நிறைவடைந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல்!

– வரும் 7-ம் தேதி வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இவற்றில் மொத்தம் 12,838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்தப் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல், வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.

இதற்கான மனுதாக்கல், ஜனவரி, 26-ம் தேதி துவங்கியது. முதல் நாளில் 19 பேர் மனு தாக்கல் செய்தனர். இரண்டாம் நாளான 29-ம் தேதி, 80 பேர் மனு தாக்கல் செய்தனர்.

ஜனவரி 30-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால், மனு தாக்கல் நடக்கவில்லை. தொடர்ந்து, 31-ம் தேதி மனுக்கள் பெறப்பட்டன.

அன்றைய தினம், 1,369 பேர் மனு தாக்கல் செய்தனர். இம்மாதம் 1-ம் தேதி, 1,095 பேரும், 2-ம் தேதி, 7,590 பேரும் மனு தாக்கல் செய்தனர். ஐந்து நாட்களில் மொத்தமாக, 10,153 மனுக்கள் பெறப்பட்டன.

ஆறாம் நாளான நேற்று மனுக்கள் வழங்க, அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.

மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். எனவே, கடைசி நேரத்தில் வருபவர்களுக்கும், வாய்ப்பளிக்கும் வகையில் ‘டோக்கன்’ கொடுத்து மனுக்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மனுக்கள் பரிசீலனை நாளை நடக்கிறது.

மனுக்களை திரும்ப பெறுவதற்கு, வரும் 7-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

You might also like