அதீத நெஞ்சுரமும், அசாத்திய தன்னம்பிக்கையும்!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 5

“என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்… ஒவ்வொரு நிமிஷமும்… ஏன்… ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா…” என்று பில்லா படத்தில் ஒரு வசனம் பேசுவார் அஜித்.

அது சினிமாவுக்காக எழுதப்பட்ட வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமல்ல என்பது அஜித்தை ஆரம்ப காலத்தில் இருந்து அறிபவர்களுக்கு நன்கு தெரியும்.

அவர் தன் வாழ்க்கையை மிகத் தெளிவாக திட்டமிட்டு செதுக்கிக் கொண்டவர். அதிலும் சோதனையான காலகட்டங்களில் அதீதமான நெஞ்சுரமும், அசாத்தியமான தன்னம்பிக்கையுமே அவரை செலுத்திக் கொண்டிருந்தது.

பைக் ரேஸில் சிக்கி முதுகுத் தண்டில் அடிபட்டு அவர் அசையமுடியாமல் கிடந்தபோது டாக்டர் ரங்கசாமி மற்றும் டாக்டர் சிதம்பரம் ஆகியோர் அஜித்துக்கு முதுகுத் தண்டில் ஆபரேஷன் செய்தனர்.

ஒன்றரை வருடங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்க கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தியபோது, மொத்தமாக நொறுங்கிப் போனார் அஜித்.

அமராவதியின் வெற்றிக்குப் பிறகு, அஜித்தை தங்கள் படத்துக்கு புக் செய்ய வேகம் காட்டிய சில தயாரிப்பாளர்கள், அஜித்தை ஆஸ்பத்திரியில் வந்து பார்த்த பிறகு மனதை மாற்றிக் கொண்டனர்.

உடல் அளவிலும் மனதளவிலும் ரொம்பவே துவண்டுபோய் ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவரை சந்தித்து உடல் நலம் விசாரிக்க சென்றிருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.

அஜித்தின் அறைக்குள் சத்தமின்றி மெல்ல நுழைந்தபோது, படுக்கையில் அமர்ந்தபடி தன் எதிரே இருந்த ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையை தீர்க்கமாக வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாராம் அஜித்.

சௌத்ரி உள்ளே வந்ததைக் கூட அவர் கவனிக்காமல் அவரது ஒட்டுமொத்த சிந்தனையையும் அந்த குடுவையின் மேல் குவிந்திருந்ததாம்.

ஒரு சில நிமிடங்களுக்கு அமைதியாக இருந்துவிட்டு, மெல்ல அவரிடம் உடல் நலம் விசாரித்திருக்கிறார்.

பிறகு, எதை அப்படி வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தீர்கள் என்று கேட்டபோது, அந்த கண்ணாடிக் குடுவையை எடுத்துவரச் சொல்லி அதை சௌத்ரி கையில் கொடுத்திருக்கிறார்.

அஜித்தின் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட சிறிய எலும்புத் துண்டு ஒன்று அந்தக் குடுவையில் மிதந்தபடி இருந்ததாம்.

‘‘இத பார்க்கப் பார்க்கத் தான் சார், ஜெயிச்சு வரணும்கிற வெறி மனசுக்குள்ள வருது. எப்படியும் சீக்கிரம் திரும்ப வந்து, விட்ட இடத்தை பிடிச்சிடுவேன்’’ என்று மிக நம்பிக்கையாக பேசியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை இப்போதும் பலரிடம் சொல்லிச் சொல்லி வியப்பார் சௌத்ரி.

படுக்கையில் கிடந்த அந்த ஒன்றரை வருட காலத்தில் தான் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வெகுவாக வளர்த்துக் கொண்டார் அஜித்.

சாதாரண பின்னணியில் பிறந்து அசாதாரணமான சாதனைகளை செய்து சரித்திரத்தில் இடம் பெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் தான் அப்போதும் இப்போதும் அவர் விரும்பிப் படிக்கிறார்.

அதைத் தவிர ‘ஜோனதன் லிவிங்ஸ்டன் ஸீகல்’ போன்ற ‘செல்ஃப் மோட்டிவேஷ்னல்’ புத்தகங்களும் அவரது ஃபேவரைட்.

இப்படியே நம்பிக்கையை விட்டுவிடாமல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாள் அஜித்தை சந்திக்க வந்திருக்கிறார் டைரக்டர் கே.சுபாஷ்.

அவர் இயக்கப்போகும் ‘பவித்ரா’ படத்தில் அஜித் நடிக்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

‘‘உங்க அன்புக்கு ரொம்ப நன்றி சார். என் நிலைமையை பார்த்திங்கல… எப்படியும் இன்னும் ஆறு மாசத்துக்கு நான் எழுந்து நடக்க முடியும்ணு தோணல’’ என்ற அஜித்திடம்,

‘‘பரவாயில்ல, இந்த படத்துல உங்களுக்கு ஒரு பேஷன்ட் கேரக்டர் தான். நீங்க படுக்கையில உட்கார்ந்தபடி நடிச்சா போதும். எப்ப எழுந்து நடமாடுறீங்களோ அப்ப மத்த சீன்களை எடுத்துக்கறேன்’’ என்று அவர் சொல்ல அஜித் கண்களில் கண்ணீர்.

‘பவித்ரா’ ஷூட்டிங் தொடங்கியது. ராதிகாவின் மகனாக, ஒரு கேன்சர் நோயாளியாக அதில் நடிக்கத் தொடங்கினார். ஆஸ்பத்திரி காட்சிகள் எல்லாம் முதலில் எடுக்கப்பட்டது.

பிறகு சொன்னபடி 6 மாதங்கள் காத்திருந்து, அஜித் மெல்ல எழுந்து நடமாட தொடங்கியதும், பாடல் உட்பட மற்ற காட்சிகளில் நடித்துக் கொடுத்தார் அஜித்.

‘பவித்ரா’ மிகப் பெரிய வெற்றிப்படம் இல்லை என்றாலும் அஜித்தின் கரியரில் அது மிக மிக முக்கியமான ஒரு ‘கம் பேக்’ படம். டைரக்டர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர் சுபாஷ்.

எனவே தன் சிஷ்யனின் முதல்பட ரஷ்களைப் பார்த்த மணிரத்னத்துக்கு அஜித்திடம் ஒரு ஸ்பார்க் தெரிய, அவர் தயாரித்த ‘ஆசை’ படத்துக்கு அஜித்தை ஹீரோவாக்கினார்.

‘ஆசை’ படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகிக் கொண்டிருந்த நேரத்தில், விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அஜித்தை தேடி வந்தது. அந்த நேரத்தில் அஜித்தைவிட விஜய் பெரிய ஹீரோ.

சற்றும் யோசிக்காமல் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதற்கு அஜித் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

(இன்னும் தெறிக்கும்…)

– அருண் சுவாமிநாதன்

02.03.2022 1 : 30 P.M

You might also like