– ஊழல் வழக்கில் நீதிபதி கேள்வி
தேசிய பங்குச் சந்தையின் ‘கோ லொகேஷன்’ எனப்படும், கணினிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் ‘சர்வர்’ கட்டமைப்பு, வெளி ஆட்களால் முறைகேடாக கையாளப்பட்ட வழக்கில், அதன் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை ஏழு நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால் அனுமதி அளித்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “தேசிய பங்குச் சந்தையிலேயே ஊழல் நடந்தால், இந்தியாவில் யார் முதலீடு செய்ய விரும்புவர். இது, நம் நம்பகத் தன்மையை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கின் புலனாய்வில் காலம் கடத்த வேண்டாம். ஏற்கனவே நான்கு ஆண்டுகளாக புலன் விசாரணை செய்து வருகிறீர்கள்.
இப்போது தான், ஊழலில் சித்ரா ராமகிருஷ்ணா உட்பட உயரதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்த புலனாய்வை துவங்கி உள்ளீர்கள்.
இந்த ஊழலில் தொடர்புள்ளோர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டனரா என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யிடமும் விசாரணை நடத்த வேண்டும்” என ஆஜரான சி.பி.ஐ. அதிகாரியிடம் நீதிபதி சஞ்சீவ் அகர்வால் உத்தரவிட்டார்.
10.03.2022 12 : 30 P.M