ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ‘ஸ்டைல்’ உண்டு; போலவே, அது ஒவ்வொரு உச்ச நடிகர்களுக்கும் உண்டு. இரண்டு ஒன்று சேரும்போது எது முதன்மை பெறுகிறதோ, அதுவே அப்படம் திரை வரலாற்றில் இடம்பெறுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு இயக்குனரின் ஆக்கம் முழுமையாக இருக்குமானால் அது அப்பட்டியலில் இடம்பிடிக்கும்.
சிவாஜிக்கு ‘முதல் மரியாதை’ தந்த பாரதிராஜாதான் ரஜினிக்கு ‘கொடி பறக்குது’ தந்தார்; ‘காதலிக்க நேரமில்லை’, ‘கல்யாண பரிசு’ தந்த ஸ்ரீதர் தான் எம்ஜிஆருக்கு ‘மீனவ நண்பன்’ தந்தார்.
பாலு மகேந்திராவின் ‘உன் கண்ணில் நீர் விழுந்தால்’ மற்றும் மகேந்திரனின் ‘கை கொடுக்கும் கை’ இரண்டும் இரு பெரும் ஜாம்பவான்களின் கலையாக்கத்தை கேள்விக்குட்படுத்தின.
இது போன்ற உதாரணங்களில் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களுக்காக தங்களது ஸ்டைலில் அவர்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ சில மாற்றங்களைச் செய்திருந்தார்கள் அந்த இயக்குனர்கள்.
கடந்த ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’ கூட முழுமையாக லோகேஷ் கனகராஜின் கையில் திரைக்கதை ‘லகான்’ இல்லையோ என்ற சந்தேகத்தை விதைத்தது. அந்த வரிசையில் இணைந்திருக்கிறது அஜித்குமாருடன் இரண்டாவது முறையாக இயக்குனர் ஹெச்.வினோத் கைகோர்த்திருக்கும் ‘வலிமை’.
’வலிமை’யற்ற கதை!
போதை மருந்துகள், தொழில்நுட்பம், வசதியான வாழ்வைப் பெறுவதில் வேகம் என்றிருக்கும் இளைய தலைமுறையின் பலவீனமான எண்ணங்களைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறார் சாத்தான் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நரேன் (கார்த்திகேயா).
அவரது திட்டமிட்ட தொடர் குற்றங்களைத் தடுக்க, மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றலாகிறார் அசிஸ்டெண்ட் கமிஷனர் அர்ஜுன் (அஜித்குமார்).
இளைஞர்களின் பைக் சாகசங்களால் இந்த குற்றங்கள் நிகழ்த்தப்படுவதைக் கண்டறியும் அர்ஜுன், தனது பைக் ஓட்டும் திறன் மூலமாக வில்லனை கைது செய்கிறார்.
ஆனால், அவர் அந்த கும்பலின் தலைவனல்ல என்று ஒரு திருப்பம் வருகிறது. இதனால், வில்லனின் சதியால் அர்ஜுனின் மொத்த குடும்பமும் சிதையத் தொடங்குகிறது. அதை அர்ஜுன் எப்படி எதிர்கொள்கிறார் என்பது மீதிக்கதை.
பி.வாசுவின் ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தில் இருந்து இக்கதை சுடப்பட்டுள்ளது என்பவர்கள், ஜி.எம்.குமார் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘பிக்பாக்கெட்’ திரைப்படத்திற்கும் வலிமைக்கும் இருக்கும் ஒற்றுமைகளைப் பட்டியலிடலாம்.
தவிர, எத்தனையோ நூறு போலீஸ் படங்களைப் பார்த்தவர்களுக்கு ‘வலிமை’யின் சிறப்பே வில்லன் குரூப்பில் இருக்கும் ‘டீட்டெய்லிங்’தான் என்பது புரிந்துவிடும். ஆனால், அதோடு நின்றுவிட்டதுதான் வருத்தம் தரும் விஷயம்.
ஹீரோ – வில்லன் சேஸிங், அம்மா சென்டிமெண்ட், வேலை வாய்ப்பின்மை, இளைய தலைமுறையின் கேமிங் மோகம், சிதைந்து வரும் மனநலம் என்று பல விஷயங்களைப் பேசுவதால், திரைக்கதையின் மையம் எந்த ஒன்றை முன்னிலைப்படுத்துகிறது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
இது போதாதென்று போதைப் பொருளின் தீமை வேறு மொத்தக் கதையின் மீதும் ஒரு திரை போல படிந்திருக்கிறது.
துண்டு துண்டான காட்சியமைப்புகளும், அவற்றை கோர்ப்பதற்கு ‘இன்று’, ‘அடுத்த நாள்’, ‘அதற்கடுத்த நாள்’ என்று எழுத்துகள் திரையில் ஒளிர்வதும் மொத்த திரைக்கதையையும் ‘வலிமை’யற்றதாக்கி இருக்கிறது.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
கிட்டத்தட்ட ‘தூம்-2’ இந்தித் திரைப்படம் போன்று அமைந்திருக்க வேண்டிய திரைக்கதை வெறுமனே சென்னையைச் சுற்றி வருவது போல அமைக்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.
கோவிட் – 19 கால ஊரடங்கு இதற்கொரு காரணமாக இயக்குனர் தரப்பில் முன்வைக்கப்பட்டாலும், படம் பார்க்கும் ரசிகர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதனால், வெறுமனே அஜித்குமாரின் ‘ஹீரோ பில்டப்’ மட்டுமே மனதில் நிற்கிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும், ஒருமுறை பார்க்கலாம் என்ற ரகத்திலேயே படத்தின் முன்பாதி உள்ளது;
அதனாலேயே, இரண்டாம் பாதியையும் பார்த்து முடிக்கிறோம். இதையும் தாண்டி படத்தின் நீளம் அயர்ச்சியை தருகிறது.
அஜித் வரும் காட்சிகள் அனைத்தும் விசிலடிக்கும் ரகம். ஆனாலும், இன்றும் அவரை ‘பில்லா’ போலவே ஸ்லோமோஷனில் நடக்க வைத்திருப்பது அலுப்பூட்டுகிறது.
தலைமுடியில் கருமை, செம்பட்டை, முடியின் நீளம் நார்மல், ஷார்ட் என்று அடுத்தடுத்த காட்சிகளில் அவர் வந்துபோயிருப்பது அதீத இடைவெளியில் படம்பிடிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.
என்னதான் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலை அஜித் ‘மெயிண்டெய்ன்’ செய்தாலும், தனது முகப்பொலிவிலும் உடல் எடையிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று உணர்த்துகிறது அவரது திரை இருப்பு.
அஜித்தின் குடும்ப உறுப்பினர்களாக சுமித்ரா, அச்யுத் குமார், ராஜ் அய்யப்பா இடம்பெறுகின்றனர். பாசத்தில் அழும்போது மட்டும் மனோரமாவை நினைவூட்டுகிறார் சுமித்ரா. ராஜ் அய்யப்பா அளவுக்கு கூட அச்யுத்துக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்படவில்லை.
தொடக்கத்தில் வரும் அக்காட்சிகள் அனைத்தும் செயற்கையாகத் தோன்றுவது திரைக்கதையின் பெரிய பலவீனம். இதனால், பின்பாதியும் நமக்கு வினோதமாகத் தெரிகிறது.
அஜித்துடன் போலீஸில் பணியாற்றுபவர்களாக வரும் ஹூமா குரேஷி, சைத்ரா ரெட்டி, பார்லி மானே ஆகியோருக்கு பெரிதாக ‘ஸ்கோப்’ இல்லை. போலவே, கார்த்திகேயாவின் தோழி சாராவாக வரும் குர்பானி ஜட்ஜ்க்கும் பெரிதாக வாய்ப்பில்லை.
‘விவேகம்’ படத்தில் இப்படிப் பெண் பாத்திரங்களை கணக்கில் கொள்ளாத நிலையை எதிர்கொண்டதாலேயே, ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
போலீஸ் கமிஷனராக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் பிரபாகர் ஆகியோர் ஐந்தாறு காட்சிகளில் முகம் காட்டியிருக்கின்றனர். அவ்வளவே! இத்தனைக்கும் நடுவே, மொத்த திரைக்கதைக்கும் சம்பந்தமில்லாமல் ‘சக்ஸஸ்’ பாலுவாக வந்து ஒரு காட்சியில் சிரிப்பூட்டுகிறார் புகழ்.
’சதுரங்க வேட்டை’, ‘தீரன்’ போன்ற படங்களில் வில்லனின் அடியாட்களாக வந்து போகிறவர்களுக்கு கூட முக்கியத்துவம் தந்திருப்பார் இயக்குனர் ஹெச்.வினோத். அவற்றுடன் ஒப்பிட்டால், வலிமையில் ஒருவரது நடிப்பும் நமக்கு திருப்தி தரவில்லை.
வில்லனாக நடித்த கார்த்திகேயாவும் கூட இதில் விதிவிலக்கல்ல. நானியின் ‘கேங் லீடர்’ படத்திலும் கார் ரேஸராக வருவார் கார்த்திகேயா. அதுவே திருப்தியைத் தரும் வகையில் இல்லை. அதை ஒப்பிடும்போது, அவரது பாத்திரத்திற்கான விளக்கம் ’வலிமை’ திரைக்கதையில் போதுமான அளவில் இல்லை.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ’நாங்க வேற மாரி’, ’என்ன குறை’ பாடல்கள் ரசிகர்களைத் தொட்டிருந்தாலும், பின்னணி இசையை கிப்ரான் தந்திருக்கிறார் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
ஏனென்றால், ‘மாநாடு’ மொத்த படமும் யுவனின் பின்னணி இசைக்காகவே கொண்டாடப்பட்டது.
கிப்ரானின் பின்னணி இசை முன்பாதியில் விறுவிறுப்பைக் கூட்டினாலும், பின்பாதியில் வெறும் இரைச்சலாக மட்டுமே மனதில் நிற்கிறது.
விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு பணிகள் வெவ்வேறு திசையில் செல்லும் காட்சிகளை ஒரு கோட்டில் இணைத்திருக்கின்றன.
ஆனாலும், ஆங்காங்கே ஏதோ ‘மிஸ்’ ஆன உணர்வே மிஞ்சுகிறது. அதையும் மீறி ‘சேஸிங்’ மற்றும் சண்டைக்காட்சிகளில் தெரிகிறது படத்தொகுப்பு குழுவின் உழைப்பு.
பிரமிக்கவைக்கும் ‘ஆக்ஷன்’!
சந்தேகமில்லாமல் இப்படத்தில் அஜித்தை அடுத்து நம் மனதில் நிறைவது நீரவ் ஷா மற்றும் சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயனின் உழைப்பு.
மேடு பள்ளங்கள் நிறைந்த ஓட்டப்பாதையில் பைக்கை ஓட்டுபவர்களுக்கு ஈடாக கேமிராவும் பயணிக்கும் உத்தி ரசிகர்களின் அட்ரீனலினை எகிற வைக்கிறது.
பைக் சேஸிங் காட்சிகள் முன்பாதியிலேயே திகட்ட திகட்ட இருப்பதால், பின்பாதியில் பஸ்ஸை பின்தொடரும் சண்டைக்காட்சி மிகச்சாதாரணமாகத் தோன்றும் அளவுக்கு அதில் நடித்திருப்பவர்களின் அசுர உழைப்பு அமைந்திருக்கிறது.
‘வலிமை’ கட்டாயம் திலீப் சுப்பராயனுக்கு தெலுங்கு, இந்தி திரையுலகில் பெரும்புகழ் பெறுவதற்கான ‘விசிட்டிங் கார்டாக’ அமையும்.
ஆக்ஷன் காட்சிகளை தவிர்த்து பார்த்தால் மொத்த திரைக்கதையிலும் ‘வலிமை’ இல்லாதது தெரியவரும்.
வசனங்களில் கூட எளியவர்களின் வாழ்க்கையை இல்லாமல் ஆக்குவதைப் பற்றிய ‘பஞ்ச்’கள் பெரிதாக இல்லை.
அதனால், ‘ஏழையா இருந்து உழைச்சு சாப்பிடுறவங்களை எல்லாம் கேவலப்படுத்தாத’ என்று அஜித் பேசுவதற்கு மட்டுமே கைத்தட்ட முடிகிறது.
’ஜி’, ’அட்டகாசம்’, ‘அசல்’, ’ஏகன்’, ‘பில்லா 2’ என்று அஜித் நடித்த பல திரைப்படங்கள் பலத்த எதிர்பார்ப்புடன் வந்து ‘உச்’ கொட்ட வைத்திருக்கின்றன.
அவற்றைப் போலவே ‘வலிமை’யிலும் பெரும் உழைப்பு கொட்டப்பட்டிருப்பது ஒரு அஜித் ரசிகனாக பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
’வலிமை’ வசூல், ஒரு சில தீவிர அபிமானிகளின் திருப்தியோடு அஜித் நின்றுவிடக் கூடாது. கண்டிப்பாக, ஹெச்.வினோத் உடன் அஜித் இணைந்து இயக்குனரின் முழுமையான கைவண்ணத்தில் ஒரு படம் தர வேண்டும். அதைத் தவிர வேறெதுவும் ‘வலிமை’க்கான பிராயச்சித்தமாக இராது!
- உதய் பாடகலிங்கம்
- 26.02.2022 12 : 30 P.M