– உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
கூடலூர் பகுதியில் யானைகள் உட்பட நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள மணல் கொள்ளி பகுதிக்கு உணவு தேடி வரும் காட்டு யானைகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி என்ற பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக காட்டு யானை, குரங்கு, காக்கை ஆகியவை அங்குள்ள மின் வேலியில் சிக்கி உயிரிந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், யானைகள் உட்பட காட்டு விலங்குகள் உயிரிழப்பதற்கு முக்கிய காரணம் அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகள் தான் என்பதால்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் சார்பாக, வனத்துறைக்கு ரூ.75 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் இதனை வனத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘‘யானைகள் உட்பட விலங்குகள் இதுபோன்று உயிரிழப்பது என்பது விபத்தாகும்.
மேலும் மின் வேலிகள் எந்தெந்த பகுதிக்குள் அமைக்க வேண்டும் என்று அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள ஜாயின் கமிட்டி தெளிவாக வரையறை செய்துள்ளது.
ஆனால், அவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.