உலக அளவில் அதிகம் தடை செய்யப்பட்ட நாடு ரஷ்யா!

ஆய்வில் வெளிவந்த தகவல்

உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் பறக்க வான்வெளித் தடை விதித்துள்ளன. அந்நாடுகளின் பிரபல நிறுவனங்களும் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு வர்த்தகத் தடைகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்டெலும் (castellum) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் ரஷ்யா மீது இதுவரை 5,532 தடைகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பிறகு 2,778 தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சுவிட்சர்லாந்து 569 தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 518 தடைகளையும், பிரான்ஸ் 512 தடைகளையும் விதித்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை உக்ரைன் மீதான போருக்கு பிறகு 243 தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக 2014-ம் ஆண்டு முதல் ரஷ்யா மீது அதிக தடை விதித்துள்ள நாடு அமெரிக்கா.

இதுவரை 1,194 தடைகளை ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ளது.

ரஷ்யாவைத் தொடர்ந்து அதிக தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் இடம்பெற்றுள்ளது.

அந்த நாடுகளைத் தொடர்ந்து சிரியா மற்றும் வடகொரியா, இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக காஸ்டெலும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

08.03.2022  5 : 30 P.M

You might also like