குழந்தைகளின் அமைதிக்கான பிரார்த்தனை!

டாக்டர் க. பழனித்துரை

உலகத்தில் பெரும் பஞ்சம் தலைமைக்கு, அதன் விளைவுதான் இன்று நாம் பார்த்துவரும் உக்ரைன் – ரஷ்யப் போர்.

போர் மன வியாதியின் வெளிப்பாடு. அமைதி மானுடத்தின் மனிதத்துவ வளர்ச்சியின் வெளிப்பாடு.

போரிடும் தலைமைகளைப் பார்க்கிறோம். அமைதிக்கான தலைமை நமக்குத் தெரியவில்லை. எனவே மானுடத்தின் கடைசி ஆயுதம் ஆண்டவனிடம் பிரார்த்தித்தல் அமைதிக்காக.

பிரார்த்தனை புரிந்தவர்களுக்கு பொறுப்புள்ள மானுடச் செயல்பாடு, புரியாதவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு அல்லது நேர விரயம்.

மகாத்மா காந்தி பலவற்றைக் கற்றுக் கொடுத்தார். தன் வாழ்வின் மூலம் மானுட சமூகத்திற்கு அவர் மானுடத்திற்கு கற்றுக் கொடுத்த அத்தனையும் தன் சோதனைச் சாலையில் சோதனை செய்து விளைவைப் பார்த்தபின் கூறியவை தான்.

அவர் உடல், மனம், செயல் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தி விளைவுகளை ஆய்வு செய்து மக்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார். அப்படி கேட்டுக் கொண்டவைகளுள் ஒன்றுதான் பிரார்த்தனை.

பிரார்த்தனையை அவர் வடிவமைத்து தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார். அந்த பிரார்த்தனையை முறைமையுடன் செய்து பழகியவர்களுக்கு அதன் மகத்துவம் புரியும்.

காந்தி கிராமத்தில் அந்த பிரார்த்தனை ஒரு முக்கிய நிகழ்வு. ஏனெனில் காந்தி எதிலெல்லாம் நம்பிக்கை கொண்டு செயல்பட்டாரோ, அவைகள் அத்தனையையும் செயல்பாடுகளாக்கி வைத்திருக்கின்றது காந்தி கிராம அறக்கட்டளை.

காரணம் அந்த அமைப்பை உருவாக்கும் கட்டளையை தன் சீடர்களான இணையர்கள் மருத்துவர் செளந்திரம் ராமச்சந்திரன் அவர்களுக்கும், கல்வியாளர் டாக்டர் ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கும் இட்டதே காந்திதானே.

அந்த நிறுவனத்தைத் துவக்கும்போதே “எங்கு உண்மை தவழ்கிறதோ அங்கு வெற்றி சூழும்” என்று வாழ்த்துச் செய்தி அனுப்பியவரும் காந்தி மகான்தானே.

இன்றும் அர்ப்பணிப்புடன் நிறுவனர்கள் உருவாக்கிய நெறிகளைப் போற்றி காந்தி கிராம அறக்கட்டளையை “கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்ற பணியினை தொய்வில்லாமல் நடத்தி வருகிறது.

அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடிய போராளி மார்ட்டின் லூதர் கிங் இந்தியா வந்தபோது இந்த காந்தி கிராமத்தில் வந்து தங்கி டாக்டர் ஜி.ராமச்சந்திரனிடம் அகிம்சை வழி அறவழிப் போராட்டம் பற்றி விவாதித்து தெளிவு பெற்றார்.

அவருடைய சுய சரிதையில் இரண்டு பக்கம் காந்தி கிராமம் தனக்கு எப்படிப்பட்ட பார்வையைத் தந்தது எனவும், தனக்கு அகிம்சையின் மேல் இருந்த சந்தேகங்கள் எப்படி டாக்டர் ஜி.ராமச்சந்திரன் தீர்த்து வைத்தார் என்பதையும் விளக்கியுள்ளார்.

அப்படிப்பட்ட காந்தியச் செயல்பாட்டுக்களம்தான் காந்திகிராம அறக்கட்டளை. எந்த நிகழ்வும் அங்கு நிகழ்வுக்காக நடத்தப்பட்டதே கிடையாது.

நான் இங்கு பணிக்குச் சேர்ந்த 1991 முதல் இன்று வரை அங்கு நிகழும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது எனக்கு ஒரு நிறைவு கிடைப்பதுண்டு.

கடந்த சனிக்கிழமை அதாவது மார்ச் 5ம் தேதி மாலை ஒரு பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. காந்திகிராம அறக்கட்டளை பிரார்த்தனைக் கூட்டம் என்றால் அது சர்வமத பிரார்த்தனை.

என்னுடைய நான்கு வயதில் எனக்கு பிரார்த்தனையை கற்றுக் கொடுத்தவர் ஒரு ஓதுவார். அதைப் பின்பற்றி என் வாழ்க்கையைச் செதுக்கினேன். அதன் மகத்துவத்தை அரவிந்தர் ஆசிரம் சென்றபிறகு முழுமையாக தெரிந்து கொண்டேன்.

அதில் எனக்கு தெளிவை ஏற்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் எழுத்தாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி. இரண்டாமவர், மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டியில் கர்மயோகி. ஆனால் சர்வமத பிரார்த்தனையை நான் கற்றுக் கொண்டது காந்திகிராமத்தில்தான்.

அதன் முக்கியத்துவத்தை என்னிடம் ஆழமாக ஒருமுறை பதிய வைத்தது இந்தியக் குடியரசுத் தலைவர் மறைந்த ஆர்.வெங்கட்ராமன்.

அவர் இங்கு வந்தபோது சர்வமத பிரார்த்தனை பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறி பங்கேற்க வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

எனக்கு இதற்கான புரிதலை தந்தவர்கள் காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மறைந்த வே.பத்மநாபன் அண்ணா அவர்களும், பேரா.மா.வேலுச்சாமி அவர்களும், மறைந்த காந்திகிராம பாடகர் வேங்கையன் அவர்களும் தான்.

பல நிகழ்வுகள் என் மனதில் ஆழமான பார்வையை, புரிதலை இந்த சர்வமத பிரார்த்தனை உருவாக்கியுள்ளன.

அதில் ஒன்று காந்திகிராம நிறுவனர்களில் ஒருவரான டாக்டர்.ஜி.ராமச்சந்திரன் தன் அந்திமக் காலத்தில் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்தார்.

அப்பொழுது ஒரு பிரார்த்தனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் பிறகு அவருடைய உரையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் உரை கேட்டவர்களுக்குத் தான் தெரியும். அதன் சிறப்பும், ஆழமும், அகலமும்.

காந்தியை மாணவர்களுக்கு விளக்க அவர்போல் சிறந்த அறிஞரை பார்க்க இயலாது. மிகச் சிறந்த பேச்சாளர்.

எத்தனை மணி நேரம் ஆனாலும் அவர் ஆங்கில உரையை கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அப்படி பேச்சாற்றல் கொண்ட மாமனிதர்.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அங்கு வந்து உரையாற்றினார்.

அப்போது அந்தக் கூட்டத்திற்குச் சென்ற என் நண்பர்கள் அவர் உருவத்தையும் ஆடையையும், அவர் அமர்ந்திருந்ததையும் பார்த்து இவர் என்ன பேசப்போகிறார் என்று எண்ணினர்.

அவர் மைக்முன் நின்று பேச ஆரம்பித்தவுடன், அரங்கில் அமர்ந்த அத்தனை பேரும் நாற்காலியில் நேராக அமர்ந்து அவரின் உரையை உற்றுநோக்க ஆரம்பித்து, கடைசியில் அவர் உரையை முடித்தபின் இரண்டு நிமிடம் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

அப்படிப்பட்ட மாமனிதர். அவர் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசும்போது கூறினார்,

“இங்கே நீங்கள் அனைவரும் இந்தக் கிழவர் எதற்காக வந்திருக்கிறார் என்ற வினாவுடன் அமர்ந்திருப்பீர்கள். நான் ஒரு முக்கியமான நோக்கத்துடன் இங்கு வந்திருக்கிறேன்” என்றார்.

“அந்த நோக்கம் மிகவும் சுயநலமிக்கது. இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு இங்கு கூடியிருக்கும் அன்புக் குழந்தைகளின் ஆசியைப் பெருவதற்காக வந்துள்ளேன்.

மாசற்ற உள்ளங்களைக் கொண்ட குழந்தைகளின் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் இறைவன் தன் செவி சாய்த்து பதில் அளிப்பான். எனவே எனக்காக ஒரு பிரார்த்தனையை அன்புக் குழந்தைகளே நீங்கள் செய்யுங்கள்.

என் வாழ்நாளை இன்னும் சில ஆண்டுகாலம் நீட்டிக் கொள்கிறேன்” என்றவுடன், மாணவர்கள் எழுந்து நின்று கைகூப்பி வணங்கி நின்றார்கள். நன்றி நன்றி என ஆங்கிலத்தில் கூறினார்.

அடுத்து சில ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டுத்தான் மறைந்தார்.

இந்த நிகழ்வுகளை எதற்காக சித்தரிக்கிறேன் என்றால் பிரார்த்தனை என்பது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை புரிந்து கொள்வதற்காகத்தான்.

காந்தி பிறந்த மண்ணில் போரை நிறுத்துக என்று குரல் கொடுக்க தலைமை இல்லை. ஆனால் பிஞ்சுக் குழந்தைகள் நூற்றுக்கணக்கில் ஒன்று கூடி காந்திகிராம அறக்கட்டளையிலும் காந்திகிராம அறக்கட்டளையால் சிவசைலத்தில் நடத்தப்படும் சிறப்புப் பள்ளியிலும் அமைதிக்கான பிரார்த்தனையை நடத்தியுள்ளனர்.

இந்தப் போர் இரண்டு நாடுகளை மட்டும் பாதிக்கப்போவது கிடையாது. மாறாக இந்தப் புவியை நாடுகளின் பொருளாதாரத்தை, இயற்கையை பாழ்படுத்தப் போகிறது.

போர் என்றால் பொதுமக்கள் இறப்பதும், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதும் தவிர்க்க இயலாத நிகழ்வுகள்.

இந்தக் குழந்தைகள் தங்கள் பாடல்களின் மூலம் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் பாதுகாப்பாய் அமைதியாய் வாழ ஆண்டவனை வேண்டினர். இவர்கள் நடத்திய அன்று இரவு ஒரு நிகழ்வு நடந்தது.

ஒரு சில நகரங்களில் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. “Every Prayer is answered and Every call is attended” என்று கூறுவது போல குழந்தைகளின் நம்பிக்கைக்கு இறைவன் செவி சாய்ப்பான் என்று எண்ணத் தோன்றுகிறது.

தாய்மை உள்ளம் படைத்த இறைவனே இந்த நாட்டுத் தலைவர்களின் மனங்களில் உள்ள போர்ச் சிந்தனை வெளியேற, நாடுகளின் ஒற்றுமைக்காகவும் மக்களின் அமைதிக்காகவும் செயல்படும் எண்ணத்தை விதைத்திட வேண்டும் என்று தங்கள் பாட்டின் மூலம் கேட்டுக் கொண்டனர்.

எங்கள் மனங்களில் அன்பும், கருணையும், கனிவும், மன்னிக்கும் தன்மையும் ஒருசேர உதித்தெழுந்து அவரவர் நிலையில் மக்களை புரிந்து அமைதிக்காக பாடுபட ஆண்டவன் அருள வேண்டும் என்று தங்கள் பாடல் மூலம் வேண்டினார்கள்.

அன்பே வடிவான தெய்வமே நாங்கள் உங்கள் முன்

ஒரு நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறோம்

உலக அமைதிக்காக, அதை நீங்கள் அருள்வீர்கள்

என்று நம்புகிறோம்

-என்று பாடி நிறை செய்தார்கள் தங்கள் பிரார்த்தனையை.

இன்றைய சூழலில் இவர்கள் நம் தலைவர்கள் ஒற்றுமை வளர்க்க இயலாமையால் வேற்றுமை பாராட்ட செயல்படுகின்றனர்.

ஆனால் அந்தக் குழந்தைகள் ஆண்டவனிடம் முறையிட்டு, நாட்டுத் தலைவர்களிடம் அவர்களின் சிந்தையில் போரிலிருந்து அமைதிக்குத் திரும்பவும் சிந்தனையை கொண்டுவர வேண்டி முடித்தனர்.

இறைவன் அன்புள்ளம் கொண்டவன் செவி சாய்ப்பான் என்ற நம்பிக்கையில் செயல்படுவோம்.

***

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

க.பழனித்துரை

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

16.03.2022  10 : 50 A.M

 

You might also like