இதன் காரணமாகத் தூய தமிழ் அல்லது நல்ல தமிழ் என்றால் இலக்கிய நடையில் பேசுவதுதான் என்ற பொதுவான புரிதல் உள்ளது.

அவ்வாறு இலக்கிய நடையில் பேசுவது அனைவருக்கும் இயலாததாக இருப்பதால், நல்ல தமிழில் பேச இயலாது எனும் மனப்பான்மையும் மக்களிடத்தில் உள்ளது.

இது உண்மையல்ல. இயல்பான பேச்சுத் தமிழில் பிறமொழிக் கலப்பின்றிப் பேசுவது நல்ல தமிழ்தான் எனும் எண்ணம் வளர வேண்டும்.”

– நன்றி: கோ.பாலசுப்பிரமணியன், இந்து தமிழ் திசையில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

You might also like