பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகும் பெண்களைப் பற்றியும், அந்நிலைமைக்கு ஆளாக்கும் கும்பல் அல்லது நெட்வொர்க் பற்றியும் சிற்சில ‘பிரேக்கிங்’ செய்திகள் வெளியாகும்போது பதைத்துப் போவோம்.
அப்புறம் வேறொரு பிரச்சனை ‘பிரேக்’ ஆகும்போது, அதைப் பற்றி கருத்து பேச ஆரம்பித்துவிடுவோம்.
அதேநேரத்தில், அந்த பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களது குடும்பத்தினரின் வேதனையோ, அந்த கும்பலின் வக்கிரமோ மேலும் அதிகமாவதை மறந்துவிடுவோம்.
அப்படி மறக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்கான விதையை விதைத்திருக்கிறது ‘எதற்கும் துணிந்தவன்’.
ஒரு பெண்ணின் நிர்வாணம் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்டால் அவர் கூனிக்குறுகி தவறான முடிவுகளைத் தேட வேண்டிய தேவையில்லை என்று சொல்லியிருப்பதே, இப்படத்தை மக்கள் காண வேண்டிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.
மனதைப் பாதித்த சம்பவம்!
சில ஆண்டுகளுக்கு முன் ‘என்னை அடிக்காதீங்கண்ணா..’ என்று ஒரு இளம்பெண் கெஞ்சுவது செய்திகளில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றது நினைவிருக்கலாம்.
பொள்ளாச்சி வட்டாரத்தில் நடந்த இந்த கோரச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு சமீபத்தில் ஜீ5ல் ‘சித்திரை செவ்வானம்’ வெளியானது.
கிட்டத்தட்ட அதே போன்றதொரு களத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது ‘எதற்கும் துணிந்தவன்’ திரைக்கதை.
வழக்கறிஞர் கண்ணபிரான் (சூர்யா), அவரது தந்தை ஆதிராயர் (சத்யராஜ்) இருவரும் தங்கள் ஊர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள்.
இதனாலேயே சிறுவயதில் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட கண்ணபிரான் வழக்கறிஞராக உருமாறுகிறார்.
வடநாடு, தென்னாடு என்று அப்பகுதியிலுள்ள கிராமங்கள் இரண்டாகப் பிரிந்திருக்கின்றன.
வடநாட்டில் திருமணமாகிச் சென்ற தென்னாட்டுப் பெண் ஒருவர் தூக்கிலிட்டு மரணமடைய, இரு பகுதியினருக்கும் இடையே திருமண உறவுகள் நடவாமல் போகிறது. இதனால் பெண்களைக் கவுரவிக்கும் ஊர் திருவிழாவும் தடைபடுகிறது.
தென்னாட்டில் உள்ள கண்ணபிரான், இந்த திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்கிறார். ஆனால் வடநாட்டில் வாழும் இன்பசேகரன் (வினய்) அதனைத் தடுப்பேன் என்று சவால் விடுகிறார். அதற்கேற்ப, கண்ணபிரானின் சித்தப்பா, சித்தி, அவர்களது மகள் மூவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அவர்களது மரணம் மட்டுமல்லாமல், அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பல பெண்களும் இன்பாவின் ஆட்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இந்த உண்மையை மெதுமெதுவாக அறியும் கண்ணபிரான், அவர்களது ஆட்டத்தை நிறுத்த என்ன செய்கிறார் என்பதே ‘எதற்கும் துணிந்தவன்’ திரைக்கதை.
கரணம் தப்பினால் மரணம்!
ஒரு பேமிலி எண்டர்டெய்னராக ஆரம்பிக்கும் கதை வன்முறை வெறியாட்டத்துடன் முடிவடைவது ஒட்டுமொத்த திரைக்கதை ட்ரீட்மெண்டையும் பாதிக்குமோ என்ற எண்ணத்தில், சூர்யாவின் பாத்திரம் எத்தனை கொலைகள் செய்கிறது என்பது குறித்த பேச்சிலிருந்து படம் தொடங்குகிறது.
அதற்கு மாறாக, அடுத்தடுத்த காட்சிகளில் காமெடி, காதல், குடும்ப பாசம் என்று நகர்வது தொடக்கத்திலிருந்த மனநிலையை முற்றிலுமாகத் தடம் புரளச் செய்கிறது.
படம் முழுக்க திரைக்கதையில் ஒரேவித ‘உணர்ச்சி’ மேலோங்கும் தன்மை சமீபத்தில் பரவலான நிலையில், நேரெதிராக 80கள், 90களில் வந்த திரைப்பட பார்முலாவை பின்பற்றியிருக்கிறது.
இயக்குனர் பாண்டிராஜை பொறுத்த வரையில், இது ‘கரணம் தப்பினால் மரணம்’ டைப் முயற்சி.
அவரது முந்தைய படங்களிலும் முன்கதை, பிளாஷ்பேக், நகைச்சுவை, சென்டிமெண்ட், ரசனையான காதல் காட்சிகளோடு சமீபத்திய சென்சேஷன் செய்திகளும் இடம்பெற்றிருக்கும் என்றாலும், இதில் ஒட்டுமொத்த கதையும் ஒரு கோரமான கிளைமேக்ஸ் நோக்கி நகர்வது குறிப்பிடத்தக்கது.
திரைக்கதையில் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் இன்பசேகரன் என்ற தனியொரு மனிதனின் வக்கிரங்களாகவே காட்டப்பட்டிருக்கின்றன. அதுவும் கூட தனிப்பட்ட பகைக்காகவே இவ்வாறு நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இவ்விஷயத்தில் அரசியல் மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்களின் பங்கு குறித்து சிறிதளவுகூட விவாதிக்கப்படவில்லை. ‘சி.செ.’ திரைப்படம் இவற்றை லேசுபாசாக பேசியிருக்கும்.
ஒட்டுமொத்த கதையும் சூர்யாவின் ஹீரோயிசத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருப்பதால், இதிலுள்ள ‘லாஜிக் மீறல்கள்’ குறித்து பேசுவது மரபாகாது. ஆனாலும், அவரது பாத்திரத்தை அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ளவராக காட்டியது ஏன் என்பது மட்டும் கடைசிவரை புரியவில்லை.
நல்ல பேக்கேஜ்!
’கஜினி’க்கு அடுத்து ‘ஆறு’, ’வாரணம் ஆயிரம்’ படத்திற்கு பின்னர் ’அயன்’, ‘ஆதவன்’, ‘சிங்கம்’ என்று விமர்சனரீதியாகப் பெயர் பெற்ற படங்களைத் தொடர்ந்து முழுக்க கமர்ஷியல்மயமான படங்களில் நடிப்பது சூர்யாவின் வழக்கம்.
அந்த வகையில், ‘ஜெய் பீம்’க்கு பிறகு இதில் நடித்துள்ளார்.
ஆடும்போது துடிப்பு, சண்டைக் காட்சிகளில் உக்கிரம், காதலில் குழைவு, நகைச்சுவையில் டைமிங் என்றிருந்தாலும், ‘கஜினி’ காலத்து சூர்யா காணாமல்போய் விட்டதாகவே படுகிறது.
அவரது கடினமான உடற்பயிற்சிகளையும் மீறி பருமனடைந்திருப்பது கூட இதற்கொரு காரணமாக இருக்கலாம்.
மிக முக்கியமாக, ‘உள்ளம் உருகுதய்யா’ பாடலில் முருகன் வேடத்தில் அவர் வரும்போது, ’கந்தன் கருணை’யில் நடிக்கும்போது சிவகுமாரின் வயது 25தான் இருக்குமென்பது நினைவில் வந்து போகிறது.
சர்ச்சையாகாவிட்டால் பெயரை மாற்றிக்கொள்கிறேன் என்பது போல, அப்பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்யப்பட்டிருப்பது இன்னொரு கொடுமை.
பாண்டியராஜின் ‘பசங்க’ தொடங்கி ‘வம்சம்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ உட்பட அனைத்து நாயகிகளின் கலவையாகத் தென்படுகிறார் பிரியங்கா அருள்மோகன்.
சூர்யாவோடு ஆடும்போது ’சின்னப்பொண்ணு’ என்று எண்ண வைப்பது ‘கேங்லீடர்’ரில் நடித்தவரா இவர் என்று மலைக்க வைக்கிறது.
சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் இருவரும் ஒரு ஆண் பிள்ளையை வளர்க்கும் ‘ஐடியல்’ பெற்றோராக வந்து போக, நாயகியின் பெற்றோராக வரும் இளவரசுவும் தேவதர்ஷிணியும் ‘காமெடிபீஸ்’களாக திரையில் தோன்றியிருக்கின்றனர்.
திவ்யா துரைசாமி மற்றும் சரண் சக்தி சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் திரைக்கதையின் ஆதாரம் எனும்போது, அப்பகுதி விரிவாக்கம் செய்யப்படாமல் தவிர்த்தது ஏனோ?!
எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜெயபிரகாஷ், சுப்பு பஞ்சு உட்பட பல குணசித்திர நடிகர்கள் இடைச்செருகலாக வந்து போயிருக்கின்றனர். வினய்யின் அடியாட்களாக வருபவர்களும் கூட அப்படியே.
சூரி, புகழ், சூர்யாவின் ஜூனியர்களாக வரும் ராமர் போன்றவர்கள் ஆங்காங்கே ’ஹே’ என்று புன்னகைக்க வைத்திருக்கின்றனர். அந்த இடத்தை ஒட்டுமொத்தமாக இளவரசு கையில் எடுத்துக் கொண்டிருப்பது ஆறுதல்.
‘டாக்டர்’ போல இப்படத்திலும் தோற்றம் மற்றும் குரலால் மிரட்டியிருக்கிறார் வினய். இனி தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியிலும் கூட அவர்தான் ‘ஸ்டைலிஷ்’ வில்லன் என்று உத்தரவாதம் தருமளவுக்கு அவரது இருப்பு அமைந்திருக்கிறது.
கடைக்குட்டி சிங்கம், நம்மவீட்டு பிள்ளை போன்று இப்படத்தையும் கலர்ஃபுல்லாக காட்ட பாண்டிராஜுக்கு உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.
திரைக்கதையைப் பொறுத்தவரை படத்தொகுப்பாளர் ரூபன் பணி ‘ஸ்மூத்’தாக இருந்தாலும், சூளையில் இடம்பெற்ற ‘ஸ்டண்ட்’ காட்சி அதற்கு மாறாக அமைந்திருக்கிறது.
ராம்-லட்சுமணின் சண்டைக்காட்சி வடிவமைப்பு ஸ்டைல் அப்படித்தான் இருக்குமென்றாலும், முழுமையாகவே ஒரு ‘மாண்டேஜ்’ போன்றிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
இமான் இசையில் ‘சும்மா சுர்ருன்னு..’ பாடல் மட்டுமே சட்டென்று ஈர்க்கிறது. அதற்கு சேர்த்து வைத்து பின்னணி இசையில் ரசிகர்களை விசிலடிக்க வைத்திருக்கிறார்.
காலத்திற்கும் தாங்கும் ஒரு மெலடி இந்த ஆல்பத்தில் மிஸ்ஸிங் என்பதை இமான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு பெரும்படையைக் கட்டி மேய்ப்பது இயக்குனருக்கு பெரிய சவால் இல்லை என்றாலும், வெவ்வேறு கிளைக்கதைகளை, உணர்வுகளை ஒரே புள்ளி நகர்த்துவது மலையைக் கட்டி இழுக்கும் காரியம் தான்.
அந்த வகையில், ஒரு வழக்கமான தெலுங்கு படத்திற்கான திரைக்கதை கட்டமைப்பை கையிலெடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.
அது, தமிழ்நாட்டு கிராமங்களில் இருப்பவர்களும் ரசிக்கும்படியாக கையாண்டிருக்கிறார்.
சர்ச்சை தேவையா?
நாயகியை முருக பக்தையாக காட்டியதால், ‘உள்ளம் உருகுதய்யா’ பாடலை உருவாக்கும் யோசனை இயக்குனருக்கு வந்திருக்கலாம்.
ஆனாலும், அதிலுள்ள நடன அசைவுகள் சர்ச்சையாகும் என்று தெரிந்தும் அனுமதித்திருப்பது ஏன்? பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான குரல்கள் ஓங்குவதை இது தடை செய்யாதா?
ஒரு முக்கியப் பிரச்சனைக்கு தீர்வு வன்முறைதான் என்று காட்டுவது, சாதாரண மனிதர்களால் ஒருபோதும் அதனை எதிர்கொள்ளவே முடியாது என்ற எண்ணத்தை தூண்டாதா என்பது உட்பட பல கேள்விகள் ‘எதற்கும் துணிந்தவன்’ பார்க்கும்போது எழுகின்றன.
பார்த்தவுடன் ஒரு திரைப்படத்தின் தாக்கம் மறைந்துவிடும் என்பதே அதற்கான பதிலாக அமைகிறது.
இப்படத்தின் கருவுக்கு எதிரானது அது என்பது பிடிபடுகிறது. இதையெல்லாம் மீறி இளம்பெண்கள் சில காட்சிகளுக்கு ஆரவாரிப்பதையும் காண முடிகிறது.
பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்பட்ட பெண் தன்னை மாய்த்துக்கொள்வதைவிட சம்பந்தப்பட்டவர்கள் கூனிக் குறுகும் வண்ணம் ‘துணிவே துணை’ என்று வாழ வேண்டுமென்றும், அதற்கு அப்பெண்ணின் சுற்றம் துணை நிற்க வேண்டுமென்றும் சொல்லியிருப்பது மட்டுமே இப்படத்தின் சிறப்பம்சம்.
அது மட்டுமே இத்திரைப்படத்தை பெருவெற்றி பெறச் செய்யும்!
-உதய் பாடகலிங்கம்