டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்?

– நடிகர் திலகத்தின் செய்தொழில் நேர்த்தி

வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கௌரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில்  “கண்ணா நீயும் நானுமா…?” என்ற பாடலை டி.எம்.எஸ். பாட வந்த போது, படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் மற்றும் மனோபாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பிறகு, அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு, இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.

அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.

“இன்னும் ஒரு தடவை போடுங்கள், இன்னும் ஒரு தடவை” என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி. இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!

காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.

ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.

இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகத்தின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

“ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?”

“சுந்தரம்…! டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார். பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம், அடுத்த சரணத்தில் இன்னொரு விதமான தொனி, மற்ற சரணத்தில் இன்னொரு பரிமாணம் என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

ஒரே வரியையே இரண்டு இடத்தில் ரிபீட் பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.

உதாரணமாக ‘நீயும் நானுமா?’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும்போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.

இப்படியெல்லாம் அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுக்காவிட்டால் இதைப் பாடிய டிஎம்எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?” என்றாராம் சிவாஜி.

நடிகர் திலகத்தின் செய்தொழில் நேர்த்திக்கும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும், தன்னடக்கத்திற்கும், சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டு.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like