விஜய்யுடன் நடிக்க விருப்பம்!?

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 6

‘ஆசை’ படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிக் கொண்டிருந்த நேரத்தில், ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் விஜய்யுடன் செகண்ட் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அஜித்தை தேடி வந்தது.

செந்தூரப்பாண்டி, ரசிகன் போன்ற ஹிட் கொடுத்துவிட்டு ஐந்தாவது படத்தில் தன்னை வளர்ந்துவரும் ஹீரோவாக நிலை நிறுத்திக்கொள்ள அப்போது விஜய் தயாராகிக் கொண்டிருந்தார்.

ஆனால் அஜித்தின் நிலைமையோ அப்படியில்லை. ‘அமராவதி’ அவ்வளவு பெரிய ஹிட்டெல்லாம் கிடையாது. ‘பாச மலர்கள்’ படத்தில் அரவிந்த்சாமி தான் ஹீரோ. அதில் ஒரு சப்போர்ட்டிங் ரோல் தான் செய்தார் அஜித். ‘பவித்ரா’வும் சுமாராகவே போனது.

இந்த நேரத்தில் விஜய்யுடன் நடிக்க வந்த சான்ஸை ஏற்றுக் கொள்ள ஒரு துணிச்சல் வேண்டும் இல்லையா? அது அஜித்திடம் நிறையவே இருந்தது.

எங்கும் எப்போதும் தங்குதடையின்றி இலவசமாக வாரி வழங்கப்படுவது அட்வைஸ் தான். அது அஜித்துக்கு அப்போது திகட்டத் திகட்ட புகட்டப்பட்டது.

“இது அநியாய ரிஸ்க். ஆடியன்சுக்கு விஜய் நன்கு அறிமுகமான முகம். அவருடைய அப்பா ஒரு டைரக்டர். சின்ன வயதில் இருந்தே சைல்ட் ஆர்ட்டிஸ்டாக நடித்து பழக்கப்பட்டவர். இப்போது ப்ராமிஸிங்கான யங் ஹீரோ என்ற இமேஜை வேறு வளர்த்துக் கொண்டு வருகிறார்.

இந்த நேரத்தில் அவரோடு நடித்து, அவர் பர்ஃபாமென்ஸில் தூக்கி சாப்பிட்டுவிட்டால், அதிலிருந்து மீண்டு வருவது சிரமமாகிவிடும். யோசித்து முடிவெடு” என்று ஆளாளுக்கு கருத்து கந்தசாமிகளாக மாறி அட்வைஸை அள்ளி தெளித்தனர்.

அத்தனையையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட அஜித், நிதானமாக யோசித்து தன் முடிவை அறிவித்தார்.

“இந்தப் படத்தில் நான் நடிக்கப்போறேன்” என்பதே அது.

இப்படி ஒரு முடிவெடுத்ததற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

‘‘இன்னொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கும்போது தான் நம்முடைய திறமை நமக்கு புரியும். முக்கியமா நம் மைனஸை கரெக்டாக அடையாளம் காணலாம்.

எதிலெல்லாம் இம்ப்ரூவ் செய்து கொள்ளவேண்டும் என்ற சுய மதிப்பீட்டை பக்காவாக செய்ய முடியும்.

திரையில் நம்மை மிஞ்சி அவர் பெயர் வாங்கிடுவாரோ என்கிற பயம் எனக்கு துளியும் இல்லை. தன் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு தான் அந்த பயம் வரும்’’ என்று சொன்னவர்.

சொன்னபடியே ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் சந்துரு என்ற கேரக்டரில் நடித்துக் கொடுத்தார். அந்த படம் முடியும்போது அஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்களாகி இருந்தனர்.

அதன் பிறகு அஜித்தின் சினிமா கிராஃபில் அவரை பெரும் உயரத்தை நோக்கி இட்டுச் சென்ற ‘ஆசை’ படப்பிடிப்பு ஆரம்பமானது. ஜீவானந்தம் என்கிற அந்த மெட்ராஸ் இளைஞன் கதாபாத்திரத்தில் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போயிருந்தார் அஜித்.

அதற்கான முழு கிரெடிட்டும் அந்தப் படத்தின் இயக்குனர் வசந்த்தையே (இப்போது வசந்த் சாய் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டிருக்கிறார்) சேரும்.

‘ஆசை’ படத்துக்குள் அஜித் எப்படி வந்தார் என்று இயக்குனர் வசந்த் சாயிடம் கேட்டபோது, 20 வருடத்துக்கு முன் நடந்த சம்பவங்களை ஆசையுடன் விவரிக்கத் தொடங்கினார்.

‘‘நான் சின்னப் பையனா இருந்தபோது இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா படங்களை பார்க்க பெண்கள் கூட்டம் கூட்டமா தியேட்டருக்கு போறதைப் பார்த்திருக்கேன். அவரோட அழகில் அப்படி ஒரு மயக்கம் இருந்தது பெண்களுக்கு.

அதுபோல தமிழில் வந்தார் அரவிந்த் சாமி. அவரோட அழகு தமிழ் சினிமா ரசிகைகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச்சு. அப்படியொரு ஹீரோவை என் படத்துக்கு தேடிட்டு இருந்தேன்.

ஒரு நாள் டி.வி.யில தற்செயலா ஒரு விளம்பரப் படத்தை பார்த்தேன். நல்ல க்யூட்டா ஒரு பையன் வந்தான். யாருன்னு விசாரிச்சு ஆளப்பிடிங்கனு அசிஸ்டென்ட்ஸ்கிட்ட சொன்னேன்.

அவங்களும் தேடிக் கண்டுபிடிச்சு அஜித் வீட்டுக்கு ஃபோன் பண்ணி தகவலை சொல்லிட்டாங்க.

டைரக்டர் மணிரத்னமும் அவருடைய நண்பர் ஸ்ரீராமும் சேர்ந்து ஆலயம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தாங்க.

அவங்களுக்கு தான் நான் ‘ஆசை’ பண்றதா கமிட் ஆகி இருந்தேன். ஸோ, ஆலயம் ஆபீசுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் பைக்கில் வந்து இறங்கினார் அஜித்.’’

(இன்னும் தெறிக்கும்…)

– அருண் சுவாமிநாதன்

You might also like