பாலு மகேந்திரா – கல்லூரி மாணவிகள் – கருத்து மோதல்!

ராசி அழகப்பனின் தாயின் விரல்நுனி: தொடர்-11

****

எண்பதுகளின் துவக்கத்தில் ஜர்னலிஸம் என்பது பத்திரிகையாளர் பார்வையில் வெளியிலிருந்து வருகிற செய்திகளை அல்லது தான் விரும்புகிற முக்கியமான பிரமுகர்களின் பேட்டிகள், விருப்பங்களை, சூழல்களைத் தொகுத்து சுவாரசியமாக தருவதாக இருந்தது. அதை உடைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

உடைப்பது என்றால் எதோ விபரீதம் என்று எண்ணி விட வேண்டாம். புதிதான சிந்தனை என்று கூட சொல்லிவிட முடியாது.

ஒரு புது எழுச்சியான நோக்கத்தை வாசகனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைத்தான் ஆசிரியர் வலம்புரிஜான் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் உடனே செய்யுங்கள் என்று ஆச்சரியத்தோடு பார்த்தார்.

பிறகு, “நீ சொல்வது நடக்குமா?” என்று கேட்டார்.
“நடக்குமா என்றால் நடத்திக் காட்டுவோம்“ என்றேன்.
“என்ன திட்டம் விரிவாகச் சொல்லுங்கள்?” என்றார் வலம்புரிஜான்.

நீண்ட காலமாகவே மக்கள் என்ன விரும்புகிறார்களோ? சமூகத்தில் என்ன நடக்கிறதோ அதைத்தான் நாங்கள் திரைப்படத்தில் காட்டிக் கொண்டு இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிற கலைஞர்களை மக்கள் முன் சந்திக்க வைத்து அதை அப்படியே வெளியிடுவோம்.

மக்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இடைவெளி இல்லாத ஒரு சூழலை உருவாக்கி, மக்கள் கேள்வி கேட்க, படைப்பாளிகள் பதிலளிக்க வேண்டும்” என்று நான் நினைத்ததைச் சொன்னேன்.

“இந்த யோசனை சிறப்பாக இருக்கிறது என்றாலும் அதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறதே என்று ஆசிரியர் ஐயம் எழுப்பினார்.

“பார்த்துக் கொள்ளலாம் ஐயா“ என்று நான் சொன்னேன்.

“சரி” என்று சம்மதித்தார்.

அதைத் தொடர்ந்து, எங்கே இருந்து தொடங்குவது? யாரை வைத்து தொடங்குவது?
என்ன மாதிரியாக இது வெளிவர வேண்டும்? என்றெல்லாம் ஆலோசனை செய்ய நேர்ந்தது.

இது போன்ற முயற்சிகளை முன்னெடுக்க ஆர்வமாக இருப்பவர் எந்த இயக்குனர்?
யோசித்துப் பார்த்ததில் இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா தென்பட்டார்.

உடனே சாலி கிராமத்திற்குச் சென்று நின்றேன்.

அது மூங்கில் தடுப்புகளைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்ட முதல் மாடி அறையில் பாலுமகேந்திரா இருந்தார்.

ஆனால் எப்படி அழைப்பது?

அப்போது அவரிடம் எந்த தொலைபேசி தொடர்பும் இல்லை.

எனவே கேட்டின் கதவை பலமாகத் தட்டினேன்.
அவர் மனைவி அகிலேஷ்வரி வந்தார்.
என்ன? என்று கேட்டார்.

நாங்கள் வந்த விவரத்தைச் சொல்ல – “சரி கேட்டுச் சொல்கிறேன்“ என்றார்.

சில நிமிடங்கள் கழித்து உள்ளே இருந்து “வாருங்கள்”  என்று குரல் வந்தது.

அது பாலு மகேந்திராவின் குரல்.

மேலே சென்றோம்.

மூங்கில் தட்டிகள் அடங்கிய அந்த அழகிய அறையில் அவர் முதலில் தேநீர் கொடுத்தார்.
அந்த சுவை குறைவதற்கு முன்பாகவே நம்முடைய கோரிக்கையை எடுத்து வைத்தோம்.

“அட இதைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழ் சினிமாவில் இது தான் நடந்திருக்க வேண்டும்.

மக்களைப் பற்றிய நினைவுகளோடு மக்களின் வாழ்வியலோடு, மக்களின் மன ஓட்டக் கேள்விகளை புரிந்துகொண்டு தமிழ் திரைப்பட உலகம் செயல்பட வேண்டும்? என்று நினைப்பவன். நீங்கள் அதை செய்ய முனைகிறீர்கள்.

பரவாயில்லை, நீங்கள் எங்கே வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யுங்கள். நான் வருகிறேன்“ என்றார்.

அப்போது தமிழ்த் துறையில் பேராசிரியையாக அரசு மணிமேகலை காயிதே மில்லத் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

நான் அவர்களோடு பல சமயம் மேடைகளில் இலக்கிய நிகழ்வுகளில் பேசியிருக்கிறேன்.

எனவே அவரைத் தொடர்பு கொண்டு கேட்டேன்.

கல்லூரி முதல்வரைக் கேட்டு உடனடியாக ஒரு நாளைக் குறித்து ஏற்பாடு செய்து தந்தார்.

மூன்றாம் பிறை வெளிவந்து சக்கை போடு போட்ட நேரம் மாணவிகளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

பாலுமகேந்திராவை மிகவும் மரியாதையோடும் அன்போடும் வரவேற்று அமர வைத்தார்கள்.

அதற்கு முன் பல மொழிகளில் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திரா அவர்கள் பணியாற்றி இருந்தாலும் மூடுபனி, அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, கோகிலா போன்ற படங்கள் அவருடைய பெயரை உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தி வைத்திருந்தது.

மாணவிகள் கேள்வி கேட்டு துளைத்து எடுத்து விட்டார்கள். அவரும் அசராமல் பதில் சொன்னார்.

மாணவிகள் கேட்ட கேள்வி இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

படங்களில் ஏன் காதலனும் காதலியும் மரத்தைச் சுற்றி இன்னும் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள்?

தேவையில்லாத சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் திரைப்படத்தில் அதிகமாக இருக்கிறது?

தேவையில்லாமல் ரேடியோ டிராமா போல் ஏன் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்று கேட்டார்கள்.

இது தன்னைப் பற்றியதில்லை என்றாலும், சிரித்துக் கொண்டே பாலுமகேந்திரா பதில் சொன்னார்.

“அதற்கு, படம் பார்க்கிற நீங்கள் தான் காரணம்” என்று சொல்லி சிரித்தார்.
“என்ன சொல்கிறீர்கள்?“ என்று ஒரு மாணவி எழுந்து கேட்டார்.

“ஆமாம். சரியாகத்தான் சொல்கிறேன். நீங்கள் காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள்.

இதுபோன்ற படங்களை நீங்கள் அதிகமாக பார்க்கும் போது மீண்டும் மீண்டும் தொழிலில் முதலீடு செய்பவர்கள் இது பிடித்திருக்கிறது என்பதால் இதுதான் சக்சஸ் பார்முலா என்று தொடர்ந்து படம் எடுக்கிறார்கள்.

நீங்கள் ஒருமுறை தவிர்த்துப் பாருங்கள், இது போன்ற படங்கள் வருவது குறையும்“ என்றார்.

மாணவிகள் மத்தியில் நிசப்தம் நிலவியது.

“உங்களை மட்டும் நான் குறை சொல்லிப் பயனில்லை. படம் தயாரிக்கிற, இயக்குகிற எங்கள் கலைஞர்களுக்கும் அதில் முக்கிய பங்கு இருக்கிறது.

திரைப்படங்கள் ஒரு கேளிக்கையான, பொழுதுபோக்கு தான் என்றாலும், அதில் படைப்பாளனுக்கு அதிக கவனம் இருக்க வேண்டும்.

மக்களின் வாழ்வில் கூறுகளில் இருந்து படம் எடுக்க வேண்டும். சுற்றுப்புறச்சூழலின் முரண்களில் இருந்து நாம் சிலவற்றை மக்களுக்கு எடுத்து இயம்ப வேண்டும்.

ஒரு நாவல் படிக்கிற போது என்ன திருப்தி கிடைக்கிறதோ அந்த திருப்தியை திரைப்படத்தில் கொண்டு வந்து தர வேண்டும்.

என்னுடைய படங்களில் அது நிச்சயம் இருக்கும். அதை நான் வெகு விரைவில் சாத்தியப்படுத்துவேன்” என்று அப்பொழுது சொன்னார்.

அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது.

அதன் பின் அவர் பல்லாண்டு காலம் தமிழ் திரைப்பட உலகிலும், பல மொழிகளிலும் பயணித்தார். அவர் சொன்னது போல் வீடு, சந்தியாராகம், தலைமுறைகள் என்று கலைத்தன்மை வாய்ந்த படங்களை தந்துவிட்டுப் போனார்.

இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியாக நான் இயக்கிய ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படத்திற்கு அழைக்காமலேயே இசை வெளியீட்டு விழாவில் வந்து கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.

“சிறுவர்களுக்கான திரைப்படங்கள் தமிழில் குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் நீ தைரியமாக எடுக்கிறாய் என்பதற்காக நான் வந்து உன்னை வாழ்த்துகிறேன்“ – என்று பேசிவிட்டுப் போனது இப்போதும் நினைவிருக்கிறது.

மாணவிகளுடனான கலந்துரையாடல் முடிந்து அந்தக் கல்லூரியை விட்டு வெளியே செல்கிறபோது சொன்னார்,

“எந்த வார இதழ்களும் செய்யாத ஒரு நல்ல பணியை ‘தாய்’ செய்கிறது என்று ஒரு முத்திரைச் சொல்லாக சொல்லிவிட்டுச் சென்றார்.

அதை வலம்புரிஜனிடம் சொன்னபோது, ”அதுதான் மகா கலைஞனுடைய மனம் திறந்த வார்த்தைகள்“ என்று சொல்லி சிலாகித்தார்.

முள்ளும் மலரும், உதிருப்பூக்கள் தந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களை சிறு கடைக்காரர்களுடன் பேச வைத்து அதைத் தொகுத்து வெளியிட்டோம்.

துக்ளக்கில் எழுதிக் கொண்டிருந்த கைகளில் சுதந்திரமான பார்வை வெளிப்பாடாக அது அமைந்தது.

இதோடு நின்றுவிடவில்லை. இயக்குனர் துரை, எழுத்தாளர் பாலகுமாரன், நடிகர் சந்திரசேகர், நடிகை காந்திமதி, நடிகை சுகாசினி என்று பலரையும் மக்களுக்கு நேருக்கு நேராக சென்று சந்தித்து அதனுடைய பிரதிபலனாக கட்டுரைகளை நாங்கள் வெளியிட்டோம்.

இன்னும் சொல்லப்போனால் நடிகர் பாண்டியன் அவர்களை  நகரப் பேருந்தில் பிரயாணம் செய்ய வைத்து, நடத்துனரிடம் அனுமதி கேட்டு அவர் டிக்கெட் கொடுத்து அதில் கிடைக்கும் அனுபவங்களை வெளிக் கொணர்ந்தோம்.

அவர் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டு கண்டக்டர்கள் எப்படித்தான் டிக்கெட் தருகிறார்கள் என்று வியந்து பேசியது இன்னும் நினைவிருக்கிறது.

நடிகர் சந்திரசேகர் அவர்களை இன்னும் ஒரு படி மேலே சென்று என்ன செய்தோம் தெரியுமா?

நிழல்கள், பாலைவன ரோஜாக்கள் என்று புகழ் பெற்ற நேரம்.

அவரை தெருக்களில் அழைத்துக்கொண்டுபோய் மக்களிடம் உரையாடி அவர்களின் இன்ப துன்பங்களைக் கேட்டறிந்து அதை ஒரு நாள் சம்பவமாக பதிவு செய்தோம்.

காந்தி மதியை ஒரு சாலையில் அமர வைத்து பூக்களைக் கட்ட விற்றுக் கொடுக்குமாறு அமர வைத்தோம்.

கிட்டத்தட்ட ஐந்து ஆறு மணி நேரம் பூக்களை சாதுரியமாக தொடுப்பது விற்பது எப்படி என்று அவரும் கற்றுக்கொண்டார்.

“அட டா சினிமாவுல வேலை இல்ல போல அதான் இப்படி வந்துட்டாங்க“ என்று வருத்தப்பட்டு பேசியது கேட்டோம்.

“இந்தாப்பா தம்பி பாத்தாயா ஜனங்க என்ன சொல்றாங்கன்னு . இதான் நிலமை. கடைசிவரைக்கும் ஓஹோன்னு சினிமாக்காரங்க இருப்பாங்கன்னு நினைக்கிறாங்”
என்று சொன்ன அந்த நினைவுகளை அப்பொழுது நாங்கள் பதிவு செய்தோம்.

இயக்குனர் துரை அவர்கள் பல படங்கள் இயக்கி இருந்தாலும் ‘பசி‘ என்ற படத்திற்குப் பிறகு கவனிக்கும் இடத்திற்கு மாறினார்.

இந்தப் பசி கதை அம்சத்தை எவ்வாறு எடுத்தது என்று மீனாட்சி கல்லூரியில் அவர் பகிர்ந்துகொண்டது ஒரு சிறப்பான பதிவு.

இப்படியாக கலைஞர்களுக்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க நிகழ்வுகளை ஏற்படுத்திக் கொடுத்து மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள வழிவகை செய்தது தாய் வார இதழ் என்று சொன்னால் அது மிகையாகாது.

மிஸ்டர் பாரத் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் 24 மணி நேரம் உடன் இருந்து எழுதினேன்.

அவர் வீட்டில் இருந்து கிளம்பி படப்பிடிப்புச் செல்வது, நடிப்பது, பிறகு ரசிகர்களை சந்திப்பது, நண்பர்களைச் சந்திப்பது, ஓய்வு நேரத்தில் அவருடைய செயல்பாடு, மீண்டும் மக்களை அவர் சந்திப்பது என்று ஒரு நாள் முழுவதும் அவருடன் இருந்தேன்.

உள்ளது உள்ளபடியே எழுதி வாசகர்களிடம் ஒரு புதிய ரசனையை உருவாக்கினோம்.
நடிகை சுகாசினி ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் நடித்து பிரபலமான சமயத்தில், எல்டாம்ஸ் ரோடு சாம்கோ ஓட்டல் அருகில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் அனைத்துக் கல்லூரி மாணவர்களை அழைத்துச் சென்று விவாதம் நிகழ்த்தினோம்.

என்னவோ தெரியவில்லை அப்போதும் சரி, இப்போதும் சரி மக்கள்மீது அதிக ஈடுபாடு கொண்டவர் சைதை துரைசாமி. அப்பொழுது அவர் அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தார்.

அவருடைய சைதை தொகுதியை இரண்டு நாட்கள் அவருடன் சென்று சுற்றிப் பார்த்து குறை நிறைகளை நாங்கள் ‘தாய்’ வார இதழில் பதிவு செய்து அனைவரையும் பிரமிக்கச் செய்தோம்.

பிறகு ஓராண்டு கழித்து அவரிடம் சொன்ன குறைகள் தீர்க்கப்பட்டதா என்று நாங்கள் தனியாக சென்று பார்த்து மறுபடியும் அதையும் வெளியிட்டோம்.

இப்படி இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்பதை ஜூனியர் விகடன் வருவதற்கு முன்பாகவே நாங்கள் தொடங்கி விட்டோம், அதாவது தாய் தொடங்கி விட்டது என்று தான் கருதுகிறேன்.

நாங்கள் வேகவேகமாக அதிக பக்கங்கள் எழுதுகிறோம் என்று கருதி அங்கே இருந்த பொறுப்பாளர் எங்களுடைய கட்டுரைகளை பல சமயம் மறைத்து வைத்து தாமதப்படுத்துவது வழக்கம்.

இதைப் புரிந்து கொண்ட ஆசிரியர் நேரடியாக என்னிடம் கொண்டுவந்து தாருங்கள் என்று சொன்னதும் உண்டு.

இரவு 11 மணிக்கு மேல் வெளியில் சென்று பேட்டி எடுத்து வந்து அவரிடம் தொலைபேசியில் சொல்வோம். அவரோ நேரடியாக நீங்கள் கம்போஸ் செய்ய சகாயத்திடம் கொடுத்து விடுங்கள். அது தலைப்புச் செய்தியாக வரட்டும் என்று சொல்லி விடுவார்.

நாங்கள் அங்கேயே தங்கி படுத்து உறங்கி அது பிரசுரமாகி வெளிவரும் நிலைவரை இருந்ததும் உண்டு.

ஒரு பத்திரிகை என்பது வந்த செய்திகளை போடுவது மட்டுமல்ல, நாம் தேடிப் போய் செய்திகளை சேகரித்துக் கொண்டு வருவது முக்கியம்.

அதுவும் மக்களின் மனக் குறிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

இலக்கியப் படைப்பின் தரமாக இருக்க வேண்டும் என்பதும் அவசியம் என்பதை புரிந்து கொண்ட வலம்புரிஜான் அவர்கள் எங்களுக்கு அந்த உரிமையை வழங்கினார்.

இளைஞர்களும், இலக்கியத்தை விரும்பும் இலக்கியவாதிகளும், பெரும்பாலான பொதுத்தள தமிழ் வாசகர்களும் விரும்பிப் படிக்கிற வார இதழாக ‘தாய்’ மலர்ந்த நேரத்தில் பல்வேறு தரப்பில் வரவேற்பு வந்தன.

அதே சமயம் இந்த இதழின் வளர்ச்சி பார்த்து பொறாமைப் படாதவர்கள் உண்டா என்ன?
அப்படி நடந்த சம்பவமும் உண்டு.

(தொடரும்…)

10.03.2022  10 : 50 A.M

You might also like