மதுரையிலயும் சரி. சுத்தியிருக்கிற கிராமங்களிலேயும் சரி. அங்கங்கே சாமிகள் ஜாஸ்தி. அங்கங்கே கோவில்கள்தான். கோயில்னாலே..… சாமி கும்பிடு திருவிழா நடக்கும்.
இன்னும் பாருங்க கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம்னு பல கலைகளையே காப்பாத்தி வைச்சிருக்கிறது இந்தக் கோவில் திருவிழாக்கள் தானே.
அதுமட்டுமில்லாம, ‘சூட்டிகை’யான, கிராமத்துக்கே உரிய நல்ல இயல்புள்ள ஜனங்கள் ஆர்ப்பாட்டமும் இருக்காது. அதே சமயம் அமைதியும் இருக்காது. எப்போதும் வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற நகரம். நல்லா உழைப்பாங்க. ஆனா, அதை டாம்பீசுமாச் சொல்ல மாட்டாங்க. இயல்பா இருப்பாங்க.
“வாங்கண்ணேய்”ன்னு கிராமியத் தனமா கூப்பிடுறப்போ எப்படி இருக்கும் தெரியுமா? அதன் தாக்கம் எனக்கிருக்கு… அதைத் தான் பிறருக்குச் சொல்றேன்.
மதுரையைச் சுத்தின கழுதையும் வெளியே போகாதுன்னு சும்மாவா சொல்லியிருக்கான்?
– மதுரையைப் பற்றிய குமுதம் சிறப்பிதழில் பேராசிரியர் சாலமன் பாப்பையா சொன்னவை