– சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2019-2021ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “கொரோனா ஊரடங்கு காரணமாக பல நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்தன. இதனால் உரிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே எங்களுடைய உரிமம் காலத்தை நீட்டிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது, “டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி என்றும் பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும்.
மேலும், பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது. மதுபான விற்பனை சட்டத்தின்படி பார்களை நடத்துவதற்கான அனுமதியை டாஸ்மாக் நிர்வாகம் வழங்க முடியாது.
அத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த சட்டம் அனுமதிக்கவில்லை. டாஸ்மாக் கடை அருகே உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது”
-என்று கண்டிப்புடன் கூறிய நீதிபதி, டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தார்.