இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31-ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் துவங்கியது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் அமர்வு பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8-ம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக முதல்கட்ட கூட்டத் தொடரில், காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் செயல்பட்டன. தற்போது, கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இரு சபைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு தொடங்கின.
இந்தக் கூட்டத்தொடரில் உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு, அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.