– நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக அரசின் 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்த தொடங்கினார்.
இந்த உரையில்…
* தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார்.
* மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
* மத்திய, மாநில நிதி உறவுகளை வழி நடத்த சிறப்பு ஆலோசனை குழு.
* தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இந்த அண்டு ரூ.7000 கோடி குறைய உள்ளது. 2014-ல் இருந்து வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டு அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
* சிறந்த நிதி நிர்வாகத்தை திமுக அரசு கடைபிடித்து வருகிறது எனக் கூறினார்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச வாய்ப்பு கோரி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் உரை முடிந்ததும் பேச வாய்ப்பளிப்பதாக அதிமுக எம்எல்ஏக்களிடம் உறுதி அளித்தார்.
அத்துடன் பட்ஜெட் உரையை கேட்குமாறு அதிமுகவினருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார்.
ஆனால், சபாநாயகர் கோரிக்கையை நிராகரித்த அதிமுகவினர், பட்ஜெட்டை புறக்கணித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
18.03.2022 10 : 50 A.M