காவல்துறையில் 90 சதவீதம் ஊழல் அதிகாரிகள்!

– சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி; இவர் அளித்த புகாரின் அடிப்படையில் இவருக்கு எதிராக, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். புலன் விசாரணைக்கு பின், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வசந்தி வழக்கு தொடர்ந்ததையடுத்து, புதிதாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமிக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை, வசந்தி தாக்கல் செய்தார்.

போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜராகி, ”நீதிமன்ற உத்தரவுப்படி, புதிதாக புலன்விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் ஆரம்ப முகாந்திரம் இல்லை,” என்றார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, புதிதாக புலன் விசாரணை நடந்துள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், அங்கேயே எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்து, சட்டப்படி தொடரலாம்.

புலனாய்வு அதிகாரியின் திறமை திருப்தியாக இல்லை என்றாலும், அவரது திறமைக்கு ஏற்ப விசாரணை செய்துள்ளார்.

அவரது திறமையின்மையை வைத்து, நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை எனக் கருத முடியாது.

துரதிருஷ்டவசமாக போலீஸ் துறையில் 90 சதவீதம் பேர் ஊழல் அதிகாரிகளாகவும், போதிய திறமை இல்லாதவர்களாகவும் உள்ளனர்; 10 சதவீதம் பேர் நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக உள்ளனர். 10 சதவீதம் பேர், எல்லா விசாரணையையும் மேற்கொள்ள முடியாது.

எனவே, அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கவும், ஊழல் அதிகாரிகளை களையவும், ஊழலற்ற திறமையில்லாத அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் இது சரியான தருணம். புகார் அளித்த நேரத்தில் விற்பனையாளர் உயிருடன் இருந்தார்.

அவரை, உடனடியாக விசாரித்திருந்தால் உண்மை வெளி வந்திருக்கும். ஆனால், அவர் இறக்கும் வரை அவரிடம் விசாரணை நடத்தவில்லை” என நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.

11.02.2022 12 : 30 P.M

You might also like