நான்கு முனைப் போட்டியில் மணிப்பூர்!

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதில் பாதி இடங்களை மட்டுமே கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

ஏன்?

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்

மியான்மர் நாட்டு எல்லையில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் உள்ளன.

பாதுகாப்புப் படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவார்கள்.

இப்போது கூட தீவிரவாதிகளுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மாநில அரசு ஏற்படுத்திவிட்டுத்தான் தேர்தல் நடத்தப்படுகிறது.

மொத்தம் 60 தொகுதிகள்.

பிப்ரவரி 27-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடப்பதாக இருந்தது.

அதனை மறுதினத்துக்கு அதாவது  28-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளது தேர்தல் ஆணையம். மார்ச் 3-ம் தேதி நடக்க இருந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவு 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இப்போது அந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

குதிரை பேரம் நடத்திய பாஜக கோவாவை போன்று இங்கும், குறுக்குப் பாதையில் தான் பாஜக ஆட்சி அமைத்தது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் மணிப்பூரில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது.

3 இடங்களில் கூடுதலாக ஜெயித்திருந்தால் தனித்து ஆட்சி அமைத்திருக்கலாம்.

ஆனால் 21 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, குதிரை பேரத்தில் ஈடுபட்டது.

தலா 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சியை தங்கள் பக்கம் இழுத்தது. சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் விலை போனார்கள்.

கூட்டணி ஆட்சியை நிறுவியது பாஜக. தற்போது பாஜகவின் பிரேன் சிங், முதலமைச்சராக பதவியில் உள்ளார்.

நான்கு முனை போட்டி

நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் கூட்டணி உடைந்து விட்டது.

பாஜக 60 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது.

பாஜக கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் தனித்தனியாக நிற்கின்றன.

தேசிய மக்கள் கட்சி 20 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

நாகா மக்கள் முன்னணி 10 இடங்களில் நிற்கிறது.

காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

51 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் எஞ்சிய இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளது.

மீண்டும் பாஜக?

ஆரம்பத்தில் நடத்தப்பட்ட கருத்து கணப்பில் ’எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது’ என தெரிய வந்தது.

கடைசியாக நடந்த கருத்துக் கணிப்புகள், பாஜக 29 முதல் 35 இடங்கள் வரை பிடிக்கலாம் என கூறுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 13 முதல் 19 தொகுதிகள்  கிடைக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன

உச்சக்கட்ட பிரச்சாரத்தில் நிலைமை மாறுமா என்பது தெரியவில்லை!

-பி.எம்.எம்.

14.02.2022  5 : 30 P.M

You might also like