“மாசில்லா உண்மைக் காதலே…’’

ஊர் சுற்றிக்குறிப்புகள்:

“கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்’’ – ஏ.எம்.ராஜாவின் மெல்லிசான நுங்கைப் போன்ற குரலில் கேட்டபோது, இளம் வயதில் அந்தக் குரல் காதில் நுழைந்த தருணம் சில்லென்றிருந்தது. அவ்வளவு வசீகரித்தது அந்த மென்குரல்.

1960 ல் வெளிவந்த ‘மீண்ட சொர்க்கம்’ படப்பாடல் அது. அதைவிட ஏ.எம்.ராஜாவின் குரலில் ஈர்த்த பாடல் “பிருந்தாவனமும், நந்த குமாரனும் யாவருக்கும் பொது உடமையன்றோ’’.

இவ்வளவுக்கும் 1955-ல் ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் ராஜேஸ்வர ராவ் இசையில் வெளிவந்த பாடல் இது.

சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.எஸ், சீர்காழி, திருச்சி லோகநாதன் போன்றவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தபோது, சிறு ஈசலின் சிறகைப் போல நுழைந்த குரல் ஏ.எம்.ராஜாவுடையது.

‘களத்தூர் கண்ணம்மா’வில் பல பாடல்களை அவர் பாடியிருந்தாலும், “அருகில் வந்தாள்.. உருகி நின்றாள்.. அன்பு தந்தாளே’’ பாடல் சிகரம்.

ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அருகில் உள்ள சின்னக் கிராமத்தில் பிறந்த ராஜாவின் சொந்தப் பெயர் ஏமல மன்மதராஜூ என்பது பதின்பருவத்தில் எனக்குத் தெரிய வந்தபோது வியப்பாக இருந்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.பட்டத்தை முடித்தவர் என்பது இன்னும் ஆச்சர்யம்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘குமாரி’ படத்தில் பாடிய ராஜா அடுத்து அவர் நடித்த ‘ஜெனோவா’விலும். ‘நாம்’ படத்திலும் பாடியிருக்கிறார். குலேபகாவலி படத்தில் “மயக்கும் மாலைப் பொழுதே நீ’’ என்கிற அருமையான மெலடிப் பாடலைப் பாடியவரை மிகவும் பிரபலமாக்கியது ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் பி.பானுமதியுடன் இணைந்து பாடிய “மாசில்லா உண்மைக் காதலே’’. தொடர்ந்து ‘மகாதேவி’க்காக “கண்மூடும் வேளையிலும்’’ பாடலும் ஹிட்.

1980-க்கு முன் மதுரையில் தெற்குவாசல் பகுதியில் இசைக்கச்சேரி நடத்த வந்திருந்தார்கள் ராஜா, ஜிக்கி குழுவினர். முன்னால் சாலையில் கூட்டம் உட்கார்ந்திருந்தது. கூட்டத்தில் ஒருதலையாய் நானும்.

இரவு ஒன்பது மணியளவில் ஆரம்பித்த கச்சேரி பனிரெண்டைத் தாண்டியும் நீடித்தது.
முதலில் ‘மிஸ்ஸியம்மா’ படத்திலிருந்து “வாராயோ வெண்ணிலாவே.. கேளாயோ எந்தன் கதையை’’ என்ற பாடலைப் பாடியபோது, அவருடைய குரலில் சிறு பிசிறு கூட இல்லை. காலத்தின் மாசில்லா குரலாகவே ஒலித்தது ராஜாவின் குரல். ஜிக்கியின் குரலிலும் வயதின் தழுதழுப்பில்லை.

“கண்களின் வார்த்தைகள் தெரியாதோ..’’ துவங்கி, “வாடிக்கை மறந்ததும் ஏனோ’’, “பாட்டுப்பாடவா.. பாட்டுக் கேட்கவா?’’ என்று சில பாடல்களைப் பாடியதற்குள் முன்னிருந்த கூட்டத்தை வசப்படுத்தியிருந்தார்கள் ராஜாவும், ஜிக்கியும்.

அவருடைய இசையமைப்பில் வெளியான ‘தேனிலவு’ படத்திலிருந்து “ஓஹோ எந்தன் பேபி’’ பாடலைப் பாடிவிட்டு, ஜிக்கியின் “கண்ணும் கண்ணும் கலந்து” – ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படப் பாடலுக்குப் பிறகு, “காலையும் நீயே… மாலையும் நீயே’’ என்று பாடலில் அவர் குரல் வழியே மிதந்தபோது அது அன்றைய இரவை இளக வைத்திருந்தது.

அதற்குள் சிலர் பிடித்த பாடல்களை காகிதத்தில் எழுதி மேடைக்கு அனுப்பினார்கள். ராஜா அலுத்துக் கொள்ளவில்லை.

சிவாஜி ரசிகருக்காக ‘மனோகரா’ படத்தில் இடம் பெற்ற “சிங்காரப் பைங்கிளியே பேசு’’ பாடல், தொடர்ந்து “மாசில்லா உண்மைக் காதலே’’ பாடலுடன், இடையில் அவருடைய குழுவினரை இரண்டு இந்திப் பாடல்களையும் பாட வைத்தார்.

ஆடிப் பெருக்கில் வந்த “தனிமையிலே இனிமை காண முடியுமா?’’ பாடியபோது கூட்டத்தில் அப்படியொரு அமைதி.

“வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’’ – பாடலும் கட்டிப் போட்டிருந்தது.
கடைசியில் ‘சமீபத்தில் வந்த திரைப்படங்களில் இருந்து இரண்டு பாடல்கள்’’ என்று சொல்லிவிட்டு இரண்டு பாடல்களைப் பாடினார்.

‘புகுந்த வீடு’ படத்தில் பாடிய “செந்தாமரையே..’’

‘வீட்டு மாப்பிள்ளை’ படத்தில் பாடிய “மலரே.. ஓ மலரே.. நீ என் மலரல்ல.. நானும் வண்டல்ல’’ என்ற பாடலை மிகவும் லயித்துப் பாடியபோது கச்சேரியை முடிக்கப் போகிறாரோ என்று பதற்றமாகவும் இருந்தது. தென்றல் மெதுவாக அருகில் வீசிவிட்டுப் போனதைப் போலவும் இருந்தது.

நள்ளிரவைத் தாண்டும்போது கச்சேரியை முடித்து அவர் குழுவினருடன் மேடையைவிட்டு இறங்கியபோது, அவரை அருகில் பார்க்க முண்டிய கூட்டத்திற்கிடையில் நானும் இருந்தேன்.

கீழே இறங்கிய பிறகு வணங்கிவிட்டு காரில் ஏறிவிட்டார்கள் ராஜாவும், ஜிக்கியும். பல ரசிகர்களை இன்னும் அதிகரித்துவிட்டுப் போனதைப் போலிருந்தது அவர்கள் பாடிய அந்த இரவு.

எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் என்று பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிற ஏ.எம்.ராஜா நண்பர் ஸ்ரீதருடன் ‘கல்யாணப்பரிசு’, ‘தேனிலவு’ படங்களுக்கு இசையமைத்து மகத்தான பாடல்களை முணுமுணுக்க வைத்து பெரிய இடைவெளி.

மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு வி.குமார், சங்கர் கணேஷ் போன்றவர்களின் இசையமைப்பில் சில பாடல்களைப் பாடியபோதும் ராஜாவின் குரல் தனித்துக் கவனிக்கப்பட்டது.

1973 வாக்கில் ஏ.வி.எம்.ராஜன் நடித்த ‘வீட்டு மாப்பிள்ளை’ படத்திற்காக அவர் இறுதியாகப் பாடிய பாடல்களில் ஒன்று ‘ராசி நல்ல ராசி’ மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பல மொழிகளில் பாடி, சிறந்த பாடகருக்கான விருதையும் பெற்றார் ஏ.எம்.ராஜா.
1989 ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் இசைக்கச்சேரி நடத்தக் குழுவினருடன் ஏ.எம்.ராஜா போய்க்கொண்டிருந்தபோது, வள்ளியூர் ரயில் நிலையத்தில் இறங்கி ஏறும்போது தடுமாறி உயிரிழந்தது பெரும் சோகம்.

“வாடிக்கை மறந்ததும் ஏனோ.. எனை வாட்டிட ஆசை தானோ?’’ – ஏ.எம்.ராஜா இசையமைத்து அவரே குழைந்த குரலில் பாடிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளுக்கு இன்னும் உயிர்ப்பிருக்கிறது.

– மணா

You might also like