ஒரு மாபெரும் கமர்ஷியல் படைப்பொன்றை எதிர்பார்த்து வரும் ரசிகனுக்கு ஏமாற்றம் தந்தாலும், நல்ல கலைப்படைப்பு காலம் கடந்து திருப்தியளிக்கும். மாறாக, இரண்டையும் கலந்து கட்டுகிறேன் பேர்வழி என்று இறங்கினால் பல நேரங்களில் வெறுமையே எதிர்வினையாகக் கொட்டும்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘மகான்’, அந்த வகையில் எப்படிப்பட்ட திருப்தியை ரசிகர்களுக்குத் தந்திருக்கிறது?
அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் இதனைக் கண்டு முடிக்கும்போது, இக்கேள்விக்கான பதில் உடனடியாகக் கிடைத்து விடுகிறது.
இது ‘காந்தீய’ கதையல்ல!
சுதந்திரப் போராட்டத் தியாகியான மோகன்தாஸ் (ஆடுகளம் நரேன்), மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்குபெற்றதன் நினைவாகத் தன் மகனுக்கு ‘காந்தி மகான்’ என்று பெயரிடுகிறார்.
காந்தீயக் கொள்கைகளை மிகத்தீவிரமாகப் பின்பற்றும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்வதே காந்திக்கு அயர்வைத் தருகிறது.
ஒருநாள் சாராய வியாபாரி சூசையப்பனின் மகன் சத்தியவான், ஞானோதயத்துடன் இணைந்து சீட்டாட்டம் ஆடுகிறார்.
தனது நாயை ஞானோதயம் திருடி வைத்திருப்பதால், சத்தியவானுக்கு உதவுவது போல ஏமாற்றுகிறார் காந்தி.
இந்த உண்மை வெளிப்படும்போது மூவருக்குள்ளும் சண்டை எழுந்து, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்கின்றனர். சிறுவர்கள் சண்டையிட்ட விவகாரம் தெரிய வந்ததும், காந்தியை அவரது தந்தை அடி வெளுத்தெடுக்கிறார்.
சிறுவர்கள் மூவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்கின்றனர்.
வணிகவியல் ஆசிரியராக இருக்கும் காந்தி (விக்ரம்), தனது 40ஆவது பிறந்தநாளன்று மனைவி நாச்சி (சிம்ரன்), மகன் தாதாபாய் நௌரோஜி சகிதம் கோயிலுக்குச் செல்கிறார்.
அங்கிருக்கும் பிச்சைக்காரர், “யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் கவலைப்படாமல் வாழும் 5% பேரில் ஒருவனல்ல நீ.. மிகச்சாதாரணமாக வாழ்ந்து மடியும் மீதமுள்ள 95% பேரில் ஒருவன். உன்னால ஒருநாள் நீ நினைச்ச மாதிரி வாழ முடியுமா” என்று கேட்கிறார்.
அது காந்தியின் மனதிலிருக்கும் நிறைவேறாத ஆசைகளை உசுப்பிவிடுகிறது. மனைவியும் மகனும் வெளியூர் கிளம்ப மது, சீட்டாட்டம் என்று தனக்கான போதையைத் தேடிக் கிளம்புகிறார் காந்தி.
அன்று, மீண்டும் சத்தியாவானையும் (பாபி சிம்ஹா) அவரது மகன் ராக்கியையும் (சனந்த்) சந்திக்கிறார். அந்த நாளே அவருக்குச் சொர்க்கமாகத் தெரிகிறது.
அடுத்த நாள் உண்மை தெரிய வந்ததும் நாச்சியும் தாதாவும் காந்தியைப் பிரிந்து செல்கின்றனர்.
கள்ளுண்ணாமைக்காகப் போராடிய காந்திய குடும்பத்தில் பிறந்த காந்தி தன் வாழ்நாளில் முதன்முறையாக சீட்டாடியதையும் மது அருந்தியதையும் பெருங்குற்றமாகக் கருதுகின்றனர்.
அதன்பின் சத்தியாவானுடன் சேரும் காந்தி, ஒரு பெரிய சாராய சாம்ராஜ்யத்தையே கட்டியமைக்கிறார். சிறிது காலம் கழித்து அவர்களுடன் சேரும் ஞானோதயம் (முத்துக்குமார்) அதற்கு உதவியாக இருக்கிறார்.
எல்லாம் சீராகப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், காந்தியின் மகன் தாதாபாய் (துருவ்) தனிப்படை போலீஸ் அதிகாரியாக சென்னை திரும்புகிறார்.
சத்தியவானும் காந்தியும் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தை குலைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அதன்பின் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது ‘மகான்’ கிளைமேக்ஸ்.
ஆங்கிலம் மற்றும் இதர உலக மொழிகளில் வெளியான ‘கல்ட்’ கிளாசிக் படங்களை பார்த்து பார்த்து, இத்திரைப்படத்தைச் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அது, படத்தின் நீளத்தை மட்டுமல்லாமல் நம்முடைய அயர்வையும் அதிகப்படுத்தியிருக்கிறது.
அபாரமான அர்ப்பணிப்பு!
விதவிதமான விக்குகள், புரோஸ்தடிக் மேக்கப், காஸ்ட்யூம்கள் போன்றவற்றோடு நடிகர், நடிகைகளின் உடல்மொழி, பாவனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.
‘ஜிகர்தண்டா’வுக்கு பிறகு, இதில் பாபி சிம்ஹாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வேடம். அவரது மகனாக வரும் சனந்தும் வெவ்வேறு தோற்றங்களில் வந்து நடிப்பை அள்ளியிறைக்கிறார்.
ஸ்டைலிஷாக வந்துபோகும் துருவ்வுக்கு, தந்தையைப் போலவே மிகவித்தியாசமான குரல். அதுவே, அவரது நடிப்புக்கு ப்ளஸ். ஆனால், அவர் நடித்த தாதா பாத்திரம் ஒரு ’சைக்கோ’ கொலையாளி போலத் தோற்றமளிப்பது மைனஸ்.
வயதான தோற்றத்தில் வரும்போது, தன்னை தேர்வு செய்ததற்கு நியாயம் செய்திருக்கிறார் சிம்ரன். பாபியின் மனைவியாக வரும் சுபத்ரா, பெரிதாக கேமிராவுக்கு முகம் காட்டாமல் வந்து போகிறார்.
ஆடுகளம் நரேன், கஜராஜ், ராமச்சந்திரன், பாலாஜி சக்திவேல் உட்படப் பலரும் இப்படத்தில் இருக்கின்றனர்.
இவர்களை மீறி ‘ஓநாய்’ போன்ற குணாம்சத்தை ஞானோதயம் பாத்திரத்தில் வெளிப்படுத்தியிருக்கும் முத்துக்குமார் நம் மனதில் நிறைகிறார்.
‘சார்பட்டா பரம்பரை’க்கு பிறகு இதில் பெயர் சொல்லும் வாய்ப்பு.
வயதையும் மீறி, திரைக்கதைக்கேற்ப தன்னை வருத்திக்கொள்வதில் ‘ஜித்தன்’ என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் விக்ரம். ஆரம்பகட்ட காட்சிகளில் அவர் அணிந்திருக்கும் ‘விக்’ எரிச்சலூட்டினாலும், மெல்லத் தன் நடிப்பால் வசீகரப்படுத்துகிறார்.
ஆற்றங்கரையோரத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சியின் முக்கால்வாசி பகுதியை ஒரே ஷாட்டில் எடுப்பதற்கேற்ப, அவர் மெனக்கெட்டிருக்கும் விதம் அற்புதம்!
இதில் நடித்திருப்பவர்களின் அர்ப்பணிப்பே, திரைக்கதையைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. அதற்கேற்ப விதவிதமான லொகேஷன்களில் இயக்குனரின் கற்பனைக்கு உருவம் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா.
விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பில் ஏகப்பட்ட காட்சிகள் கத்தரிக்கப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது. குறிப்பாக, துருவ் வந்துபோகும் காட்சிகள் அளவில் மிகவும் குறுக்கப்பட்டிருக்கின்றன.
அதற்கு மாறாக முன்பாதிக் காட்சிகளின் நீளளள…ம் மிக அதிகம். படம் முழுமை பெறாமல் போனதற்கு, ‘எடிட்’ செய்யப்பட்ட காட்சிகளும் ஒரு காரணமா என்று தெரியவில்லை.
பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி, இசையமைப்பதற்கு முன்பாகப் பல்வேறு ஹாலிவுட் படங்களின் ஓஎஸ்டிகளை சந்தோஷ் நாராயணன் கேட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.
ஒட்டுமொத்தமாகப் பல்வேறு அம்சங்களில் ‘மகான்’ கிளாசிக் தோற்றமளித்தாலும், திரைக்கதை எனும் அம்சத்தில் கோட்டை விட்டிருக்கிறது.
பினிஷிங் சரியில்லையேப்பா..!
‘வின்னர்’ பட காமெடியில் ‘ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா’ என்றிருப்பார் வடிவேலு. அது போலவே ‘மகான்’ திரைக்கதையும் பாத்திர அமைப்பும் ‘முரண்பாட்டு மூட்டை’யாக இருக்கிறது.
கள்ளுண்ணாமையை வலியுறுத்தும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு அகிம்சையைப் போதிக்காமல் வளர்ப்பார்களா, தங்கள் குடும்பத்தினரை ராணுவத்திலும் காவல் துறையிலும் சேர அனுமதிப்பார்களா?
காந்தி வலியுறுத்திய எத்தனை விஷயங்களில் குறிப்பிட்டதை மட்டுமே அவர்கள் மூடத்தனமாகப் பின்பற்றுகிறார்களா என்பதற்கான பதில்கள் இடம்பெறாததால், திரைக்கதையில் குழப்பமே மேலோங்குகிறது.
ஒரே நாளில் ஏற்பட்ட கசப்புணர்வால் விக்ரமை விட்டு சிம்ரன் பிரிவது நமக்குள் அதிர்ச்சியை விதைக்கவில்லை. போலவே, கிளைமேக்ஸில் துருவ்வை விக்ரம் திசை திருப்புவதும் ஆச்சர்யத்தை அளிக்கவில்லை.
வெறுமனே மதுவுக்கு எதிராகச் செயல்படுவது மட்டும்தான் துருவ் நடித்த தாதாபாய் பாத்திரத்தின் ஒரே நோக்கமா என்பதும் சொல்லப்படவில்லை. இதனால், அவர் வரும் காட்சிகளிலெல்லாம் ‘நாயகன்’ படத்தில் வரும் டினு ஆனந்த் தான் நம் நினைவுக்கு வருகிறார்.
’கொள்கையில் தீவிரமாக இருக்கிறேன் பேர்வழி என்று வாழ்க்கையைக் கோட்டை விடாமல் கொஞ்சம் மனதுக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்து பாருங்களேன்’ என்று சொல்ல,
‘தவறுகள் செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல’ என்ற காந்தியின் வார்த்தைகளைத் துணைக்கு அழைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஆனால், ‘மகான்’ பார்த்தபிறகு மது போதையும் வன்முறையினால் விளையும் அதிகாரமும் நினைத்ததையெல்லாம் அடையும் சுதந்திரமும் மட்டுமே இன்பம் என்ற எண்ணம் முளைப்பது பேராபத்தின் அறிகுறி!
ஷாட்கள், காட்சிகள், அவற்றுக்கான தொழில்நுட்ப உள்ளடக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆங்கிலப் படங்களைப் பிரதியெடுக்க முயன்றிருக்கிறார்.
பார்க்க அழகாகத் தெரிந்தாலும், ஒரு கதையாக அது மனதுக்குள் ஊடுருவவே இல்லை என்பதை மட்டும் கார்த்திக் சுப்புராஜ் புரிந்துகொள்ள வேண்டும்.
ஹாரிசன் போர்டோ அல்லது ஜாக்கி சானோ அல்லது ஆர்னால்டோ காலம் கடந்து நடிக்கும் படமொன்றை ஒரு தீவிர ஆக்ஷன் பட ரசிகர் பார்த்தால் எப்படியிருக்கும்?
தூள், சாமி படங்களைப் பார்த்த விக்ரம் ரசிகர் ஒருவருக்கு ‘மகான்’ அப்படியொரு அனுபவத்தையே தரும்.
‘கமர்ஷியல்’ படம் என்பதற்கு ஹாலிவுட்டில் ரெஃபரென்ஸ் தேடுவதைவிட, தன்னுடைய ‘ஜிகர்தண்டா’வையே கார்த்திக் சுப்புராஜ் இன்னொரு முறை பார்த்தால் நன்றாக இருக்கும்.
இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ ‘ஜகமே தந்திரம்’, ‘மகான்’ நம்மை சோதனைக்குள்ளாக்கும்.
-உதய் பாடகலிங்கம்
12.02.2022 10 : 50 A.M