உக்ரைன் வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 7 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர் என, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.

“இந்த போரில் எத்தனை பேர் உயிர் பிழைத்திடுவார்கள் என்று கூறுவது கடினம் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷிய படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர், உக்ரைன் அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு சென்றதில், 900க்கும் மேற்பட்ட குடிமக்களின் உடல்கள் பல பகுதிகளில் கிடந்துள்ளன.

கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், தெருக்களில் பலர் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். இதனால், பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு, எளிதில் வீழ்த்தி விட்டுச் சென்றதற்கான அடையாளம் காணப்பட்டுள்ளது.

ரஷியாவின் போர் கப்பல் ஒன்று கருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட பின்னர், கீவ் நகரின் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், உக்ரைனியர்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.

இதேபோன்று, கிழக்கு உக்ரைனில் புதிய தாக்குதல்கள் நடத்த ரஷியா தயாராகி வருகிறது. தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

வடகிழக்கு நகரான கார்கீவில் நடந்த குண்டுவீச்சு தாக்குதலில் குடியிருப்புப் பகுதி சேதமடைந்து 7 மாத குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் காயமடைந்துள்ளனர். இதனை கவர்னர் ஓலே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனால், உக்ரைனில் தொடர்ந்து போர் நீடித்து வருவதுடன் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை இருதரப்பிலும் அதிகரிக்கக் கூடிய சூழல் காணப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like