– இயக்குனர் அமீர் காட்டம்
‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அமீர், அதன்பின் ராம், பருத்தி வீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார்.
யோகி என்ற படத்தின் மூலம் அமீர் கதாநாயகனாக அறிமுகமானார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
சமீபத்தில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘இறைவன் மிகப்பெரியவன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெற்றிமாறன் மற்றும் அமீர் இணைந்திருக்கும் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின்போது பேசிய அமீர், “இந்தக் காலத்தில் படம் செய்வதே கடினம் அதிலும் என்னை மாதிரி இயக்குனரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். பாரதிராஜா சார் படம் செய்யும் போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார்.
ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது.
அதை மாற்றலாம் என நானே துவங்கியது தான் இது. நான் வெற்றியிடம் ‘இறைவன் மிகப்பெரியவன்’ செய்யலாமா என கேட்டேன், கண்டிப்பாக செய்யலாம் என்றார்.
எனக்கு இப்படி சுதந்திரமாக வேலை செய்வது தான் பிடிக்கும். இன்றைய காலக்கட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது.
இன்றைக்கு புதிதாக வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள்.
இந்தப்படம் எங்களுக்குள் இருக்கும் அழகான உறவை தான் சொல்லவருகிறது. வாக்குக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாக சொல்லும்.” எனக் கூறினார்.
15.02.2022 4 : 30 P.M