தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
திமுக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளது. சென்னையில் 153 வார்டுகளை திமுக தன்வசமாகியது. அதிமுக 15 இடங்களை கைப்பற்றியது.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களையும், சிபிஐ, பாஜக தலா ஒரு இடத்திலும் வென்றது.
விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் தலைநகரான சென்னையின் மேயராக யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மேயர் பொறுப்பு பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 1957, 1958 ஆம் ஆண்டு வரை தாரா செரியன். 1971-1972 ஆம் ஆண்டு காமாட்சி ஆகியோர் இரு பெண்கள் மேயர்களாக இருந்துள்ளனர்.
ஆனால் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை மேயராக வந்தால் அது இதுவே முதல் முறையாகும்.
அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு மேயர் பதவிக்கு இரண்டு இளம் பெண்களின் பெயர்களை திமுக தலைமை பரிசீலிப்பதாகத் தெரிகிறது.
வார்டு எண் 17-ல் போட்டியிட்ட கவிதா நாராயணன் திமுக.வின் மேயர் வேட்பாளர் என கூறப்பட்டது. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை.
பெரம்பூர் தொகுதிக்கு உள்பட்ட 74-வது வார்டில் வெற்றி பெற்ற 28 வயதான பிரியா ராஜன், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 70-வது வார்டில் வெற்றி பெற்ற ஸ்ரீதனு சந்திரசேகர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்களில் எம்.காம். முதுநிலை பட்டதாரியான பிரியா ராஜன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் மகளாவார்.
தி.மு.க.வை பொறுத்தவரையில், வடசென்னையைச் சேர்ந்த யாரும் இதுவரை மேயராக இருந்ததில்லை.
எனவே இந்த முறை வட சென்னையை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் மேயர்களாக இருந்த மா.சுப்பிரமணியன் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தென்சென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள்.