அஜித்தின் வாழ்க்கையை திசை மாற்றிய விபத்து!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 4

‘அமராவதி’ படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன.

அஜித்குமார் என்ற புதுமுகத்தை வைத்து மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் புரொடக்ஷன் செலவுகளைப் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தயாரிப்பு தரப்பு.

அந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் தன் சொந்த காஸ்ட்யூம்களையே பயன்படுத்தினார் அஜித். அந்தப் படம் முழுவதும் அவர் ஒரு பைக்கில் தான் வருவார்.

அந்த பைக் கூட அஜித்தின் சொந்த பைக் தான். தயாரிப்பு தரப்பின் சிரமத்தை புரிந்து கொண்டு அவராகவே இந்த முடிவை எடுத்திருந்தார்.

முதல் படத்திலேயே தயாரிப்பாளரின் சிக்கல்களைப் புரிந்து கொண்டு தன்னால் முடிந்த சின்ன சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட்களை செய்யத் தொடங்கியவர் அஜித்.

இன்று வரை தொடரும் அந்த குணம் தான் அவரை எப்போதும் தயாரிப்பாளர்களின் ஃபேவரைட்டாக வைத்திருக்கிறது.

முதல் படம் என்பதால் அமராவதியில் அஜித்துக்கு டப்பிங் செய்ய முடிவெடுத்தார் இயக்குநர் செல்வா. பல பேரை பேசவைத்து எதுவும் திருப்தியாக வரவில்லை. கடைசியில் அஜித்துக்கு டப்பிங் பேசியவர் நடிகர் விக்ரம்.

சரியான ப்ரேக் கிடைக்காமல் சினிமாவில் முன்னேற விக்ரம் போராடிக் கொண்டிருந்த நேரமது. பல படங்களுக்கு அப்போது அவர் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார்.

அமராவதி டப்பிங் முடிந்ததும் இயக்குநர் செல்வாவிடம், ‘‘இந்த பையன்கிட்ட ஒரு ஃபயர் இருக்கு, ரொம்ப ஸ்மார்ட்டாவும் இருக்கார். நிச்சயம் பெரிசா வருவார் பாருங்க. முடிஞ்சா டேட்ஸ் வாங்கி வச்சுக்குங்க’’ என்று சொல்லி இருக்கிறார் விக்ரம்.

1993-ம் வருடம், மே மாதம் 24-ம் தேதி ரிலீசானது அமராவதி. ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆகி இருந்ததால் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர் வரத் தொடங்கினர்.

ஹேண்ஸமான புது ஹீரோவுக்காக மாணவிகளும் தான். பாக்ஸ் ஆஃபீஸில் படம் ஹிட். மிகப் பெரிய சினிமா எதிர்காலம் அஜித் முன்னால் காத்திருந்தது. அந்த நேரத்தில் அமெச்சூர் பைக் ரேஸ் ஒன்றில் கலந்துகொண்டார் அஜித்.

அப்போது நடந்த விபத்தில் அவரது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது. ஏற்கனவே பைக் ரேஸில் பலமுறை காயம் அடைந்திருந்தாலும், இந்தமுறை நடந்த விபத்து ‘தல’யின் தலை எழுத்தையே மாற்றி எழுதியது.

விபத்துக்கு பிறகு சில நாட்கள் ஓய்வில் இருந்துவிட்டு மீண்டும் தன் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார். ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை.

ஒரு நாள் காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது, அவரால் தன் உடம்பை ஒரு இன்ச் கூட அசைக்க முடியவில்லை.

முதுகுத் தண்டில் இருந்து மின்னலாய் வெட்டிய ஒரு வலி உச்சந்தலை வரை படர, துடித்துப்போனார் அஜித். அசையக் கூட முடியாமல் முடங்கிப் போனவரை டாக்டரிடம் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது முதுகுத் தண்டில் எலும்பு உடைந்திருக்கிறது ஆபரேஷனை தவிர வேறு வழி இல்லை என்று சொல்லிவிட்டனர் டாக்டர்கள்.

ஆனால், ஆபரேஷனுக்குப் பிறகு எழுந்து நடமாட முடியுமா என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது என்று ஒரு செக் வைத்தனர்.

பல வருட போராட்டங்களைக் கடந்து, எந்தப் பின்புலமும் இன்றி, தன் சொந்த முயற்சியில் கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி மெல்ல முன்னேறி வந்து கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு பேரிடியாய் இறங்கிய செய்தியைக் கேட்டதும் எப்படி இருந்தது என்பது பற்றி பின்னாளில் அஜித் இப்படி கூறியிருக்கிறார்:

‘‘ஒரு மோசமான விபத்தில் சிக்கி 18 மாதங்கள் ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடந்த போது வாழ்க்கையே இருண்டுவிட்ட உணர்வு. எதிர்காலம் பற்றிய நம்பிக்கை கேள்விக்குறியாக இருந்தது. லைஃல நிறைய டஃப் டைம்ஸ் பார்த்திருக்கேன்.

அப்போதெல்லாம் நான் உடைஞ்சு போகாமல் உறுதியா இருந்திருக்கேன். ஆனா அந்த விபத்து என்னோட சினிமா எதிர்காலத்தை மட்டுமில்ல என் வாழ்க்கையையே முடக்கிப் போட்டுருமோனு கலங்கிட்டேன்’’ என்றார்.

‘அமராவதி’யைப் பார்த்துவிட்டு அஜித்துக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுக்க காத்திருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம், மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர்.

காரணம் அஜித் மீண்டும் எழுந்து வருவாரா என்பதே அப்போது கேள்விக்குறியாக இருந்தது.

ஆலயம் மூவிஸ்காக மணிரத்னம் தயாரிக்க இருந்த ‘மே மாதம்’ படத்தில் நடிக்க அஜித் தேர்வாகி இருந்தார்.

ஆனால் அவருக்காக காத்திருப்பதில் ரிஸ்க் இருப்பதால், அந்த வாய்ப்பு வினித் என்ற புதுமுகத்துக்கு போனது.

இப்படி அவர் கைவிட்டு போன ப்ரொஜெக்ட்கள் நிறைய. அந்த நேரத்தில் அஜித்தை ஆஸ்பத்திரியில் பார்க்க வந்த தயாரிப்பாளர், அஜித்தின் அறையில் பார்த்த ஒரு காட்சி அவரை உறைய வைத்தது!

(இன்னும் தெறிக்கும்…)

-அருண் சுவாமிநாதன்

08.02.2022  11 : 50 A.M

You might also like