தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு பிரிவு தொல்லியல் துறை. ஆய்வுதான் இதன் நோக்கம். 1985-லிருந்து ஐந்து ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் இந்த ஆய்வுகள் நடந்திருக்கின்றன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் – சென்னிமலைக்குத் தென்மேற்கில் ‘கொடுமணல்’ கிராமம்.
இந்த இடத்தில் ஆய்வைத் துவங்கியதுமே வியப்பு. அபூர்வமான பழங்கால மணிகள், காசுகள் இப்படித் தாராளமாகக் கிடைக்க, அதிசயத்துடன் இன்னும் தோண்டினார்கள். ஒரு பழங்காலக் கிராமமே புதைந்திருக்கிறது அந்தப் பகுதியில்.
தோண்டப்பட்டது மொத்தமாக சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பு மட்டுமே. பழங்காலத் தமிழர்கள் வாழ்ந்த வீடுகள்.
சுண்ணாம்புச் சரளையும், செம்மண்ணுமாகக் கெட்டிப்படுத்தப்பட்ட தரை. தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்த கல்லறைகள். அதனுள்ளே இரும்பினாலான கத்தி, கேடயம், அம்பு நுனி போன்றவை.
சிலவற்றில் துல்லியமான மண்டை ஓடுகள் இப்படிப் பல ஆச்சரியங்கள் அந்த மண்ணில்.
“கி.மு. 300-க்கும், கி.பி. 300-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் கிராமம் இருந்ததாகச் சொல்லலாம்.
கொடுமணலில் நடந்த இந்த அகழாய்வு குறிப்பிடத்தகுந்த ஒன்று. தமிழ்நாட்டில் நடந்த பெரிய அகழாய்வாக இதைச் சொல்லலாம்.
இங்கு பல தடயங்கள் கிடைத்திருக்கின்றன. மதிப்பு மிக்க மணிகள், இரும்புக் கசடு, காசுகள், நெசவுக்கான அடையாளங்கள், எழுத்து பொறிக்கப்பட்ட சில சின்னங்கள் கிடைத்திருக்கின்றன.
கொடுமணலில் மணிகள் செய்யும் வேலை அப்போதே நடந்திருக்கிறது. காங்கேயம் சுற்றியுள்ள பகுதியில் ‘பெரில்’ வகைக் கற்கள், நீலக் கற்கள், ‘குவார்ட்ஸ்’ என்கிற வெள்ளைக் கற்கள் கிடைக்கின்றன.
அதைக் கொடுமணலுக்கு எடுத்து வந்து மணிகளாக்கி அப்போதே ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்” என்கிறார் தொல்லியல் துறையைக் சேர்ந்த டாக்டர் கா.ராஜன்.
“ஏற்றுமதி செய்ததற்கான தடயங்கள் ஏதாவது கிடைத்திருக்கிறதா?” கேட்கிறபோது தொடர்கிறார்,
“இலங்கையில் இருக்கும் சொல்வழக்கில் இங்கு சில அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. கொடுமணலைச் சுற்றி ஏராளமான ரோமானியக் காசுகள் கிடைத்திருக்கின்றன. இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இதோடு, ரோமானியப் பானை ஓடுகளும், பொம்மைகளும் கிடைத்ததை வைத்துப் பார்த்தால் கொடுமணலிலிருந்து மணிகள் சேரநாட்டு முசிறி துறைமுகம் மூலம் ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியாகியிருப்பதை உணர முடிகிறது.
இம்மாதிரி கிடைத்த பொருள்களை விஞ்ஞானப் பகுப்பாய்வு செய்ய அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம், பூனாவிலுள்ள ஒரு கல்லூரி,
அகமதாபாத்தில் உள்ள பௌதீக ஆய்வுக் கூடம் – இப்படிப் பல இடங்களுக்கு அனுப்புகிறோம். ‘ரேடியோ கார்பன் டேட்டிங்’ மூலம் அந்தப் பொருள்களின் காலம் தெரியவந்தது.
இதன் மூலம் சங்ககாலம் பற்றி சில தெளிவான முடிவுகளுக்கு வர முடிகிறது. இரும்புக்கான மூலப் பொருள்களை உருக்கி எஃகாக அப்போதே ஆக்கியிருக்கிறார்கள். தக்களி வைத்து நூல் நூற்றிருக்கிறார்கள். கல்விநிலை உயர்ந்திருக்கிறது.
ஆதன், அந்துவன், அந்தவன், அந்தை என்கிற சங்ககாலப் பெயர்கள் பானை ஓடுகள் மூலம் கிடைத்திருக்கின்றன. (பழந்தமிழ் எழுத்துகளில் அப்போதே ‘ஸ’, ‘ஷ’ போன்ற வடமொழி எழுத்துகள் இணைந்திருக்கின்றன. ‘ஸாத்தன்’ என்று எழுதியிருக்கிறார்கள் ஆதன் என்கிற குலப்பெயர்கள் தென்பட்டிருக்கின்றன.
அந்தக்காலத் தமிழர்களின் பெயர்கள் சில. ‘பண்ணன், அசடன்(!) கண்ணன், சம்பன்’ தூய தமிழில் பெயர் வைக்கச் சிரமப்படுகிறவர்கள் இதில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். (உபயம்: கொடுமணல்!) வெள்ளி முத்திரை நாணயப் புழக்கம் இருந்திருக்கிறது.
குஜராத் உள்பட்ட பல வட மாநிலங்களுடன் வணிகத் தொடர்பிருந்திருக்கிறது. விவசாயத்தில் – வெண்டை, இலந்தை, வரகு, சோளம் உபயோகப் படுத்தப்பட்டிருக்கின்றன.
‘பிராகிருதம்’ என்கிற சம்ஸ்கிருதத்திற்கு முந்தைய மொழியின் அடையாளங்களும் இங்கு தென்படுகின்றன.
மயானங்களில், இறந்தவர் உபயோகித்த ஆயுதங்களையும் சேர்த்துப் புதைத்திருக்கிறார்கள். ஒரு குழியில் வெண்கலத்தில் செய்த புலிச்சின்னம்கூடக் கிடைத்தது.
ஒரு குழியில் தோண்டியபோது அதில் ஆண், பெண், சிறு குழந்தை என்று சிறு குடும்பமே புதைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் நடுகற்கள். இதெல்லாம் சங்க காலத்தின் வளமான வாழ்க்கையையே தெரிவிக்கின்றன.”
சரி. இந்த இடத்தில் தோண்ட வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு தொல்லியல் துறையைச் சேர்ந்த புலவர் செ.ராசு சொன்ன பதில்:
“சங்க இலக்கியத்திலே ‘கொடுமணம்’ என்கிற குறிப்பு வருகிறது. இங்கு கிடைக்கும் பொருளை ‘வினைமாண் அருங்கலம்’ என்று கபிலரும், அரிசில் கிழாரும் பாடியிருக்கிறார்கள்.
இங்கு ஓடும் நொய்யலாற்றைப் பற்றிய குறிப்பு பதிற்றுப்பத்தில் இருக்கிறது. கொங்குப் பகுதியில் ஏரோட்டும்போதும், மழை பெய்யும்போதும் மணிகள் வெளிப்படுவதைப் பல புலவர்கள் பாடியிருப்பதை வைத்து கொடுமணம்தான் கொடுமணல் என்கிற கணிப்பில் இந்த ஆய்வில் இறங்கினோம்.
இதன் மேற்பரப்பு ஆய்விலேயே அரிய பொருட்களெல்லாம் கிடைத்தன. முன்பு 1946-47-ல் பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள அரக்கமேட்டில்தான் இதைப் போன்ற பெரிய அகழாய்வு நடந்தது. அதற்குப் பிறகு தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க அகழாய்வு கொடுமணல்தான்.
“ஏறத்தாழ எழுபதாயிரம் ரூபாய் தொகையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுக்குப் பின்னர் பல்கலைக்கழக மானியக் குழு ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. அதோடு சரி, மேற்கொண்டு ஆய்வைத் தொடர முடியவில்லை.
காரணம் – நிதிப் பற்றாக்குறை. தமிழ்நாட்டின் பழைமையைப் பற்றி ஒரு தெளிவான கணிப்புக்கு வர உதவியிருக்கக்கூடிய இந்த ஆய்வு அரைகுறையான நிலையில் இன்று நிற்கிறது.
யுனெஸ்கோவுடன் நிதிக்காகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதற்குள் தமிழ்நாட்டில் இந்தப் பழைமைப் பிரசித்தி பெற்ற இடத்திற்கருகே ஒரத்த பாளையத்தில் ஓர் அணையை வேறு கட்டிவிட்டார்கள். பலன்? அகழாய்வு துவங்கின இடத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கி முழுக்கத் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறை, தமிழ்நாடு தொல்பொருள் துறை – இப்படி மூன்று அமைப்புகள் இணைந்து ஆரம்பித்த ஆய்வு அப்படியே கிடக்கின்றன. இதுதான் நிலைமை.
“கொடுமணலில் நாங்கள் ஆய்வு நடத்தியது பத்து சதவீதம். அதற்குள் எவ்வளவு அரிய பொருட்கள்? ஏறத்தாழ ஐயாயிரம் மணிகள் வரை இங்கு கிடைத்திருக்கின்றன.
இவற்றின் பொருள் மதிப்பும், பழைமை மதிப்பும் அதிகம். ஆய்வு நடத்திய பத்து சதவீத நிலத்திலேயே இவ்வளவு பழைமையான பொருள்கள் கிடைத்திருக்கிறபோது,
இந்த ஆய்வு முழுமையாக நடந்தால் இன்னும் அரிய பொருள்களும், தமிழ்நாட்டின் முந்தைய நிலை பற்றிய விரிவான தகவல்களும் கிடைத்து நாம் ஒரு முடிவுக்கு வர முடிந்திருக்கும்.
அதற்குப் போதிய நிதி வசதியில்லாமல் தென்னிந்தியாவின் முக்கியமான அகழாய்வு ஆரம்ப நிலையிலேயே கிடக்கிறது” என்கிறார்கள் ஆய்வு நடத்திய பேராசியர்கள்.
ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூறு வருஷங்களுக்கு முன்னால் உள்ள பழந்தமிழ்க் கிராமம் நம் கண்முன்னே யதேச்சையாகத் தென்பட்டும் இந்த அளவு அலட்சியமாக இருப்பது எதனால்?
– அகிலா நியூஸ்
1994, ஏப்ரல் 16 – ல், தினமணி சுடரில் வெளிவந்த கட்டுரை.
நன்றி: தினமணி