‘கள்ளன்’ படத்தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்!

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் இயக்குநர் சந்திரா பாய் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘கள்ளன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கள்ளன் என்ற தலைப்பில் படம் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை மேலூரைச் சேர்ந்த கலைமணியம்பலம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தமிழக அரசின் ஆவணங்களில் கள்ளன் என்றிருந்த பெயர் பின்னர் கள்ளர் எனத் திருத்தி அமைக்கப்பட்டது. அந்தப் பெயரிலேயே தமிழக அரசு சாதிச் சான்றிதழையும் வழங்கி வருகிறது.

கள்ளன் எனும் பெயரில் எடுக்கப்படும் திரைப்படம், கொள்ளைக் கூட்டச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

இது கள்ளர் சமூகத்தின் பெயரை களங்கப்படுத்தும் வகையிலும், அந்தச் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது.

ஆகவே, கள்ளன் பெயரில் திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்தும் அதன் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி, வழக்கு குறித்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல இயக்குனர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், இயக்குனர் சந்திர பாய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

You might also like