நேர்மையாக பணிபுரிந்தால் நெருப்பாக மாறுவீர்கள்!

– ஊழல் எதிர்ப்பு இயக்கம்

கோவை மாநகராட்சியின், முதல் பெண் மேயராக தேர்வு பெற்றுள்ள கண்மணி கல்பனாவை ஊழல் எதிர்ப்பு இயக்க செயலாளரும், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.யுமான வேலு, பொருளாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் சோமசுந்தரம் ஆகிய மூவரும், நேரில் சந்தித்து வாழ்த்துக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில், “வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவை மாநகராட்சியின், முதல் பெண் மேயராக தேர்வு பெற்றுள்ள கண்மணி கல்பனாவுக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

உங்கள் பதவிக்காலத்தில் ஊழலுக்கு இம்மியளவும் இடம் கொடாமல், நேர்மை ஒன்றையே லட்சியமாக கொண்டு நெஞ்சுரத்துடன் பணியாற்ற வேண்டும் என்று, ஊழல் எதிர்ப்பு இயக்கம் எதிர்பார்க்கிறது.

அப்படிச் செய்தால் நீங்கள் சமுதாயத்துக்கு ஒப்பற்ற சேவைகளை செய்து முடித்து சாதனையாளராக ஆவீர்கள். மாநகரம் உங்களை போற்றும். சமுதாயம் உங்களை சாதனையாளராக புகழும். வரலாற்றில் உங்களுக்கு ஓர் இடமிருக்கும்.

உங்கள் குடும்பம் செழிக்கும். சந்ததி தழைக்கும். தொடக்கத்தில் உங்களுக்கு ஊழலில் ஈடுபட நேரடியாக அல்லது மறைமுகமாக வேண்டுகோள், நெருக்கடி, அதிகார அச்சுறுத்தல்கள் கூட வரலாம்.

அத்தகைய நெருக்கடிக்கு இம்மியளவும் இடம் கொடாமல், நிமிர்ந்து நின்று நேர்மை ஒன்றையே உங்கள் லட்சியமாக கொண்டு பணியாற்றுங்கள். பிறகு நீங்கள் யாரும் அண்ட முடியாத நெருப்பாகி விடுவீர்கள். இறைவன் துணையிருப்பான். வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளனார்.

சந்திப்பிற்குப் பின் பேசிய வேலு, “கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் ஊழல் மலிந்து விட்டது. அதை மேயர் நினைத்தால் தடுத்து சரி செய்ய முடியும். இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள மேயர், எளிய குடும்ப பின்னணியை கொண்டவர்.

அவரை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்க குழுவினர் நேரில் அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தோம்.

அதிகாரிகளோ, கட்சியினரோ ஊழல் செய்ய துாண்டினால் அதை எதிர்த்து நின்று பணிபுரிய வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் அளித்த கடிதத்தை படித்துப் பார்த்த மேயர் கல்பனா, “நேர்மையுடனும், நெஞ்சுரத்துடனும் பணியாற்றுவேன்” என்று எங்களிடம் உறுதிமொழி அளித்துள்ளார்” எனக் கூறினார்.

You might also like