– நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆவேசம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் தொடங்கியது. அவர் தனது உரையில் ஒன்றிய அரசின் சாதனைகளை பட்டியலிட்டுப் பேசினார்.
இதன்பின் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தின்போது 2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடந்தது.
கொரோனா வழிகாட்டுதலின்படி, மாநிலங்களவை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இரு பிரிவாக நடத்தப்பட்டது.
இதில், இரு அவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டனர்.
மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, “துரதிர்ஷ்டவசமாக, குடியரசுத்தலைவர் உரையானது அரசு செய்ததாகக் கூறும் விஷயங்களின் நீண்ட பட்டியலாக இருந்தது. உண்மையில் நாம் பார்க்க விரும்பும் ஆழமான சிக்கல்களைத் தீர்க்கும் யுக்திகளை அது கொண்டிருக்கவில்லை.
இது தலைமைத்துவத்தின் பார்வை அல்ல, மாறாக எதையாவது காகிதத்தில் எழுதிக் கொடுக்கும் அதிகாரிகள் குழுவால் எழுதபட்டதாகவே தோன்றுகிறது.
குடியரசுத் தலைவர் உரையில் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு 27 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. ஆனால், 23 கோடி பேரை மீண்டும் நீங்கள் வறுமைக்கு தள்ளிவிட்டீர்கள்.
இப்போது நீங்கள் இரண்டு இந்தியாவை உருவாக்கி விட்டீர்கள். ஒன்று பணக்காரர்களுக்கானது, மற்றொன்று ஏழைகளுக்கானது.
நாட்டின் 40 சதவீத செல்வம் அதானி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில பணக்காரர்களிடம் மட்டுமே குவிந்திருக்கிறது. 84 சதவீத மக்களின் வருமானம் குறைந்து வறுமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு இந்தியாவில் பணக்காரர்கள், அபரிமிதமான செல்வம், அபரிமிதமான அதிகாரத்துடன் வாழ்கின்றனர். அவர்களே நாட்டின் இதயத்துடிப்பை கட்டுப்படுத்துகின்றனர். மறுபுறம் பல்வேறு இன்னல்களுடன் ஏழைகளுடன் வாழ்கின்றனர்.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை உடனடியாக தடுக்க வேண்டும். பிரதமர் மோடி அனைவருக்குமான ஒரே இந்தியாவை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என அரசு பல்வேறு திட்டங்களை கூறுகிறது. ஆனால், இந்த திட்டங்களில் எல்லாம் பயன் பெறுவது சில பணக்காரர்களும், அவர்களின் பெரு நிறுவனங்களும் மட்டுமே. சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு எந்த மேக் இன் இந்தியா திட்டமும் ஆதரவு தருவதில்லை.
அமைப்புசாரா துறை முற்றிலும் அழிக்கப்பட்டு, அந்த இடத்திலும் பணக்காரர்கள் ஆக்கிரமிக்கின்றனர். சிறு, குறு தொழில்கள் அழிந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல், புதிய இந்தியா ஒருபோதும் சாதிக்க முடியாது.
நீங்கள் வேலைவாய்ப்பை வழங்குவதாக பேசுகிறீர்கள். ஆனால், 2021ல் மட்டும் 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை நாடு இன்று சந்தித்து வருகிறது.
2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கி வந்துள்ளார். இன்று நீதித்துறை, தேர்தல் ஆணையம், பெகாசஸ், இவை அனைத்தும் மாநிலங்களின் குரலை அழிக்கும் கருவிகளாகி விட்டன.
இந்தியாவை ஆள பரஸ்பரம் ஆலோசனை, புரிந்துணர்வு தேவை. ஒவ்வொரு மாநிலத்திடமும் அனைவர்களுக்கு தேவையானவற்றை கேட்டு செய்ய வேண்டியதே மத்திய அரசின் கடமை.
தமிழ்நாட்டிடம் சென்று நீங்கள் என்ன வேண்டும் என கேட்க வேண்டும். அவர்கள் சொல்வார்கள். அதை செய்ய முயற்சிக்க வேண்டும். நீங்கள் மகாராஜா இல்லை. இதை மறந்து விடாதீர்கள்.
இந்த விவகாரத்தில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பாஜக வாழ்நாளில் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது. உங்களுக்கு என்ன கற்பனை இருந்தாலும் அது நிறைவேறாது. தமிழகத்தைச் சேர்ந்த மக்களுக்கு தமிழ் தான் முக்கியம். முதலில் தமிழர்கள். பிறகுதான் இந்தியர்கள்.
ஒரு தேசமாக நீங்கள் எங்கள் பேச்சைக் கேட்பது முக்கியம். அதைப் பற்றி நீங்கள் யோசிக்காமல் கூட இருக்கலாம். ஆனால், நாங்கள் யோசிக்கிறோம். நாங்கள் சொல்வதைக் கேட்டு எங்களைப் பயன்படுத்துங்கள். ஏதேனும் நடந்தால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு” என ஆவேசமாகப் பேசினார்.
மக்களவையில் பேசிவிட்டு வெளியே வந்த ராகுல் காந்தியிடம், “தமிழகத்தைப் பற்றி அதிகமாக பேசியது ஏன்?” என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, “நான் தமிழன் தான்” என்று பளிச்சென்று பதில் அளித்தார்.
03.02.2022 1 : 40 P.M