பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அரசின் கொள்கை முடிவு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் ஜோசன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் தமிழக அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான போட்டித் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் போட்டிப்போட முடியவில்லை.

இதனால் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவு. மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்று அரசு முடிவு எடுக்கும். அதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் ஏற்று நடத்த முடியாது” என்று தெரிவித்தனர்.

அரசு தரப்பில் சமச்சீர் கல்விமுறை செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும், இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட மனு எனவும் கூறப்பட்டது.

பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

23.02.2022  5 : 30 P.M

You might also like