படம் வெளிவருவதற்கு முன்பு சில தடங்கல்கள்; இழுபறிகள்; கர்நாடகாவிலிருந்து கண்டனங்கள் – அனைத்தையும் மீறி வெற்றி பெற்றிருக்கிறது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி.’
படத்தின் பிரபலத்தை மீறி மிக எளிமையாக இருக்கிறார் சிம்புதேவன், ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் இயக்குநர். பேச்சில் வெற்றி குறித்த எந்தப் பெருமிதமும் இல்லை. பலரை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.
சமகால சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவை கலந்து நேர்த்தியாக அளித்திருப்பதில் திருப்தியுடன் இருக்கிறார். ஒரு மாலை நேரத்தில் இந்த இளம் இயக்குநரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
இனி அவரது வார்த்தைகளில்…
“மதுரை ஞானவள்ளிபுரத்தில் உள்ள பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில்தான் என் பள்ளிப் பருவம் தொடங்கியது. சிறுபிராயம் முதலே நானொரு டிராயிங் ஆர்டிஸ்ட்டாகவே வளர்ந்தேன். பள்ளியில் படித்ததைவிட ஓவியம் வரைந்த ஞாபகங்கள் தான் அதிகமாக இருக்கின்றன.
வருடத்திற்கொருமுறை ஸ்கூல் இன்ஸ்பெக்ஷனுக்கு கல்வி அதிகாரிகள் வருவார்கள். அந்த நாட்களில் போர்டை அழகுபடுத்துகிற வேலை என்னுடையது. இன்ஸ்பெக்ஷன் என்றால் ‘அவனைக் கூப்பிடு’ என்பார்கள்.
அம்மா தையல் கலையில் சிறந்தவராக இருந்தார். துணிகளில் நுணுக்கமான எம்ப்ராய்டரி வேலைகள் செய்வார்.
அவருக்கிருந்த கலை மனம் எனக்கும் ஒட்டிக் கொண்டது என்று நினைக்கிறேன்.
அண்ணன் வி.எஸ்.கண்ணன் இலக்கியம், தத்துவம், தர்க்கம் என பரந்துபட்டு வாசிக்கிறவராக இருந்தார்.
புதிய சிந்தனையுள்ளவராகப் பேசுவார். நிறையப் படங்கள் பார்ப்பார். அவர்தான் எனக்குக் கிடைத்த முதல் திசைகாட்டி.
பல நல்ல புத்தகங்களையும், வித்தியாசமான திரைப்படங்களையும் அறிமுகப் படுத்தினார். அவர் பின்னாலேயே போகத் தொடங்கிவிட்டேன்.
மாப்பிள்ளை வினாயகர் காம்ப்ளக்ஸில் எந்தப் படம் வந்தாலும் நானும் அண்ணனும் பார்த்துவிடுவோம். அப்படி புதிய படங்களைப் பார்க்கும் ஆர்வம் இன்னமும் என்னைவிட்டுப் போகாமல் இருக்கிறது.
பகல் தொடங்கி மறுநாள் காலைவரைகூட தொடர்ந்து படம் பார்த்த அனுபவம் உண்டு.
எல்லாவற்றிலிருந்தும் தனித்து டிராயிங் மட்டும் என்னோடு கூடவே வந்து கொண்டிருந்தது.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பார்த்தசாரதி மிகச் சிறப்பாக ஓவியங்கள் தீட்டுவார். அவரது ஓவியங்களைத்தான் முதன்முதலில் ‘காப்பி’ செய்து பழகினேன்.
வாட்டர் கலர், கொலாஜ் என்று விவரங்களோடு ஓவியங்களை வரையத் தொடங்கியிருந்தேன்.
எனது பள்ளி நாட்கள் ஓவியங்களில் நிரம்பி வழிந்தது என்று சொல்லலாம். அப்போது கவிதைகளும் எழுதிப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். நான் கவிதை, ஓவியம் என்று சுற்றுவதைப் பார்த்துவிட்டு வீட்டில் ‘படிப்பு கெட்டுவிடக் கூடாது’ என்பார்கள். படிப்பில் எப்போதும் ‘டாப்’பராக இருந்தது கிடையாது. மீடியமான மாணவன்.
கலை, இலக்கியம் என கல்லூரி வாழ்க்கை எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தது. தீந்தமிழ் தியாகராயர் கல்லூரிதான் வாழ்வின் சகல வாசல்களையும் விசாலமாகத் திறந்து வைத்தது.
“தம்பிகளே! முத்துக்களை அள்ளிக் கொள்ளுங்கள்” என்று சொல்கிற மகா சமுத்திரமாக கல்லூரி தோழமையோடு என்னை அரவணைத்துக் கொண்டது. பி.எஸ்ஸி., தாவரவியல் படித்தேன்.
நீண்டதூர பயணத்திற்குப் பிறகு, பெரிய வானம் பார்த்த சந்தோஷம். நிறைய சிறகுகள் முளைத்திருந்தது.
செந்தில்குமார் என்ற பெயரில் கதை கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதினேன்.
பெரிய கேன்வாஸில் ஓவியம் வரைகிற சுதந்திரத்தை கல்லூரி தந்தது.
பேராசிரியர்கள் கு.ஞானசம்பந்தன், வேம்புலு, சண்முகசுந்தரம் ஆகியோர் காட்டிய ஆதரவையும், அக்கறையையும் மறக்க முடியாது. கவிதைகள் பற்றிய தெளிவை தொ.பரமசிவன் உண்டாக்கினார்.
இப்படி ஒவ்வொருவரும் இந்தச் சிறியவனை கொஞ்சம் கொஞ்சமாக மேலே தூக்கி உட்கார வைக்க முயற்சி செய்தார்கள். இன்று திரும்பிப் பார்த்தால் அவை பசுமையான ஞாபகங்களாக மனதில் விரிகின்றன.
நான் டிராயிங் செய்வதிலிருந்து மெல்ல நகர்ந்து ஒரு ‘ஈகாலஜி’ புத்தகத்தின் இன்ஸ்பிரேஷனில் கார்ட்டூன்கள் வரையத் தொடங்கினேன். அதிலேயே லயித்துப் போய் மூழ்கிக் கிடந்தேன்.
அந்த சமயத்தில் ‘குமுதம்’ தேவன் எழுதிய சிறுகதைக்கு ஓவியம் கேட்டு ஒரு போட்டி வைத்தது. அப்போது சுஜாதா ஆசிரியராக இருந்தார். உடனே கார்ட்டூன் டைப்பில் படம் ஒன்றை அனுப்பி வைத்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு, என்னை பரிசுக்காகத் தேர்ந்தெடுத்து சென்னைக்கு அழைத்திருந்தார்கள். என்னுடைய ஸ்கெட்சஸ் குறித்துப் பாராட்டிய சுஜாதா, கார்ட்டூன்களின் அடிப்படை விஷயங்களைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.
ஸ்பாட் ஸ்கெட்சிங் பற்றிப் பேசினார். நான் தேடிய உலகத்தை அடைந்துவிட்டது போன்ற திருப்தி அவர் வழங்கிய உற்சாகத்தைப் பிடித்துக்கொண்டு கார்ட்டூன் கரையில் ஒதுங்கிக் கொண்டேன்.
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், பூங்கா என பல மணி நோங்கள் அமர்ந்து மனிதர்களை ஸ்டடி செய்து கார்ட்டூன்கள் செய்து பழகினேன். இடுப்புவரை வரைவதற்குள் நாம் பார்த்த நபர் மறைந்துவிடுவார்.
ஸ்கெட்ச் செய்வதில் ஒரு வேகம் கைவருவதற்கு பல மணி நேரங்கள் பயிற்சி எடுத்தேன். பிறகு ஏதோ பிடிபட்ட மாதிரி இருந்தது.
1996இல் ‘ஆனந்த விகடன்’ கல்லூரி அளவில் நடத்தப்படும் கையெழுத்துப் பிரதிகளுக்கென விகடன் எடிட்டர் திட்டம் என்ற ஒன்றை அறிவித்தது.
அதில் நாங்கள் தியாகராயர் கல்லூரியில் நடத்திய ‘சிம்பு பறவை’ இதழ் புதிதாக மாநிலத்திலேயே முதலிடத்திற்குத் தேர்வானது. விகடனிலேயே நிரூபராகப் வேலையும் கிடைத்தது.
‘மதன் ஆசிரியராகப் பணிபுாிந்த நேரம் அது. ஒரு கார்ட்டூனிஸ்ட்டின்கீழ் பணிபுரிவது பேரானந்தமாக இருந்தது. விகடன் எனக்கு இன்னொரு கல்லூரியாகப் பாடம் சொல்லிக் கொடுத்தது.
கார்ட்டூனில் தொடங்கி பல நல்ல விஷயங்களை, விகடன் நண்பர்களிடம் தெரிந்துகொண்டேன்.
மேட், டிசி காமிக்ஸ் ஆஸ்ட்ரிக்ஸ், டின்டின் என சகல கார்ட்டூன் காமிக்ஸ் பற்றிய பல பாடங்களைப் பயில நல்ல வாய்ப்பு.
நான் ஸ்கெட்ச் செய்வதை மட்டும் விடவில்லை. பள்ளி நாட்களில் நிறைய நாடகங்களும் எழுதியிருக்கிறேன். காமிக்ஸ் என்பது சைலண்ட் சினிமா மாதிரிதான். டீசி காமிக்ஸில் பார்த்தால் சினிமா ப்ரேம் போன்றே காட்சிகள் அமைத்திருப்பாா்கள். விகடனில் ‘கி.மு.வில் சோமு’ என்ற பெயரில் கார்ட்டூன் தொடர் ஒன்றை 25 வாரங்கள் செய்தேன்.
என்னுடைய முழு சக்தியும் உழைப்பும் அதற்குத் தேவைப்பட்டது. இருபது வருடங்கள் ஒருவர் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணியாற்றினால் எந்த அனுபவத்தைப் பெறுவாரோ அந்த அனுபவம் எனக்கு அதில் கிடைத்தது.
‘வெற்றிக் கொடிகட்டு’ படம் எடுக்கத் தொடங்கிய நேரத்தில் சேரன் சாரைச் சந்தித்தேன். அவரிடம் ‘ஆட்டோகிராஃப்’ வரை மூன்று படங்கள் வேலை பார்த்தேன். இது வேறுவிதமான அனுபவத்தையும், திரைப்படக் கலை பற்றிய பார்வையையும் வழங்கியது.
ஓர் உயிர்ப்பான ஈரமான வாழ்வின் பகுதிகளை அலசுகிறவராக கண்ணீரும், சந்தோசமும், கொண்டாட்டமும் நிறைந்த வாழ்க்கையின் கூறுகளை எடுத்து சினிமா செய்கிறவராக, அதுகுறித்த எதாா்த்தமான அணுகுமுறை கொண்டவராக இருந்தார் சேரன்.
றெக்கை முளைச்ச மாதிரி உணர்ந்தேன். எனக்கு ஆத்மார்த்தமான குரு அவர்தான். அவரிடம் பணியாற்றியது சினிமாவை நுட்பமாக கற்றுக்கொள்வதற்கான ஒரு ராணுவப் பயிற்சியென்று சொல்லலாம்.
சினிமாவிற்கு வந்தபோது என் பொருளாதாரம் சரிவை நோக்கி நகர்ந்திருந்தது. ஆனால், அந்த அற்புதமான மனிதரிடம் பணியாற்றியதில் தனிப்பட்ட சிரமங்கள் எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. ஐந்து வருடங்கள் கடந்தன.
நானும் ஏ.ஆர்.முருகதாஸும் அறை தோழர்கள். வடபழனி அழகம்பெருமாள் கோயில் தெருவில் தங்கியிருந்தோம். அவர் இயக்கிய தீனா, ரமணா இரண்டு படங்களுக்கும் ஸ்டோரி போர்டு செய்து கொடுத்தேன்.
இது சினிமாவை இன்னும் அருகிருந்து பார்க்கிற அனுபவம். என்னை உரமேற்றிக்கொள்ள நல்ல பயிற்சியாக இருந்தது. அதே நேரத்தில், இன்னொரு பக்கம் எனக்கான கதையும் மனதில் ரீல் ரீலாக ஓடிக்கொண்டிருந்தது.
ஷங்கர் சாரின் ‘எஸ்’ பிக்சர்ஸ் நிறுவனத்தில் புதுமையான வித்தியாசமான கதையாக இருந்தால் கேட்பார்கள் என்று கேள்விப்பட்டேன். முதலில் ஒரு கதையை தயார் செய்துகொண்டு ஷங்கர் சாரைச் சந்தித்தேன்.
என்னுடைய கதை – காதல் கலந்த எமோஷனல் காமெடி. அவருக்கு கதை பிடித்திருந்தது. கதையைக் கேட்டபின் என்னுடைய மற்ற ஆர்வங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது என்னுடைய கார்ட்டூன்கள் பக்கம் பேச்சு திரும்பியது. இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி என்ற கேரக்டரைப் பற்றியும் சொன்னேன். ‘அவுட் அண்ட் அவுட்’ முழுநீள காமெடிப் படம் ஒன்று செய்யலாமே! நீங்க ஸ்கிரிப்ட் தயார் செய்யுங்கள் என்றார்.
அவரிடம் சம்மதம் சொல்லிவிட்டு பத்து நாட்களில் ‘முதல் பிரதி’யை தயார் செய்தேன். அவருக்குப் பிடித்துப்போக அடுத்த இருபது நாட்களில் முழுநீள நகைச்சுவை படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் தயாரானது. ஷூட்டிங் கிளம்பிவிட்டோம்.
இந்த நேரத்தில் ஷங்கர் சார் கிடைத்தது. பெரும் பாக்கியம் என்று சொல்லவேண்டும். இந்தக் கதையைக் கண்டுபிடித்து கைகாட்டி விட்டது அவர்தான்.
கதையைக் கேட்டு ”சரி, செய்யலாம்” என்று சொன்னதோடு நின்றுவிட்டார். தயாரிப்பாளர் என்ற முறையில் படப்பிடிப்பிற்கு ஒருநாள்கூட வந்ததில்லை.
டபுள் பாஸிட்டிவ் பார்த்துவிட்டு ஒரு பூங்கொத்து கொடுத்தார். அவர் அளித்த சுதந்திரமும், எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் இந்த வெற்றியை அள்ளித் தந்திருக்கிறது.
‘எஸ்’ பிக்சர்ஸ் ஒரு குடும்பம். அதுவொரு வழக்கமான சினிமா கம்பெனி அல்ல. அங்கே பரஸ்பர நம்பிக்கை, அன்பு, கருணை எல்லாமே கிடைக்கும். அறுபத்தியொரு நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம்.
தூய தமிழ் வசனம், பொருட்செலவு இப்படி ஏதோவொரு காரணத்தால்தான் ஏ.பி.நாகராஜன் காலத்தைப் போல சரித்திரப் படங்களைத் தயாரிக்க யாரும் முன்வரவில்லை.
அந்தக் காலப் படமாக இருந்தாலும் பார்வையாளர்களோடு நெருக்கத்தை உருவாக்க சமகாலப் பிரச்சினைகளை காட்சிகளில் வைத்தோம்.
இப்படத்திற்கான ஆதாரத் தரவுகளைச் சேகரிக்க நூலகங்களில் நான்கு மாதங்கள் செலவழித்திருக்கிறோம். மக்கள் உடை கட்டிட அமைப்பு, அந்நாளைய பொருளாதாரம் என எல்லாவற்றையும் ஆய்வு செய்து தகவல்களைச் சேகரித்தோம்.
ஆர்ட் டைரக்டர் பி.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர்த்து வேறு யாருக்குமே சாித்திரப் படங்களில் வேலை பார்த்த அனுபவம் கிடையாது.
நாம் நேர்த்தியாகத் திட்டமிட்டால் அது சரித்திரமோ சயின்ஸோ எந்தப் படமாக இருந்தாலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்து முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இந்தப் படத்தின் மூலம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
நான், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், ஆர்ட் டைரக்டர் பி.கிருஷ்ணமூர்த்தி மூவரும் சேர்ந்து கலந்து பேசிய பிறகுதான் படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் முடிவு செய்தோம். கூட்டு முயற்சியில்தான் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.
இப்படியொரு கதையைக் கேட்டதிலிருந்து பாடத்தைத் தயாாித்து வழங்கியுள்ள ஷங்கர் சாருக்குத்தான் எல்லாப் புகழும் சேரவேண்டும்.
எவ்வளவோ இளைஞர்கள் திறமைகளோடு வாய்ப்புகளின்றி தவிக்கிறார்கள். கரையைக் காணத் துடித்த இந்த தோணிக்கு அவர்தான் காற்றாக வந்தார். இன்னும் பலர் புதுமைகளோடு வருவார்கள்.
‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்திற்கு ‘வைகைப்புயல்’ வடிவேலுவைத் தேர்ந்தெடுத்துச் சொன்னதும் ஷங்கர் சாா் ரொம்ப நல்ல தேர்வு’ என்று உற்சாகப்படுத்தினார்.
இன்றைய அரசியல் தலைவர்கள் போலவே அந்தக்கால அரசர்களும் தொப்பையும் தொந்தியுமாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எதார்த்தமான மனிதர்களாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். நாம் கற்பனை செய்கிற மாதிரி எந்த பிரம்மாண்டங்களும் இல்லை.
படப்பிடிப்பின்போது பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன. தூய தமிழில் வசனம் பேச பலரும் சிரமப்பட்டார்கள். பிறகு வசனத்தை எளிமைப்படுத்திக் கொடுத்தோம். ஒரு காட்சியை ஒரே டேக்கில் எடுக்க முடியவில்லை. நடிக்கிறவர்களே சிரித்து விடுவார்கள். ரீடேக் போவோம்.
வடிவேலு நடித்துக் கொண்டிருக்கும்போது, இளவரசி சிரித்து விடுவார். இப்படி நிறைய. இப்போது படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது.
மக்கள் ரசனையைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஒரே காட்சிக்கு மதுரையில் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். திண்டுக்கல்லில் கைதட்டுவதோடு விட்டுவிடுவார்கள். ராஜபாளையத்தில் ஒன்றும் நடக்காதது போல அமைதியாக இருப்பார்கள்.
இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் ஆக்ஷன் காமெடி, டயலாக் காமெடி, சிலாப்ஸ்டிக் காமெடி என எல்லா வகை நகைச்சுவைகளையும் வைத்திருந்தோம்.
அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மனம் விட்டுச் சிரிக்க முடிகிறது.
இந்தப் படத்தைப் பார்க்க செகண்ட் ஷோவுக்குக்கூட 30 சதவிகிதப் பெண்கள் வருகிறார்கள் என்று தியேட்டர்காரர்கள் சொல்கிறார்கள். இது பெரிய மாற்றம்.
மக்கள் அளித்திருக்கிற இந்த வரவேற்பு தமிழ்த் திரையுலகத்தில் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவாக்கியிருக்கிறது.
இதுபோன்ற புதிய முயற்சிகளைச் செய்யத் துடிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் வெளிச்சம் கிடைத்திருக்கிறது.
23-ம் புலிகேசியைப் பார்த்த இயக்குநர் பாலுமகேந்திரா, “எ குட் என்டர்டெய்னர்” என்று பாராட்டினார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் நான் பயணத்தில்தான் இருக்கிறேன் எனக்கு பயிற்சியும் முயற்சியும் நிறைய தேவைப்படுகிறது.”
-இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் வெளிவந்த ஆண்டு 2006 அப்போது அந்தப் பட இயக்குநர் சிம்புதேவன் அளித்த பேட்டி.