படைப்பாளர்களுக்கு ‘தாய்’ அளித்த அங்கீகாரம்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் – 13 

டொமினிக் ஜீவா.

இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இலங்கை எழுத்தாளர். ‘மல்லிகை‘ பத்திரிகையின் ஆசிரியர். ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்‘ என்ற சிறந்த சுய வரலாற்று நூலை எழுதியவர்.

தமிழகத்தின் சிறுகதைச் சக்கரவர்த்தி என ஜெயகாந்தனை சொல்வதைப் போல,  இலங்கையில் டொமினிக் ஜீவாவைச் சொல்லலாம். ஒப்பீடு அவசியமில்லை என்றாலும் அவரைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா?

அப்பொழுது டொமினிக் ஜீவா ‘தண்ணீரும் கண்ணீரும்’, ’பாதுகை‘, ’காலையில் திருப்பம்‘ போன்ற நூல்களை எழுதிப் பிரபலமாக இருந்தார். அந்த நூல்களை வலம்புரிஜானிடம் வழங்கினார்.

அவர் பின்னாளில் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகம், தென்னிந்தியக் கழகம் இணைந்து, 2007 இல் வழங்கிய ‘சங்கச் சான்றோர்’ விருதைப் பெற்றார்.

உலகில் கவனிக்கத்தக்க ‘இயல் விருதை’யும் 2013 இல் பெற்றார்.

இயல் விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும் டொரண்டோ பல்கலைக்கழக தென்னாசிய கழகமும் இணைந்து வழங்குகிறது.

டொமினிக் ஜீவா

இந்த இயல் விருது ‘இடபம்‘ என்ற புனைவுக்காக எழுத்தாளர் கண்மணி 2021 ல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இங்கே டொமினிக் ஜீவா பற்றி சொல்கிறேன் என்றால் அவர் திடீரென்று ஒருநாள் தாய் அலுவலகத்திற்கு வந்து ஆசிரியர் வலம்புரிஜானைப் பார்த்து நெகிழ்ந்து போனார்.

முன் அனுமதி வாங்கிக்கொண்டு வந்துதான் படைப்பாளர்கள் தன்னை சந்தித்து உரையாட வேண்டுமென்ற கட்டுப்பாடு ஆசிரியருக்கில்லை.

திடீரென டொமினிக் வந்த செய்தியை நான் சொல்ல உடனே வரச்சொல்லு என்று வரவேற்றார்.

அந்த சந்திப்பு கிட்டத்தட்ட அரை நாள் வரை நீடத்தது. அந்த விவாதத்தில் என்னையும் ஒரு பார்வையாளனாகவும் இடையில் ஊடாக பேசுகிற ஒரு மாணவனாகவும் ஆக்கினார் ஆசிரியர் வலம்புரிஜான்.

டொமினிக் ஜீவாவின் கதைத்தல் என்கிற பேச்சு மிகவும் மென்மையாகவும், இனிமையாகவும் அமைந்தது.

வலம்புரி ஜான் அவர்கள் திடீரென, “டொமினிக் ஜீவா என்பது உங்களுடைய நிஜப் பெயரா?” என்று கேட்டார்.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, ”இல்லை புனைப்பெயர்தான்“ என்று சொல்லிவிட்டு, அந்தப் பெயர் வந்ததன் காரணத்தையும் சொன்னார்.

“கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்கள் தலைமறைவாக யாழ்ப்பாணத்திற்கு ஒரு முறை வந்தபோது அவரை சந்தித்து சிலநாட்கள் உரையாடினேன்.

ப.ஜீவானந்தத்தின் மேலிருந்த பற்றுதல் காரணமாக ‘டொமினிக்’ பின்னால் ஜீவா சேர்த்துக் கொண்டு டொமினிக் ஜீவாவாக மாறினேன்” என்று சொன்னார்.

நாங்கள் வியந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

“எழுத்தாளர் ஆவதற்கு முன் டொமினிக் என்ன செய்தீர்கள்?” என்று வலம்புரிஜான் கேட்டார்.

அதற்கு அவர் சிரித்தபடியே தனது இளமைக்காலத்தின் நிகழ்வைச் சொன்னார்.

“பன்னிரண்டாவது வயதில் ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தி, தந்தையின் கடையில் முடித்திருத்தும் தொழிலைச் செய்தேன். ‘சவரக்கடையே எனது சர்வகலா சாலை’ ஆனது.

‘யோசப் சலூன்’ எனவும் ‘வண்ணான் குளத்தடிக் கடை’ எனவும் அழைக்கப்பட்ட அந்தச் சிகையலங்கார நிலையமே, எனக்கு கற்கை நிலையமானது.”

தமிழகத்தில் திராவிட இயக்கச் சிந்தனைகள் முடித்திருத்தும் இடங்களில்தான் முதலில் பரவலாக பேசப்பட்டு வளர்ந்தது என்பதை இங்கு நினைவு கூற வேண்டும்.

டொமினிக் ஜீவா திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பின்பு கம்யூனிஸக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு இரண்டும் கலந்த மிகச்சிறந்த எழுத்தாளராக அவர் மாறினார்.

யாழ்ப்பாணத்தில் போர் நடந்து கொண்டிருந்த போதும் ‘மல்லிகை’ இதழை தொடர்ந்து நடத்தினார்.

தன்னுடைய 93-வது வயதில் நோய் தொற்று காரணமாக மறைந்தார் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

அன்றைய சந்திப்பில் டொமினிக் ஜீவாவுடன் ஒரு எழுத்தாளர் வந்ததாக நினைவு. அவர் பெயர் நினைவில் இல்லை.

இருந்தாலும் அவர் கேட்ட கேள்வி இன்றும் என்னைத் தொடர்ந்து கொண்டே வருகிறது.

அவர் ஆசிரியரைப் பார்த்து “வலம்புரிஜான் சார் எப்பொழுது பார்த்தாலும் கையில் புத்தகங்களை வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே, வாசிப்பது என்பது அவ்வளவு முக்கியமா?” என்று கேட்டார்.

அப்போது அவர் தந்த விளக்கம் பின்னாளில் நூல்களில் வலம்புரி ஜான் வெளிப்படுத்த காரணமாக அமைந்தது.

அதற்கு பிற்பாடுதான் பலமுறை தன்னுடைய நூல்களில் அதற்கான விளக்கத்தை அழுத்தமாக எழுதினார்.

இன்று பலபேர் வசிப்பதற்கு இடம் தேடுகிறார்களே ஒழிய வாசிக்கிற இடத்தை நோக்கி செல்வதில்லை.

வாசிப்பைப் பற்றி வலம்புரிஜான் அவர்கள் “சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக” என்ற நூலில் மிகச்சிறப்பாக எழுதியுள்ளதைச் சொல்கிறேன்.

“வாசிப்பு நம்மைத் தூங்க விடாமல் செய்கிறது.

புத்தகங்கள் இல்லாத வீடுகள் சாப பறவைகளின் சரணாலயங்கள்.

புத்தக சாலை இல்லாத ஊர்கள் புழுதி படர்ந்த புதை மேடுகள்.

நான் மரணித்து போகிற போதும் புத்தகங்களோடு என்னைப் போக விடுங்கள். காரணம் தூங்குகிற போதும் நான் அவைகளோடு தொடர்பு வைத்து இருக்கின்றேன்.

தமிழ்நாட்டில் புகை வண்டிகள் நிற்கிற பல இடங்களில் சாயா கிடைக்கிறதே தவிர நம்மை சாயவிடாமல் நிலை நிறுத்துகிற புத்தகங்கள் கிடைக்கவில்லை” என்று அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.

இன்னும் ஒன்றைச் சொல்கிறார்.

“காரல் மார்க்சைப் படித்துவிட்டு கண்மூடுகிற ஒருவனின் கனவில் காபரேக்காரிகள் வந்தார்கள் என்றால் அவன் விழித்து இருப்பதற்காக படித்தவன் இல்லை விழுந்து போவதற்காக என்று கொள்ளலாம்“ என்று அவர் தன்னுடைய எழுத்துக்களில் சாடுகிறார்.

‘பாரதியார் – நேற்று இன்று நாளை’ எனும் நூலில், “வெள்ளைக்காரர்களுக்கு நாடு அடிமைப்பட்டது என்கிற கருத்தை பாரதியார் முற்றாக தலைமுழுகி விட்டார்.

வெள்ளைக்காரர்கள் வருவதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மேல், கீழ் என்று ஆகிப்போன இந்தியச் சமுதாயத்தில் தங்களது அடிமை முத்திரையை அழுத்தமாக இறக்குவதற்கு ஆங்கிலேயர்களுக்கு எளிதாக இருந்தது.

‘மாடு தின்னும் புலையா
உனக்கு மார்கழித் திருநாளா?’

என்று நம்மவர்கள் நம்மவர்களையே கேட்டதால்தான் ஆறாயிரம் மைல் கற்களுக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளைக்காரனுக்கு “தொண்டு செய்யும் அடிமையே உனக்கு சுதந்திரம் நினைவோடா?” என்று கேட்க முடிந்தது.

ஆகவே ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதி ஆச்சு‘ என்று பாடுகிறார்.

பாரதி பெருமகனுக்கு அணி சேர்ந்து வந்தது எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்தினால்தான்.

சுதந்திரம் என்பதில் பாரதியார் உறுதியாக இருந்தார்.

நிற்க.

இந்த இடத்தில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நாங்கள் ‘தாய்’ இதழில் இருக்கிறபோதே லயோலா கல்லூரிக்கு அருகில் செயல்பட்ட ஐக்கப் (ICUF) ‘தேன் மழை’ மாணவர் இதழ் 15வது ஆண்டு நிறைவு விழாவில் வலம்புரி ஜான் அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

அந்த விழாவில் நா.பார்த்தசாரதி, ஓவியக் கவிஞர் அமுதோன், கவிவேந்தர் மு.மேத்தா போன்றவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்பொழுது ஆற்றிய உரை இன்றுவரை நினைவு கூறப்படுகிறது.

80-களுக்கு முன்பாகவே மாணவர்கள் மத்தியில் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட படைப்புகளைத் தந்தது தேன்மழை மாணவர் மாத இதழ்.

அப்போது மகிமை பிரகாசம் ஆசிரியராக இருந்தார்.

அதற்கு முன் பால்பாஸ்கர், எஸ்.அறிவுமணி போன்றோர் ஆசியராக இருந்தார்கள்.
அதில் நான் சில காலம் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அந்தத் தொடர்பில் வலம்புரிஜான் அவர்களை நான் தான் அங்கு அழைத்துச் சென்று பேச வைத்தேன்.

“அக்கினிக் குஞ்சுகளை பிரசவம் செய்கிற படைப்பாளர்களை அரவணைத்து ஆராதிக்க வேண்டும். தமிழில் அது செய்யப்படாதது வருந்தத்தக்கது“ என்று சாடினார்.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஈழப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து ஒரு கூட்டம் லயோலா அருகில் உள்ள தேன்மழை இடத்தில் நடத்தினோம்.

எல்லாருடைய சட்டைகளும் கருப்பு துணியில் தைக்கப்பட்டிருந்தது.

ஏன் இதயத்தில் ஆணிகள் அறையப்பட்டு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிஞர்கள் ஒன்று கூடிய அந்தக் கூட்டத்தில் ந.காமராசன், பெருங்கவிக்கோ, பாரதிக் காவலர் ராமமூர்த்தி, பாவலர் அறிவுமதி, கவிவேந்தர் மு.மேத்தா, பேராசிரியர் பெரியார் தாசன் என ஏராளமான படைப்பார்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்வில் என்னை வலம்புரிஜான் பேச அழைத்தார்.

“இலங்கைத் தமிழர்கள் நம்முடைய தொப்புள்கொடி உறவுகள். அவர்களுக்கு ஒரு பாதிப்பு என்று சொன்னால் நாம் எப்படிப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால் மனிதம் எங்கே நசுக்கப்பட்டாலும் படைப்பாளர்கள் ஒன்று திரண்டு அதை எதிர்ப்பது கடமை“ என்று அப்போது பேசியது இப்போதும் நிழலாடுகிறது.

இதுபோன்ற சமூக நிகழ்வுகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முனைப்பாக இருப்பவர் தான் வலம்புரிஜான் அவர்கள்.

எழுத்தாளர்களை எப்போதும் தோளில் சுமக்கும் வலம்புரிஜான் அவர்களிடம், வைரமுத்து நிலாவைப் பற்றி எழுதிய சிந்தனைக் கட்டுரையை கொண்டுபோய் கொடுத்தேன்.

அதை உடனே பிரசுரிக்கச் சொன்னார்.

‘சிந்தனைத் தூவுது நிலவு’ என்ற தலைப்பில் வைரமுத்து எழுதிய வரிகளில் சிலவற்றை நான் இங்கே குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

“அறிவுஜீவிகளுக்கும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆனவர்களுக்கு மட்டும்தான் நிலவு ஒரு ஆனந்த பிம்பம். பாமரனுக்கு அது வானத்தில் ஒட்டப்பட்டு இருக்கின்ற கேலண்டர் அவ்வளவுதான்.

வீட்டுக்குத் தலைவனாக இருக்கும் கிராமத்தான் பௌர்ணமியன்று கனத்த குரலில் கட்டளையிடுவான். “அதான் நிலா வெளிச்சம் அடிக்குது, விளக்கு வேற எதுக்கு? மண்ணெண்ணைக்கு கேடா!

ஓ நிலா! எங்கள் தேசத்தின் பொருளாதாரத் தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது“

– இது வைரமுத்து அவர்கள் பார்வை.

‘தாய்’ வார இதழை வெறும் பொருளாதாரத்துக்கான பத்திரிகை என்று நினைத்துவிடக் கூடாது.

அதை சமூகக் கருவியாக்குவது ஆசிரியரின் கையில்தான் இருக்கிறது.

அந்த வகையில் வலம்புரிஜான் அவர்கள் சமூகத்தின் சூரிய விளக்கு என்று தான் சொல்வேன்.

சமூகத்தில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் தன்னை இணைத்துக் கொண்டே பயணப்படுவார்.

அப்படி பயணப்பட்ட முக்கிய நிகழ்வுகள் பலவும் இருக்கிறது

(தொடரும்…)

You might also like